(Reading time: 6 - 11 minutes)

என் அப்பா – மீரா ராம்

அப்பா…

மூன்றெழுத்தில் நான் பெற்ற தவம்…

இத்தவத்தைப் பெற நான் இறைவனிடம் கையேந்தவில்லை…

Appaஎனினும் கொடுத்தார் எனக்கு…

மாபெரும் வரமாய் என் தந்தையை…

 

அப்பா…

என அழுத்தி உச்சரிக்கும் போதே

கண்களில் ஒரு வித ஒளி,

இதயத்தில் ஒரு வித சந்தோஷம்

வந்து குடியேறுவதை மறுக்க இயலாது

என்னால் ஒவ்வொரு முறையும்…

 

நான் பிறந்தது முதல் இன்று வரை

என்னை நீங்கள் வளர்த்த விதத்தை

நினைவு கூர்கிறேன் பின்னோக்கி….

 

மூன்று வருடங்கள்…

ஆம் திருமணமாகி மூன்று வருடம் கழித்து

என் தகப்பனாருக்கு மகளானேன் நான்…

என்னைக் கையிலேந்திய அந்த நொடி முதல்

இந்த நொடி வரை என்னைத் தரை இறக்காத

சுமைதாங்கி…. என் அப்பா…

 

விதவிதமாய் ஆடைகள் அணிந்து

அழகு பார்க்க ஆசை கோடி இருந்தும்

ஏனோ பெரும்பாலும்  

எனக்கு அணிவித்து மகிழ்ந்தது

அவருடைய சிறுவயது அரைக்கை சட்டையைத்தான்…

ஏனென்று யாரும் கேட்டால் என் பிள்ளைக்கு

கண் திருஷ்டி பட்டுடும் என்று சொன்ன

வார்த்தை… என் அப்பா…

 

நான் விளையாடி மகிழ்ந்திட,

என்னுடன் அமர்ந்து இரவென்றும் பாராமல்

பொறுமையைக் கடைபிடித்து

நேரத்தை செலவழித்து இன்பமுற்ற

பொழுது…. என் அப்பா…

 

ஒவ்வொரு நாள் இரவும்

அரண் போன்ற கையணைப்பில் வைத்து

தட்டிக்கொடுத்து தூங்க வைக்க

தன் மார்பை மெத்தையாக விரித்த

தாலாட்டு…. என் அப்பா…

 

தத்தி தத்தி நான் நடக்கையில்

விழாமல் இருக்க அவரின்

ஒருவிரல் போதுமானதாக இருக்க

கூடுதலாக எனக்கு எப்போதும் துணையாக அமைந்த

நடைவண்டி…. என் அப்பா…

 

அம்மா எனக்கு ஒரு ஜடை போட்டால்

அது வேண்டாம் என தவிர்த்து

என் பொண்ணுக்கு இதுதான் அழகென

எனக்கு இரண்டு ஜடை போட்டு

அதில் அழகாய் பூ வைக்க விருப்பம் கொண்ட

ரசனை…. என் அப்பா…

 

பள்ளி சென்ற காலத்தில்

காலையில் என்னை கிளப்புவதும்,

பள்ளியில் இறக்கி விடுவதும்,

மாலையில் என்னை காத்திருக்கவும்,

நடக்கவும் விடாது பார்த்துக்கொண்ட

பயணநிழல்….. என் அப்பா…

 

தினம் காலை நான் உறங்கி விழித்ததும்

முதன் முதலாய் நான் காணும் முகம்,

என்னைத் தூக்கி கொண்டு

அரவணைக்கும் கைகள் தரும்

ஸ்பரிசம்…. என் அப்பா…

 

பெரிய மனுஷியாய் புடவை கட்டி,

பலரின் முன்னிலையில் அமர வைத்து,

சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்த போதும்,

இன்னும் நீ எனக்கு குழந்தை தான் என சொல்லும்

மழலை…. என் அப்பா….

 

நான் வகுப்பில் முதல் மாணவியாக வந்த போதும்,

நல்ல மதிப்பெண் பெற்று பரீட்சையில்

தேர்ச்சி பெற்ற போதும்,

கர்வம் கொண்டு பிரதிபலித்த முகத்தில்

மின்னியபெருமை… என் அப்பா…

 

கல்லூரியில் நான் அடி எடுத்து வைத்த பின்பும்

வகுப்பு நிகழ்வுகளை தினமும்

பகிர்ந்துகொள்ள என்னை பழக்கிய

தோழமை… என் அப்பா…

 

என்றாவது ஒருநாள் செலவுக்கு பணம் கேட்டால் கூட

தேவைக்கு அதிகமாக என் கைகள் நிறையுமே தவிர,

ஒருபோதும் அதனை குறைய வைத்திடாத

தாராளம்…. என் அப்பா…

 

அம்மாவை பெயர் சொல்லி வா, போ

என அழைக்கிற நான், ஏனோ அவரை

அவ்வாறு அழைத்திட தோன்றிடாத

மரியாதை…. என் அப்பா…

 

உடல்வலி, காய்ச்சல் என்று நான்

படுத்துக்கொண்டாலும், இன்றளவும்,

என் கைவிரல் பிடித்து, சொடக்கு எடுத்து

என்னை அரவணைத்துக்கொள்ளும்

நேசம்…. என் அப்பா….

 

ஒருநாள் முடியவில்லை என்று விடுப்பு

எடுத்துக்கொள்ள கேட்டபோதெல்லாம்

விடுப்பு எடுத்தால் பாடங்களை தவற விட்டிடுவாய்

என கூறி என்னை பள்ளி, கல்லூரிக்கு அழைத்துச்செல்லும்

பிடிவாதம்… என் அப்பா…

 

appaபடித்து முடித்து வேலை கிடைக்காது

ஒரு வருடம் வீட்டிலேயே இருந்த போதும்

என் பிள்ளை எனக்கு பாரமில்லை

என்ற வார்த்தையால் பிறர் வாயடைத்த

கௌரவம்… என் அப்பா…

 

கிடைத்த வேலையை பற்றுகோலாய்

பற்றிய பின்பும், அரசாங்க வேலையை

நான் பெற ஒவ்வொரு நாளும்

என்னை ஊக்குவித்து உத்வேகம் அளிக்கும்

புத்துணர்ச்சி…. என் அப்பா…

 

என் கஷ்டமான தருணங்களில்

யாருக்கும் தெரியாமல் நான் அழ,

மென்மையாய் என் தலையினை வருடி,

நானிருக்கிறேன் உனக்கு என்ற உணர்வை ஏற்படுத்தி

தயங்காமல் தன் மடி கொடுத்த

ஆதரவு…. என் அப்பா….

 

இனம் புரியாத கவலை மனதை ஆக்கிரமித்தால்,

ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவரை அணைத்து

தோள்களில் தலை சாய்த்தால் போதும்

தோன்றிய கவலையும் நிமிடத்தில் மறைந்து போகும்

மாயம்…. என் அப்பா…

 

வேலையிலிருந்து வர தாமதம் ஆகும் நாட்களில்,

வீடு வந்ததும், அதுவரை தேடி தவித்த விழிகள்,

புன்னகை பெற்று ஒளிரும் வேளை,

தாவி வந்து அப்பா என்ற கூவலுடன் கட்டிக்கொள்ளும்

என்னிடம் அப்பாதான் வந்துட்டேன்ல…. என உரைக்கும்

அழகிய சமாதானம்…. என் அப்பா…

 

வேண்டுமென்றே காலையில் அலுவலகத்திற்கு

கிளம்புகையில் சோம்பேறித்தனத்தினால்

மெதுவாக புறப்படும் என்னிடத்தில்

இவ்வளவு நேரம் என்னல செஞ்ச??? என வெளிப்படுத்தும்

செல்லக்கோபம்…. என் அப்பா…

 

பெயர் என்று ஒன்று வைத்த போதிலும்

அது பாட்டியின் பெயராய் இருப்பதால்

இன்னமும் என்னை ஒருநாள், ஒரு பொழுது கூட

பெயர் சொல்லி அழைத்திடாத

மதிப்பு…. என் அப்பா…

 

வசதி, அன்பு, அக்கறை, கனிவு, படிப்பு,

பாசம், நேசம், பண்பு, பணிவு, மதிப்பு, மரியாதை

என அனைத்தும் அமைத்துக்கொடுத்து

உழைத்து சேர்த்து வைத்த அனைத்தையும்

திருமணம் என்ற பெயரில்

என்னையும், ஆஸ்தியையும்,

தாரை வார்த்து கொடுத்துவிட்டு

தள்ளி நின்று நல்வாழ்வு எனக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்ட

திருப்தியில் கண்கள் குளமாக

உதட்டில் நிறைவான புன்னகையோடு

மாலையும் கழுத்துமாய்

என்னைப் பார்க்க ஆவலாய் இருக்கும்

என் தந்தையே…

என்னைப் படைத்த கடவுள் கூட

எனக்கு உயிர் கொடுத்த உங்களுக்கு அடுத்த நிலை தான்…

 

ஆயிரம் உறவுகள் எனக்கு கிடைத்தாலும்

யாவும் என் தந்தைக்கு நிகர் ஆகாது…

ஆம்… பெருமிதம் கொள்வேன்…

பேருவகை கொள்வேன்….

தாம் என் அப்பா என்பதில்…

 

வாழ்வில் எத்தனை இன்னல்கள் வந்தாலும்,

என் தகப்பன் தோள் ஒன்று போதும்,

என் துயர் எல்லாம் கரைந்து தேய….

 

அப்பா…. அப்பா… அப்பா… என

கோடி முறை நான் சொன்னாலும்

சலித்திடாது என்னைப் பெற்றவருக்கு…

இதுதானே வேண்டும் மகளுக்கும்….

 

அப்பா என நான் அழைத்ததும்

என்னம்மா என்று கேட்கும் அந்த

ஒரு வினாடி சொல்லிடுமே

அந்த குரலின் விலைமதிப்பில்லாத கனிவை…

இதைத் தவிர வேறென்ன வேண்டும் எனக்கு???

 

எதுவும் தேவையில்லை தான்…

ஒன்றே ஒன்றைத் தவிர… ஆம்….

மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டும் எனக்கு…

தங்கள் மகளாக பிறக்க அல்ல…

என்னை வளர்த்த என் தந்தையின் அன்னையாக….

பிறவி அமைய வேண்டும் எனக்கு….

 

வாழ்த்த வயதிருக்கா தெரியவில்லை…

ஆனால், இறைவனிடம் தங்களின் நலனுக்காக அனுக்ஷனமும் வேண்டுகிறேன்…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா….

நூறு வயது வரை நிறைவாக வாழ வேண்டும் அம்மாவுடன்…

என்றும் சந்தோஷமாக…

 

தகப்பன் என்பவர் இப்படித்தான் இருப்பார் என்றாலும்

எனக்கு கிடைத்த தனிசிறப்புதான்…. என் அப்பா…

ஆம்…

எனக்கு கிடைத்த பொக்கிஷம்…

எனக்கு கிடைத்த அரவணைப்பு…

எனக்கு கிடைத்த மகிழ்ச்சி…

எனக்கு கிடைத்த பரிசு…

எனக்கு கிடைத்த வலிமை…

எனக்கு கிடைத்த புன்னகை…

எனக்கு கிடைத்த கிருபை…

எனக்கு கிடைத்த பெருமை….

எனக்கு கிடைத்த உயர்வு...

ஏன் எனக்கு கிடைத்த உலகமும் அவர் தான்…

ஆம்…

அப்பா….

என் அப்பா….

ஹாய் ப்ரெண்ட்ஸ்…. இந்த வார்த்தைகள் அனைத்தும் என் அப்பா எனக்கு கொடுத்த கல்வியின் வாயிலாக, அவருக்கு நான் கொடுக்கும் சிறிய பிறந்த நாள் பரிசு…

“ஹேப்பி பர்த்டே மை டியர் அப்பா….”

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.