(Reading time: 3 - 6 minutes)

என் அழகு குட்டிச் செல்லம்… – மீரா ராம்

Chellam

சூரியனாய் வந்து என்னில் ஒளியேற்றி

மலடி என்ற அவச்சொல் நீக்கி

என் கருவில் வந்து உதித்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

தேய்பிறை இல்லா நிலவாக

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

என்னுள் வளர்ந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

குமட்டல் கொடுத்து, மயக்கம் அளித்து

நீ உருவாக என்னை அதற்கு ஏற்ப

தாயாக செதுக்கினாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

பிஞ்சு கைகால் கொண்டு

என் வயிற்றில் எட்டி எட்டி உதைக்கையில்

ஆச்சரியம் கலந்த இன்பம் கொடுத்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

நடக்க சிரமம் கொடுத்து

படுக்கவும் விடாது என்னை

உன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

இது என் குட்டிக்கு பிடிக்குமா

என கேட்டு கேட்டு நான் உண்டபோது

ஆம், இல்லை என அசைந்து அசைந்து பதிலளித்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

நான் கை குலுக்கும் போதெல்லாம்

என் கண்ணாடி வளையலின் ஓசையை

கேட்டு கேட்டு துயில் கொண்டாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

மூச்சுக்குப் போராடி நான் கதறுகையில்

இன்னும் கொஞ்ச நேரம் என்பதுபோல்

தண்ணீர்க்குடம் உடைத்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

இதயத்துடிப்பு எகிறி நிற்கையில்

இரத்தமும் உருவமுமாய் வெளிவந்து

போன என் உயிர் மீட்டுக்கொடுத்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

உடல் தளர்ந்து, சோர்வு கொண்டு

நித்திரைக்கு சென்ற என்னை

எழுப்பவே வீறிட்டு அழுதாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

விழித்து பார்க்கையில் இளஞ்சிவப்பு நிறத்தை

உடலெங்கும் பூசிகொண்டு, பூமிக்கு வந்த சந்தோஷத்தில்

கை கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

உன்னை பார்த்த மகிழ்ச்சியில்

கன்னத்தில் வழிந்த என் கண்ணீரை

பிஞ்சு கரம் கொண்டு எட்டி துடைத்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்

 

உள்ளம் பொங்க உன்னை நெஞ்சில் சாய்த்து

உச்சி முதல் பாதம் வரை முத்தமிட

மெல்ல சிணுங்கி சம்மதம் சொன்னாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

சொல்ல இயலாமல்

வாய் பேச தெரியாமல்,

பசியில் அழுது முகம் சிவந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

மூன்று மாதத்தில்

தாய் முகம் பார்த்து சிரித்து

என் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

பிறர் கை நீட்டி அழைக்கும்போது

என்னையும் அழைப்பவரையும் மாறி மாறி பார்த்து

கடைசியில் என்னை நோக்கி தாவினாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

பால் பற்கள் கூட முளைக்காத நிலையில்

அரந்தை கொண்டு என் கன்னம்

கடித்து சிரித்து விளையாடினாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

வா என நான் அழைத்ததும்

நடக்க தெரியாத நிலையில்

முட்டி போட்டு தவழ்ந்து வந்தாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

தத்தி தத்தி நடக்க பழகையில்

நான் கை தட்டு ஓசை கேட்டு

பொக்கை வாய் சிரிப்பில் மனதை கொள்ளையிடுவாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

முடி பிடித்து இழுத்து

முகம் அழுத்தி வருடி,

இதழ் மீது இதழ் வைத்து முத்தமிட்டிடுவாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

உனக்கு மட்டுமே தெரிந்த மொழியில்

என்னுடன் உரையாடி பேசி களைத்து

என் மார்பை மெத்தையாக்கி தூங்கிடுவாயோ

என் அழகு குட்டிச் செல்லம்…

 

என் செல்லமே

உன்னுடைய ஒவ்வொரு செயலுமே

நான் ரசித்திடும் அழகு தான்…

கடவுள் கொடுத்த வெகுமதி என்று உன்னை சொல்வதா?

இல்லை எனக்கான வரம் நீ என பெருமை கொள்வதா?

இதுவென்று இனம் பிரித்து சொல்ல முடிந்திடவில்லை

என் அழகு குட்டிச் செல்லமே…

 

நீயாக நடக்க பழகியிருந்தாலும்

வயது தான் ஆன போதிலும்

தாய்க்கு தன் பிள்ளை என்றும் அழகு கொஞ்சும் குட்டி செல்லம் தான்…

 

மறதிக்கே மறதி வந்தாலும்

மறந்திடுமோ அந்த நாள்…

ஆம்…

என் மரணத்தின் விளிம்பில் உன் ஜனனம்…

இதோ இன்று தான்….

இந்த மண்ணில் நீ கால் பதித்த நாள்…

உன் பிறந்த நாள்

என் அழகு குட்டிச் செல்லமே…

 

என்றுமே நிறைவாய், மகிழ்வாய்,

நீ வாழ வேண்டுமடா

என் அழகு குட்டிச் செல்லமே…

ஹ்ம்ம்…

என் அழகு குட்டிச் செல்லம்…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.