(Reading time: 4 - 7 minutes)

வாழ்க்கை - மீரா ராம்

வாழ்க்கை என்னும் நதியில் நீ நீந்தி கொண்டிருக்கிறாய்

தெளிந்த நீரோடை போல் என்றும் நீ செல்லும் பாதை இருப்பதில்லை

சலசலப்பிற்கும் அதில் பஞ்சமில்லை

அலைகழிப்பு இல்லாது அமைதியாகவே பாதை போனால் அற்புதங்கள் நிகழ்வதில்லை

நீர் சுழற்சியில் ஆழ்ந்து போகாவிடில்

சிக்கல்கள் நீ அறிவதில்லை

காட்டாற்று வெள்ளத்தில் அகப்படாவிடில்

நெளிவு சுளிவுகள் நீ உணர்வதில்லை

தண்ணீர் வேகத்தில் மட்டுப்படாவிடில்

ஆழம் நீ தெரிவதில்லை

நதியின் போக்கில் பயணிக்காவிடில்

சூட்சமங்கள் நீ புரிவதில்லை

காற்று ஒரு திசை மட்டும் வீசுவதில்லை

விதியை மதி வெல்லாமல் இருப்பதில்லை

திசை மாற்றி போக்கு காட்டும் வித்தை

அறிந்து நீ போராடினால் சதியேதுமில்லை

நீரின் போர்க்களத்தில் மாய்ந்து போனால்

வீரன் நீ என்று போற்றப்படுவதில்லை

பூமாலைகள் உன் கழுத்தில் விழுவதுமில்லை

சங்கடங்களும் சஞ்சலங்களும் இல்லாவிடில்

முழுமை நீ பெறுவதில்லை

இடர்பாடுகள் இல்லாவிடில் நீ சிந்திப்பதில்லை

கஷ்ட நஷ்டங்கள் இல்லாவிடில் நீ தேறுவதுமில்லை

மேற்கொள்ளும் பயணத்தில் தடைகள் பாறாங்கல்லாய்

வந்து அணை போடுவது புதிதில்லை

தகர்த்தெறிந்து  முன்னேறி செல்லும் மார்க்கம்

கண்டுபிடிப்பது சிரமமுமில்லை

.புதிய புதிய முகங்களை சந்திக்காவிடில்

அனுபவ பாடங்கள் நீ கற்பதில்லை

கடும் வீழ்ச்சிகள் சேராவிடில்

ஏற்றங்கள்  நீ அடைவதில்லை

பெரிய தோல்விகளில் துவழாவிடில்

வெற்றிகள் நீ தழுவுவதில்லை

சுழலில் சிக்குண்டு வீழ்பவன் கோடியுமில்லை

எதிர்நீச்சல் போட்டு பிழைப்பவன் ஆயிரமுமில்லை

வலிகளும் வேதனைகளும் நீ பெறாமலிருப்பதில்லை

அதை தராதவன் இறைவனுமில்லை

கடவுள் இல்லாவிடில் சோதனையில்லை

சோதனை இல்லாவிடில் சாதனையில்லை

தன்னம்பிக்கையும் உன் கையும் சேர்ந்தால்

உன்னை எதிர்ப்பவரும் எவருமில்லை

விழித்தெழு நண்பனே...

உன் கரம் கொண்டு முன்னேறி படியேறு

உன்னை சீர்குலைக்க முட்டுகட்டைகள் வராமலிருப்பதில்லை

காதலும் தொட்டுப்பார்க்காமல் செல்வதில்லை

அதில் நீ தோற்றுப்போயிருந்தாலும் ஆச்சரியமில்லை

காதல் தீயில் வெந்து சாம்பலானாலும்

மீண்டும் உயிர் பெறும் பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடு

அன்னை பிரசவத்தில் மறுபிறப்பு எடுக்காவிடில்

மழலைகள் மண்ணில் அவதரிப்பதில்லை

மனதினில் இதை பதிய வை

முன் உதாரணமாக ஈன்றவளை நினை

எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டு

வருத்தங்களுக்கு விடை கொடு

ரணங்களை உள்ளத்தில் மெருகேற்று

வைராக்கியம் உன்னில் உண்டாக்கு

எதிர்ப்பவர் , உதாசீனப்படுத்தியவர் , வெறுத்தவர் , விலகியவர், ஒதுக்கியவர் முன்னால்

ஜொலிக்கும் வைரமாக உருமாறு

கண்களை இழந்தவன் கால்களை கொண்டு பயணிக்கின்றான்

இரண்டும் ஒருசேரப் பெற்ற உன்னால்

உன் பாதையை தீர்மானிக்க முடியாதா???

இல்லை அதில் பயணம் தான் மேற்கொள்ள முடியாதா ??

துணிந்தவனுக்கு மலையும் கடுகே...

துவண்டு போகிறவன் மனிதன் அல்ல

வெகுண்டு எழுகிறவனே மனிதன்

ஐந்தறிவு மிருகங்கள் இரையைத் தேடி

தினம் தினம் போராடுகிறது...

ஆறறிவு பெற்ற ஜீவன் உன்னால்

தினம் போராட முடியாதா ???

பிராணிகள் நுண்ணறிவோடு செயல்படும்போது

பகுத்தறிவு கொண்ட உன்னால்

சூழ்ச்சி வலைகளை அறித்தெறிய முடியாதா?

இல்லை அதற்கும் த்ராணி அற்றவனா நீ ?

யோசி...

வாழ்க்கைப்படகு ஒரு வழிப்பயணம்

திரும்ப செல்லுதல் இயலாத காரியம்

கடந்த காலத்தை உன்னில் புதை

உனக்கென்று இலட்சியம் ஒன்றை உருவாக்கு

குறிக்கோள்களுக்கு இதயத்தில் இடம் கொடு

திறன்பட அதிர்ஷடத்தை அணுகூலமாக்கு

கண்ணீர்த்திவலைகளை மனதினில் போட்டு முடக்கு

அவநம்பிக்கைகளை தீயிட்டு கொளுத்து

காயங்களுக்கு வியர்வையால் மருந்தாற்று

இழந்தவைகளை எண்ணி பொருமுவதை நிறுத்து

வரப்போகும் வசந்தத்தை முன்னிட்டு பயிர்செய்

மழை என்னும் நீர் வந்து பசுமை ஓங்கும் உன் வாழ்வில்...

முடியும் என்று உறுதியுடன் நம்பிக்கை வை

ஒரு நிமிடம் என்றாலும் உன்னை திரும்பி பார்க்க வை

அயராது உழைத்து இன்பமுரு

வெற்றி தாய் உன்னை கரைசேர்க்கும் நாள் தொலைவிலில்லை

வருங்காலம் உன் பெயர் சொல்லும்

துன்பமும் உன் முன்னால் ஒர் நாள் மண்டியிடும்...

வாகைப்பூக்கள் பூமாரியாய் பொழியும்

என்றென்றும் உன் மேல்....

உலகமும் உன்னைப் போற்றும்

சரித்திரத்தில் இடம் பெறு

தரித்திரத்தை கருவறு....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.