(Reading time: 8 - 16 minutes)

பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 01 - தங்கமணி சுவாமினாதன்

Kabir Das

வர் பெயர் தமால்.முஸ்லீம் மதத்தவரான அவர் காசியில் நெசவுத்தொழில் செய்து ஜீவனம் நடத்தி வந்தார்.

மனைவி ஜிஜ்ஜாபீபீ.செய்யும் தொழில் மூலம் சொற்ப வருவாயே கிடைத்தாலும் அந்த வருவாயிலும் அன்றாடம் ஏழைப் பக்கிரிகளுக்கு உணவளித்த பின்தான் இவர்கள் உணவு உண்பார்கள்.இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லாதது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.வயது ஆக ஆக இனி தங்களுக்குப் பிள்ளை பாக்கியம் கிடைக்காது என முடிவுக்கு வந்தனர்.அதனால் மிகுந்த வருத்தத்தோடு வாழ்க்கை நடத்தினர்.

ஒரு நாள் தமால் வீட்டிற்கு பக்கிரி ஒருவர் உணவுண்ண வந்திருந்தார்.வயிறார அவருக்கு உணவு படைத்தார் ஜிஜ்ஜாபீபீ.திருப்தியாய் சாப்பிட்ட அந்த பக்கிரி விடைபெற்றுச் செல்லும் போது நீங்கள் செய்யும் இந்த அன்னதானம் உங்களோடு நின்றுவிடாது இதைத் தொடர்ந்து நடத்த உங்களுக்கு ஒரு மகன் வருவான் என்று சொல்லிச் சென்றார்.

தமாலும் அவர் மனைவியும் மனதிற்குள் சிரித்துக்கொண்டனர்.இந்த வயதான காலத்தில் இதற்கு மேல் நமக்குப் பிள்ளைப் பேறு கிட்டுவது எவ்வாறு சாத்தியம் பக்கிரி ஏதோ சொல்லிவிட்டுச் செல்கிறார் என்று நினைத்தார்கள்.ஆனால் பக்கிரி உங்களுக்கு ஒரு மகன் வருவான் என்றுதானே சொன்னார் பிறப்பான் என்று சொல்லவில்லையே..?இது அவர்களுக்குப் புரியவில்லை.வருவான் என்பதை பிறப்பான் என அர்த்தம் கொண்டு அது சாத்தியமில்லை என நினைத்தார்கள்.ஆனால் யார் மூலமோ கடவுள் சொன்ன செய்தி எப்படிப் பொய்யாகும்?பக்கிரி ஆசிர்வதித்துச் சென்ற வார்த்தை நிஜமாகும் நாள் வந்தது.

தினசரி தமால் நெசவு செய்யவேண்டிய நூல்கட்டை கங்கை நதியில் அலசி எடுத்து வருவது வழக்கம்.

அனறும் அதுபோலவே நூல்கட்டை கங்கையில் நைனைத்து அலசி எடுத்து வரச் சென்றார்.அப்போது இவரது கவனக் குறைவால் நூல்கட்டு பொங்கிப் பிரவாகித்து சுழித்து ஓடும் கங்கையின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்ல ஆரம்பித்தது.தவித்துப்போன தமால் நூல்கட்டைப் பிடிக்க தண்ணீர் போகும் போக்கிலேயே தானும் தொடர்ந்தார்.ஒரு கட்டத்திற்குமேல் அவரால் மிக வேகமான கங்கையின் நீரோட்டத்திற்கேற்ப செல்ல முடியவில்லை.ஓரிடத்தில் நின்றுவிட்டார்.அப்படி அவர் நின்ற இடம் மரங்களடர்ந்த சிறு காடுபோன்ற இடம்.

நீரில் மிதந்து சென்ற நூல்கட்டு தமாலின் கண்களைவிட்டு அகன்று வெகு தூரம் போய்விட்டது.ஐயோ இது என்ன சோதனை.நூல்கட்டு இன்றி வீடு சென்று என்ன பயன்?இன்றைய பிழைப்பு போயிற்றே என மனதிற்குள் வருந்திப் புலம்பினார் தமால்.பேசாமல் இங்கேயே இருந்து இறைவனை நினைத்து தியானம் செய்தபடி இருந்து விடலாம் எனத் தோன்றியது அவருக்கு.மனிதன் நினைத்தபடியே அனைத்தும் நடந்துவிடுமா என்ன?எல்லாம் இறைவன் எண்ணப்படிதானே நடக்கும்?

பகவான் ஸ்ரீ நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து இப்பூமியில் பிறந்தவரல்லவா?அவருக்கு பூமியிடத்தும் அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிடத்தும் மிகுந்த பிரியம் உண்டுதானே?படைப்பதும் படைத்துக் காப்பதும் அந்த பரந்தாமனல்லவா?பூமியில் தெய்வ பக்தி குறைந்து இன மத சண்டைகள் மக்களிடையே பெருகுவதைக் கண்ட பகவானுக்கு தன் பக்தன் ஒருவனை பூமிக்கு அனுப்பி பக்தினெறியைப் பரப்பி மக்களை நல்வழிப்படுத்த வேணும் என்ற விருப்பம் ஏற்பட்டது.அப்பொது அவரின் எதிரே சுகப்பிரம்மம் நின்று கொண்டிருந்தார்.அவரையே பூமிக்கு அனுப்பி பக்திமார்க்கத்தை பரப்பச் செய்ய எண்ணினார் ஸ்ரீமன் நாராயணன்.தன் விருப்பத்தை சுகப்பிரம்மத்திடம் கூறினார் பகவான்.

பகவானின் பேச்சைத் தட்ட முடியுமா?ஆனாலும் பகவானிடம் ஒன்றை யாசித்தார் சுகப்பிரம்மம்.அதாவது தான் ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறக்கக் கூடாது என பகவானை வேண்டினார்.பக்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பகவான்.

சுகப்பிரம்மா..பூமியில் தமால் எனும் பெயர் கொண்ட இஸ்லாமிய பக்தர் ஒருவர் இறை தியானத்தில் ஒரு காட்டில் அமர்ந்திருக்கிறார்.அவருக்குப் பிள்ளை இல்லை.என்னால் பக்கிரி ஒருவரால் அவருக்குப் பிள்ளையொருவன் வருவான் என்று சொல்லப்பட்டது.அதன்படி நீ அவனெதிரில் ஒரு குழந்தையாய்க் கிடப்பாயாக.நீ உன் விருப்பப்படியே ஒரு தாயின் வயிற்றில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

நீ பூமியில் பக்தி நெறியைப் பரப்புவாயாக என்று அருளினார்.

ஸ்ரீமன் நாராயணனை வணங்கிவிட்டு ஒர் குழந்தையாய் கண்மூடி இறை தியானத்தில் அமர்ந்திருந்த தமாலின் அருகே கிடந்தார் சுகப்பிரம்மம்.குழந்தை வீரிட்டழுதது.குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தியானத்திலிருந்த தமால் கண்களைத் திறந்தார்.அந்த நடுக்காட்டில் இவ்வளவு தேஜஸான குழந்தையொன்று கிடப்பதைக் கண்டு அதிசயித்தார் தமால்.சுற்றும் முற்றும் பார்த்தார்.யாரும் தென் படவில்லை.யாரின் குழந்தையாக இருக்குமோ என்று அங்குமிங்கும் தேடிப்பார்த்தார்.யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.குழந்தை பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது.தமாலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை.பசியால் குழந்தை அழுகிறது போலும் என நினைத்தார்.அந்தக் குழந்தையையை வாரி எடுத்து தன்னோடு அணைத்துக்கொண்டார்.விடுவிடுவென வீடு நோக்கி நடந்தார்.இறைவனும் அதைத்தானே விரும்பினார்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.