(Reading time: 4 - 8 minutes)

02. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

ஹாய்.. friends.. போன எபிசொட் படிச்சுட்டு கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

அடுத்து நான் காற்றினிலே வரும் கீதம் பாடல் எடுத்துகொள்ள காரணம் அந்த பாடல் வரிகள் தான். என்ன ஒரு அற்புதமான வரிகள்.. அதற்கு உயிர் கொடுத்த எம்.எஸ். அம்மாவின் குரல்...

நான் இதுவரைக்கும் இந்த பாடலை எம்.எஸ். அம்மா குரல் என்பதால் கேட்டிருக்கிறேன். இதை பற்றிய தகவல்கள் தேடும் போது தான் .. இந்த பாடலை இயற்றியவர் சரித்திர நாவல் நாயகன் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி தான் என்பது தெரிந்து கொண்டேன். எப்படி தலைமுறைகளை தாண்டி கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் படிப்பவர்களை பரவசப்டுதுகிறதோ, அதே போல் அவர் இயற்றிய இந்த பாடலுக்கு எம்.எஸ். அம்மாவின் உயிரோட்டமான குரலும் தலைமுறைகளை தாண்டி நம்மை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது,

1945 ம் ஆண்டு வெளிவந்த மீரா திரைபடத்தில் திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் & திரு கே.வி. நாயுடு அவர்களால் இசைக்கப்பட்டு நமது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா அவர்களால் பாடப்பட்டது.

மீராவில் இடம் பெற்ற பாடல்களில் முதன்மை ஸ்தானம் வகிப்பது "காற்றினிலே வரும் கீதம்" தான். கல்லும் கசிந்து உருகும் வண்ணம் எம். எஸ். அவர்கள் அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.

இந்த பாடலை பற்றிய சில விவரங்கள் நான் தேடிய போது கிடைத்த தகவல்கள் இதோ நாம் தெரிந்து கொள்ள :

"ஆ. என் சொல்வேன் மாயப் பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்" என்ற வரிகளில் முதலில் வரும் "ஆ" என்ற ஒற்றைச் சொல்லில் எம்.எஸ். அவர்கள் வெளிப்படுத்தும் பாவம்.... அதை வருணிக்க வார்த்தைகளே இல்லை. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டு ஒரு "இரவல்" மெட்டு என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் .. உண்மை அதுதான்.

அந்தக் காலத்தில் வங்காளத்தில் "ஜூதிகா ராய்" ஒரு பிரபலமான பாடகி. அவரது ரெக்கார்டுகள் அந்த நாளில் தென்னகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. அவர் பாடி நாடெங்கும் பிரபலமான ஒரு பாடலின் மெட்டு அமரர் கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக அவர் எழுதிய "காற்றினிலே வரும் கீதம்" பாடலை அந்த மெட்டிலேயே அமைக்கும்படி இசை அமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனிடம் கேட்டுக்கொண்டார். அந்த மெட்டை அப்படியே தழுவி விடாமல் அதில் சிற்சில மாற்றங்களை செய்து எம்.எஸ். அவர்கள் பாடுவதற்கு ஏற்றபடி அமைத்துக்கொடுத்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். இன்று ஜூதிகா ராய் அவர்கள் பாடிய பாடல் இல்லை. ஆனால் எம்.எஸ். அவர்கள் பாடிய "காற்றினிலே வரும் கீதமோ" தலைமுறைகளைக் கடந்து அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது

“கர்நாடக இசையை பொறுத்தளவில் ஒவ்வொரு ஆட்களுக்கும் தக்கபடி ரசனையும் விருப்பமும் மாறுபடும். மதுரை மணி ஐயரை விரும்புவார்கள் சிலர். எம்.டி.ராமநாதனை விரும்புவார்கள் சிலர். ராகத்தில் கற்பனை கலந்து தன் பாடல்களை வெளிப்படுத்துபவரை அதிகம் விரும்புவார்கள் சிலர்.. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குறும்பாடல் வரிசைகளை விரும்பாத இசைப்பிரியர்களே இருக்கமாட்டார்கள் என சொல்லிவிடலாம். அந்தளவுக்கு துக்கடா பாடுவதில் பெரிய திறமை உள்ளவர் எம்.எஸ். இசையைப் பொறுத்தவரை அதற்கு அதிக ஆகிருதி வேண்டும். அந்த ஆகிருதி நிரம்பியவர் சுப்புலட்சுமி என்பதில் சந்தேகமில்லை. அவரது குரலால் இசைக்குள் ஒரு பக்தி மணத்தை பரப்பிவிடுவதில் வல்லவர் அவர். சங்கீதத்தை தாண்டி பக்தியின் உபாசனையை உள்ளே கொண்டு வந்து உட்கார வைத்துவிடுவார். மீரா படத்தில் மறவேனே எந்நாளிலும் பாடலுக்கு முன் கண்ணா, கருணைக் கடலே என்ற வசன வரிகள் வரும். அந்த வசனம் தொடங்கும்போதே இசையும் தொடங்கிவிடும். பரஸ் ராகத்தில் அபூர்வமாக விளையாடியிருப்பார். மிக அற்புதமான பாட்டு.

இசை நுணுக்கங்கள், முறையான பயிற்சிகள் இல்லாமல் ஒருவனால் கர்நாடக இசையை ரசிக்க முடியாது. அதை உடைத்து பாமரனையும் கர்நாடக இசையை ரசிக்க வைத்ததில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பெரும் பங்குண்டு “ என்கிறார் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்.

கல்லும் கரையும் கீதமான காற்றினிலே வரும் கீதம் .. கேட்டு மகிழ்வோம்.


காற்றினிலே... வரும் கீதம் காற்றினிலே

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்

கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்

பண்ணொளி பொங்கும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்

மதுர மோகன கீதம்


நெஞ்சினிலே நெஞ்சினில்

இன்பக் கனலை எழுப்பி

நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்

வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்

ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை                                 

 

வேய்ங்குழல் பொழி கீதம் காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்

நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்

காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 01

Geetham... Sangeetham - 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.