(Reading time: 2 - 3 minutes)

பெண்மை - அனு.ஆர்

மானிடத்தை இகம்

காணச் செய்ய

மரித்து உயிர்ப்பதில்

தெய்வத்தின் சாயல்

 

வீட்டை

கூடாக்குவதும்

கூண்டாக்குவதும்

இவளது

கையில்.

 

உள்ளம் காட்டாறு

இவள்

ஆணுக்கு இணைகோடு.

 

தாயாய்

தமக்கையாய்

தங்கையாய்

ஆண் உலகத்தை

பங்கிட்டு பாகம் பிரித்து,

தலைவியாய்

உயிர் காதலியாய்

மனைவியாய்

கோலேச்சும்

மன சாம்ராஜ்ய

சக்கரவர்த்தினி.

 

கொண்டவனும் ஆள

கோட்டை வேண்டுமென

வேலை, சோலை

மாலைகளை

விட்டுகொடுக்கும்

வீட்டரசி.

 

வாளெடுத்து போராடி

வெற்றி பெறும் தேவை

இவளுக்கு இல்லை

புத்தியே போதும்

நினைத்ததை முடிக்க

நாவரசி.

 

ஆனாலும்

ஆணோடு தோன்றி

ஆணோடு வாழ்ந்தாலும்

அவனின் ஆசைகள்

இவளுக்கு இல்லை.

 

மண்ணிலிருந்து

வந்தானாம்

முதல் மனிதன்

மண்ணை ஆளும்

ஆசை

அவனுக்கு.

 

அவனிலிருந்து

வந்தாளாம்

பெண்.

அவனை ஆளும்

ஆசை

இவளுக்கு.

 

இயற்கை இது.

 

இயற்கையின்

விதிகளை

மீறுவது

அறிவின் இயல்பு.

 

விதி மீறிய

இலக்கண பிழைகள்

நல் இலக்கியமாவதுண்டு.

 

பதி தேடாமல்

பார் ஆள்வதும்

பரமனே வேண்டுமென்று

பாலை வனத்தில்

பால் வார்க்கும்

தெரசாக்களும்

அவ்வகை.

 

தன் இனத்தை தான் கொல்லா

மற்றவை

மனிதன் மட்டும் விதிவிலக்கு.

அம் மானுடத்தின் சரி பாதி

பெண்மை.

 

மறுத்த

காதல்

அமிலாபிஷேகம்.

மங்கையின்

மாங்கல்யம்

கொல்லப்பட காரணம்.

 

உயிரோடு

பெண்ணை

அறுத்து ஆனந்திக்கும்

வக்கிர

கற்பழிப்புகள்.

 

ஆணின விதி விலக்குகள்

இப்படி

கிளை பரப்ப

 

ஆணின்றி

பெண்ணும்

பெண்னின்றி

ஆணுமில்லாத

மானிடத்தின்

சரி பாதி

மங்கை நல்லாள்

விதி மீறி

சதி செய்யும் போது

கொடூரத்திற்கென்ன குறை?

 

உலகம்

அழியுமென

விஞ்ஞானம்

சொல்லவில்லை

ஞானமோ

கூவி அழைக்கின்றதாம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்

அப்படித்தானென்று.

அதன் அடையாளமோ

இந்த மானுடத்தின்

சரிவு?

 

இதில் மங்கையை மாத்திரம்

புகழ்ந்தென்ன?

இகழ்ந்தென்ன?

 

நல்லவைகளை

நமதாக்குவோம்

தீயவைகளில்

தற்காப்போம்

அதை

தலைமுறைக்கும்

கற்று தருவோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.