(Reading time: 3 - 5 minutes)

பெண்மைகவிதை போட்டி - 19 - சரண்யா

வீர வாளேந்தி போர்புரியச் சென்ற கனிகை

    போர்க்களத்தில் மாண்ட தன்மகனைப் பார்த்து

வீரசபதம் உரைத்த வீரத்தாய்!

 

யூகோஸ்லாவியாவில் பிறந்து நமது தாயகம்

    வந்து ஏழை,எளியோருக்குத் தொண்டாற்றிய அன்னை!

 

தன் சொந்த விருப்பு,வெறுப்புகள் மறந்து

    தாயகம் காக்கும் ராணுவ மங்கை!

 

குழந்தையின் கண்ணில் சிறுதுளிநீரைக்

    காணச் சகியாது மனதில் 

குருதி கசிவதைப் போல் தவிக்கும் தாய்!

 

என்றும் புன்னைத்துத் தோழமையுடன்

   கைகோர்க்கும் தோழிகள்!

சிட்டாய்ச் சிறகடித்துப் பறக்கும் - சிறார்களைத்

   தன் கண்ணெனக் கருதும் கலைமணிகள்!

 

அன்று அரசாண்டதும், இன்று 

       நாடாள்வதும் அரசியாகப்

பெண்ணெனப் பிறப்பின் 

       அனைத்தும் சாத்தியமா?

அனைத்தும் சாத்தியம் பெண்ணால்

       என்பது சத்தியமோ!!!

 

நாட்டைக் காப்பதில் ராணுவத் தாய்

       வீட்டைப் போற்றிக் காப்பதில் ஆசைத்தாய்!

கானகம் சென்றாலும் சாகசம்

        கணினியில் நிகழ்த்துவதும் அற்புதம்!

 

தாய்வீட்டில் மகள் ஆகிறாள், புகுந்த வீட்டில்

     மருமகளாகிறாள் - மறு மகளாகத் தன் மாமியாருக்கு!

 

இளம் மொட்டுதனைத் தன் வயிற்றில்

     பத்துத் திங்கள் தன் கண்ணின் மணி போலக் காக்கிறாள்!

மொட்டவி்ழ்ந்து பூவாக மலர்ந்து மணம் 

     வீசுகையி்ல் தன் உயிராய்க் காக்கிறாள்!

தன் இளம் பிஞ்சு வாயில் உதிர்க்கும் புன்னகையில்

     தன்னுள் பொங்கும் உவகையில் மெய்சிலிர்பபாள்!

 

கணவனுக்கு மறு தாய், உற்ற துணையாய்

     வாழ்வின் இறுதி வரை என்றும் தாய்மை பொங்க!

 

வீட்டிலும் இவளது ஆட்சி, விண்வெளியிலும்

       இவளது  காட்சி, என்றும் நிறைவாய்!

பெண்ணியம் பேசாது கண்ணியமாக இருக்கிறாள் - இவளது

      பெண்மைக்குப் பங்கம் வந்தால் - ருத்ர

தாண்டவமாடும் காளி ஆகிறாள்!

      கண்குளிர, அன்பு தழைத்தோங்க

பண்புச் செழிப்பில் சாந்த சொரூபிணி இவள்!

      சீண்டுவோருக்கு இவள் சீறிப்பாயும் பாம்பு

வாழ்வில் தடைகளைத் தகர்த்தெறியும் நதியாகிறாள்!

      இவளது கோபம் கூட சுகமாகும் இவளின் கொஞ்சலில்!

 

என்றும் குரலில் இருக்கும் இனிமை பல

       குயில்கள் கூவி இசை பாடும்!

கிள்ளை மொழிப் பேச்சில் அனைவரின்

       துயர் தீர்க்கிறாள் தீப ஒளியாக!

 

இவளது கண்ணீர்த் துளியும் பல

        கவிதைகள் பேசும்!

இவளது நெஞ்சுரத்திற்கு என்றும் ஈடில்லை - பிறர்

        உள்ளம் கொள்ளை கொள்வதில் வாஞ்சை மிகுந்தவள்!

 

மாநிறமாக இருந்தாலும், சிலை நிறமாக இருந்தாலும் 

         இவளது மனதின் நிறம் வெண்மை - இவை 

அனைத்தின் காரணம் இவளுள்  இருக்கும் பெண்மை - பெண்

     நாணிக் கண் புதைத்தலும் அழகு, துளிர் 

நடையிட்டு மின்னலாகச் செயல்பட்டாலும் அழகு!

 

பெண்மை என்றும் மாறாதது காலங்கள்

      எவ்வளவு தூரம் மாறினாலும்-பெண்ணின்

குணம் பெண்மைக்கே உரித்தானது, உயிர் 

      பிரிந்தாலும் ஆன்மாவில் பிரியாதது!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.