(Reading time: 2 - 4 minutes)

அப்பா - அனு.ஆர்

அப்பா!

 

பால்யத்தின் கதாநாயகன்.

 

குதி என்ற இவரின் ஒற்றை வார்த்தையில்

நீளமும் அகலமும்

அடி தெரியாத ஆழத்துடன்

போட்டியிடும் தோட்ட கிணற்றில்

இரண்டு வயதில் குதித்ததுண்டு.

அப்பா இருக்கிறார் பார்த்துக்கொள்வார்.

 

பதின் வயதுகளில் ஆசான்.

 

அறிவை அறிமுக படுத்தியவர்.

அறிஞன்.

ஐன்ஸ்டீன் முதல் ஆண்ட்ரி அகாசி வரை

அறிந்து கொள்ளும் ஆர்வம்

விதைத்தவர்.

அதிகாலையில்

தலைவாசலில்

செய்தித்தாளுக்காக

தம்பி தமக்கைக்கு முன் எழுந்து

நான் தவமிருக்க

அடிப்படை காரணம்

அவர் விதைத்த

அறிவுப்பசி.

அனைத்தையும்

அறியும் வெறி.

 

கடன் வாங்கினாலும்

கையூட்டு வாங்கமட்டேன்

என்ற அவர் வாழ்க்கை முறை

நல்லவற்றில் வைராக்கியம் பாராட்டவும்

நன்மை செய்வதால் வரும் துன்பத்தை தாங்கவும்

நடை முறை பயிற்சி தந்தது நிஜம்.

 

பாதுகாப்பு என்ற பெயரில்

இவர் வேலியடைக்க

நம்பவில்லை பெண்களை நீவிர்

ஆணாதிக்கவாதியாகி போனீர்

அடிமைபட நான் அறிவற்றவள் இல்லை காணீர்

என நக்கீரனாய் கொதித்தெழ செய்தது செய்பொழுது.

குறை இருப்பது

இறையிடம் என்றாலும்

கொதித்தெழத்தான்

வேண்டுமென்ற

அவர் கொள்கை

அவரை பதம் பார்த்தது அப்பொழுது.

கொண்ட கொள்கை

கொன்றாலும்

கொள்கை காப்பதில்

கொடி காக்கும்

குமரன்.

 

பருவத்தில்

எனக்கேற்ற இதயன் என

இவர் கொண்டுவந்த

இளவலுடன் இனிய இல்லறம்.

காதல் காவியமாய் ஒரு கல்யாண வாழ்க்கை.

 

இப்பொழுதும்

அம்மா போல் நீங்கள் இல்லை

என ஆயிரம் முறை நான் அப்பாவிடம் சொல்லிக்கொண்டாலும்

என்னவனும் நானுமாய்

தெளிந்து தேர்ந்தெடுத்து

என் மகளை வளர்க்கும் முறை

அப்பாவின் அன்றைய முறையாய்த்தான்

இருக்கின்றது.

 

உன்

பால்யமும்

பதின் வயதும்

பருவமும் போல்

பயிற்றுவித்த

பதன் செய்த

பலபடுத்திய

சுகமாய் சுகித்த

இனிமையாய் இனித்த,

இன்னல்கள் எதுவுமற்ற

வளரும் காலத்தை

அனுபவித்த

இன்னொரு மனிதனை

இன்னும் நான் காணவில்லை.

நீ வளர்ந்த விதம் தனி.

பார்க்கின்றேன் அதன் கனி

என் மகளும் வர வேண்டும்

உன் போல் இனி

எங்கின்றான் என் பதி.

நன்றி: அப்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.