(Reading time: 4 - 7 minutes)

மரியாதை இனி மலரும்... - ஷஃப்ரின்

இக்காலத்தில் மக்கள் மனதார மற்றவர்களுக்கு கொடுப்பது அல்லது வெறும் வாயால் மட்டும் கொடுத்து பதில் பெற்றுக் கொள்வது. நம்மிடம் எவ்வளவு தான் பணம் கோடி கோடியாய் கொட்டி இருந்தாலும் சில விஷயங்களை பணத்தால் வாங்க முடிவதில்லை, அதில் ஒன்றுதான் மரியாதை. ஆனால் அதையெல்லாம் இப்பொழுது பணம் இருந்தால் மற்றவர்களிடம் இருந்து சுலபமாக வாங்க முடியும் என்கிற சூழ்நிலை வரும்பொழுது ஏதோஒரு விதத்தில் அந்த விஷயத்தை நம் மூளை ஏற்றுக்கொண்டாலும் நம் மனதால் அதை நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை.

        மனிதர்களுக்கு நாம் கொடுக்கின்ற மரியாதை இந்த உலகத்தில் இரண்டே விதம் மட்டும் தான் இருக்கிறது: அது மனதார வாய்ச் சொல்லால் கொடுப்பது, மற்றொன்று செயல் மூலமாக காண்பிப்பது. பொதுவாக இந்த மரியாதையை நாம் யாரிடம் இருந்தெல்லாம் நாம் எதிர் பார்க்கின்றோம் என்றால் நம் வீட்டில் உள்ளவர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர்கள் மற்றும் சமூகம்.

        இதில் பெண்களுக்கு நாம் இதுவரை கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க வேண்டிய மரியாதைதான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். மற்றவர்கள் நம்மீது எவ்வளவு மரியாதை வைத்து இருக்கின்றார்கள் என்பதை வைத்துத்தான் நமக்கு நம்மீதே சுயமரியாதை வரும்.

        மரியாதை என்கிற இந்த வாக்குவாதம் இப்பொழுது ரொம்ப முக்கியமா? என்று நீங்கள் என்னை கேட்டால், சக மகளிர்களுக்கு சமூகத்தில் மரியாதை அவசியம்தான் என்று உங்கள் அடிமனம் உங்களிடம் சொன்னால்… உங்களுக்கு என்னுடைய சலாம். சாதாரனமாக நம் வீட்டிலேயே பெண்களுக்கு என்ன மரியாதையென்பது அவர்களின் ஆரம்ப பருவத்திலிருந்தே  வகைப்படுத்தலாம்.

        பள்ளயோ கல்லூரியோ செல்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர்கள் வேலைகளை செய்வதற்க்கு தான் நேரம் சரியாக இருக்கும் அதனால் மற்றவர்கள் எந்த கஷ்டங்கடளையும் அதீத வேலைகளையும் அவர்கள் மீது சுமர்த்துவது இல்லை, இங்கு அவர்களுடைய எந்த மரியாதையும் சுயமரியாதையும் குறைவதற்கு வாய்ப்பில்லை.

        இதுவே அவர்கள் படித்து முடித்து திருமணம் ஆகும் வரை வீட்டில் வேலையில்லாமல் இருக்கும்போதோ அல்லது திருமணம் ஆனபின் வேறு வீட்டுக்கு சென்றபிறகோ ஏதோ ஒரு காரியத்தில் அவர்கள் ஏதேனும் சிறு தவறு செய்து விட்டால்…. முடிந்தது கதை… “தெண்டச் சோறு, பூமிக்கு பாரம், எந்த வேலைகளையும் செய்ய உருப்பிடாதவள், யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, உயிரோடு இருந்து உயிரை வாங்குவதற்கு பதிலாக கிணற்றில் குதித்து சாகலாம்”.

        இப்படிப்பட்ட பல பேச்சுக்களை பெண்கள் கடந்தாக வேண்டும். இந்த கட்டத்தில்தான் அவர்களுக்கே உரிமையான மற்றும் கிடைக்க வேண்டிய மரியாதை பேச்சிலும், செயலிலும் குறைக்கப்படுகிறது. சுயமரியாதை என்கிற தீர்க்கமான வார்தை அர்த்தமற்றுப் போகிறது. நம்பிக்கை கரைந்துப் போகிறது. அவர்களுடைய பலவருட கனவுகள் சில நாட்களில் தொலைந்துப் போகிறது.

        ஆண்களை உண்மையிலேயே இறைவன் எதையும் தாங்கும் இதயமாக படைத்திருக்க வேண்டும் அதனால்தான் அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் எப்படிப்பட்ட நிலையிலும் திரும்பவும் எழுந்து நிற்க்கும் தைரியம் கிடைக்கிறது.

        இப்பொழுதுதான் பெண்கள் எல்லா தறைகளிலும் சாதிக்கின்றனறே என்கிற பொதுவான கருத்து உங்கள் அறிவில் தோன்றலாம், ஆனால் நேர்மையான உணமையான கருத்து என்னவெனில் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் அவர்களின் கனவுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதையின் துல்லியமான பதில் உங்கள் கண்முன்னே உங்கள் வீட்டிலேயே இருக்கின்றது.

        நான் ஆணாதிக்கத்தை பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெண்களின் மரியாதையை பற்றி பேசுவதால் நான் பெண்ணியவாதி என்று நினைப்பதும் தவறு. ஆணாயினும் பெண்னாயினும் அவர்களுடைய உரிமை, மரியாதை என்பது எப்பொழுதும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதே தவிர பறிக்கப்பட வேண்டியது இல்லை.

        மாற்றம் மட்டுமே இவ்வுலகில் என்றும் மாறாதது. அந்த மாற்றத்தை நாம் மற்றவர்களிடம் முதலில் எதிர்பார்ப்பது அறியாமை. மாற்றம் முதலில் நம்மிடமிருந்தும் நம் குடும்பத்திலிருந்தும் தான் ஆரம்பித்தல் வேண்டும். அதன் பிறகே பெண் சாதனையாளர்கள் பட்டியலின் குறைபாட்டினை பற்றி நாம் நம் நாட்டினை குறை கூற முடியும்.

        நல்ல காரியம் செய்ய நேரம், காலம், சூழ்நிலை, வானிலை அறிக்கையெல்லாம் பார்க்க வேண்டுமா என்ன? இப்பொழுதே ஆரம்பிக்கலாமே!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.