(Reading time: 3 - 6 minutes)

கோவிலுக்கு போகும் போது...

Temple

கோவிலுக்கு  போகும் போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்று ஒரு பெரியவர் என்னிடம் சொன்னதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1 கோவிலுக்கு செல்லும் முன் குளித்துவிட்டு, மிக சாதாரண உடையை       அணிந்துக்கொள்வோம். பகட்டான ஆடை, நகைகளை தவிர்த்து விடுவோம். இறைவன் முன்னால் எளிமையாகவே இருப்போமே.

2 கோவிலுக்கு செல்லும் முன் நம் பூஜையறையில் இருக்கும் நம் வீட்டு தெய்வத்தை வணங்கி விட்டு தான் செல்ல வேண்டும்.

3 முடிந்தால் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்று விடலாம், முடியாவிட்டால் கோவில் வாசலில் அதை அணைத்து விட்டு உள்ளே செல்வோம்.

4 கோவில் வாசலில் செருப்பை கழற்றி விட்டு செல்லும்போது நம் கோப தாபங்கள், வெறுப்புகள் எல்லாவற்றையும் செருப்பின் மீதே விட்டு செல்வோம். கோவிலுக்குள் இருக்கும் அந்த பத்து நிமிடம் அவை எல்லாம் நம்முடன் இருக்க வேண்டாமே.

5 கோவிலுக்குள் அடி எடுத்து வைத்த அந்த நிமிடத்தில் இருந்து, வெளியே வரும் நிமிடம் வரை யாருடனும் பேசுவதை தவிர்ப்போமே. அது நமக்கும் நம்மை படைத்தவனுக்குமான தனிப்பட்ட நேரம். அப்போது நம் இருவருக்குமிடையே வர வேறு யாருக்கும் அனுமதி வேண்டாமே.

6 கோவிலை விட்டு வெளியே வரும் வரை நமக்கு தெரிந்த ஸ்லோகங்களை, சத்தமில்லால் நம் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கட்டும். அப்போது எந்த ஸ்லோகமும் நினைவுக்கு வரவில்லை என்றால் 'ராம' நாமத்தையோ, 'நமச்சிவாய' நாமத்தையோ உச்சரித்துக்கொண்டே இருப்போம்

7 'த்வஜஸ்தம்பம்' எனப்படும் கொடி மரம் முன்பாக விழுந்து வணங்க வேண்டும். அவசர படாமல் அதற்கென்று ஒரு அரை நிமிடம் செலவழித்து 'தெண்டம் சமர்ப்பித்து' என்பார்களே, அது போலே நம்  அகந்தைகளை அங்கே சமர்ப்பித்து விட்டு வணங்க வேண்டும்.

8 வரிசையில் நிற்கும் போதும் நம் உதடுகள் இறைவன் நாமத்தை உச்சரித்த படியே இருக்கட்டும், வரிசையில் யாரவது முறையற்று நம்மை கடந்து சென்றாலும் நாம் கோபப்பட வேண்டாம். இறைவன் நாமத்தை இன்னும் பத்து முறை கூடுதலாக உச்சரிக்க ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொள்வோம்.

9 சன்னதியில் திரை போட பட்டிருந்தால் எட்டிப்பார்க்க கூடாது. இறைவனின் தனிமையை தொந்தரவு செய்ய நமக்கு உரிமை இல்லை. திரை விலகும் வரை பொறுமையாக காத்திருப்போம்.

10 இறைவனை வணங்கும் போது நேரடியாக முகத்தை பார்க்க கூடாது. 'பாதாதி கேசம்' என்பார்களே அது போலே நம் பாவங்களை அவன் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு. பாதம் துவங்கி, சிரம் வரை இறைவனின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து வணங்க வேண்டும்.

11 நம் தேவைகளை நாம் சொல்லாமலே தெரிந்துக்கொள்பவன் தான் இறைவன். அதனால் கோவிலில் சென்று அர்ச்சனை செய்தே ஆக வேண்டுமென்ற காட்டாயம் இல்லை. அப்படியே செய்தாலும் அர்ச்சனை செய்யும்போது நம் பெயரில் செய்வதை விட இறைவன் பெயரில் அர்ச்சனை செய்வது தான் முறை.

12 பிரசாதம் ஏதாவது கொடுக்கப்பட்டால் கோவிலுக்கு வெளியே வந்து சாப்பிடுவோம். அங்கே பிரசாதத்தை சிந்தி கோவிலின் தூய்மையை கெடுப்பதை தவிர்க்கலாமே.

13 இறைவனை வணங்கி விட்டு இறைவன் நாமத்தை உச்சரித்த படியே பிராகாரத்தை வலம் வர வேண்டும்.

14 அதை முடித்து விட்டு சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு அமர வேண்டும். நாம் இறைவனை வணங்கி பெற்ற அந்த சந்தோஷத்தை நம் மனம் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் நிமிடங்கள் அவை.

இந்த பழக்கங்களை தொடர்ந்து பத்து நாள் கடைப்பிடித்து பார்ப்போமே. பதினோராவது நாள் நாம் கோவிலை விட்டு வெளியே வந்து நம் செருப்பை அணியும் போது கண்டிப்பாக அதை உதறி விட்டுதான் அணிவோம். நாம் உள்ளே செல்லும் போது அதன் மீது விட்டு சென்ற கோபதாபங்களும், வெறுப்புகளும் கோவிலின் வாசலிலேயே உதிர்ந்து போய், மனம் நிம்மதியை நோக்கி செல்ல துவங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.