(Reading time: 1 - 2 minutes)

 

விழிப்பு

 

சன்னலோரம் அமர்ந்திருக்கும் கண்கள்

நிலைக்குத்தி நிற்கும்

பருவ வெய்யிலில் நனைந்து களிக்கும்

சின்னஞ் சிறிய பறவை மீது

 

விழிப்பு, கனவு, உறக்கம் மூன்றுமற்ற

புதிர் வெளியில் இருந்து

ஆழ்மனதின் நகலொன்று புகைபோல

அறையெங்கும் பரவுகிறது

விடுதலையின் நறுமணத்தை நுகர்ந்தவாறே

வேடிக்கை பார்க்கிறது

சலனமற்ற கண்களையும் வியர்வை

வழியும் பழகிய உடலையும்

 

அதோ அந்தப் பறவை அழைக்கிறது

தடுப்புகள் இல்லாத சமவெளிக்கு

அங்கு பறவைகள் பறப்பதில்லை

மனிதர்கள் நகர்வதில்லை

தன்னிச்சையாக மிதக்கும் அருவங்களிலான

அவ்வெளி அச்சம் தரக்கூடியது

 

கடிகாரத்தின் 'டிக்' 'டிக்' ஓசையில்

ஆழ்மனதின் நகல் கரைய

உண்மை மனம் தனது இருப்பைப்

புதுப்பித்துக் கொள்கிறது

 

மனதின் இயக்கம் உடலை உலுக்க

கண்கள் நகரத் துவங்குகின்றன

இரை துரத்திக் கொண்டிருக்கும்

ஓணானை நோக்கி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.