(Reading time: 5 - 9 minutes)

என் மும்மூர்த்திக்கு… என் தேவதூதனுக்கு… – மீரா ராம்

Daddy

உள்ளத்தில் பொங்கும் உவகையை

விவரிக்க வார்த்தைகள் இல்லையோ என்னிடத்தில்…

பேச்சை விட அதிகமாய் கண்களில் ஆனந்தக் கண்ணீர்…

இருகைகூப்பி அந்த ஸ்ரீராமனின் முன்னால் நிற்கிறேன்…

உதடுகளுக்குள்ளே தொலைந்து போன சொற்களை

தேடிப்பிடித்து சிந்தைக்குள் கொண்டுவர,

மெல்லிய முணுமுணுப்பாய் எந்தன் சந்தோஷமும் பூப்பூக்க ஆரம்பித்தது…

சட்டென விழி மூடிட, காட்சிகள் தானாய் விரிகிறது கண்முன்னே…

 

ஆசையோடு தூக்கி முத்தமிடுகையில்

குறுகுறுத்த மீசையினால் சிணுங்கிய மூன்றுமாத சிசுவிடம்

என் அம்மால… அப்பா மீசை குத்திடுச்சா என் பொண்ணுக்கு…

என செல்லம் கொஞ்ச ஆரம்பித்த தருணங்கள்…

 

முட்டிகால் போட்டு தவழ ஆரம்பித்த வேளை

சிமெண்ட் தரையில் பட்டு, லேசாய் சிராய்ப்பு ஏற்பட,

வீறிட்டு அழுத முகத்ததோடு ஏறிட்டு பார்த்த மழலையிடம்,

தரையை அடிச்சிடலாம் என தரைக்கு கொடுத்த நாலு அடிகள்…

 

பத்துவிரல் எடுத்து கம்பியை பற்றிக்கொள்ள சொல்லியிருந்தாலும்

ஒரு கண் சாலையிலும் மறுகண் வண்டியில்

முன்னாடி கம்பிபிடித்து நிற்க வைத்திருந்த

குழந்தையிடமும் நிலைகொண்டிருந்த பயணங்கள்…

 

திக்கி திக்கி பேசும் குழந்தையிடம்

நீ வளர்ந்தும் அப்பாக்கு சோறு போடுவீயாம்மா என்ற கேள்வியை முன்னிறுத்த

நான் சௌ-காய் போட்டு பருப்பு போட்டு சோறு தருவேன்ப்பா

என அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்திருந்த பற்களைக் காட்டி

சிரித்து அதுவும் பதில் சொல்ல, அப்படியே அள்ளிக்கொண்ட நினைவுகள்…

 

இனி பிழைக்க வைப்பது கடினம் என்ற பிறகும்,

மனதில் இருந்த வருத்தத்தையும், மறைத்து, நம்பிக்கையோடு

பல மருத்துவமனை ஏறி இறங்க, கடைசியில் இனி பயமில்லை…

என்றதும் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு நெற்றியில் முத்தமிட்டு

பல நிமிடங்கள் நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்த பொழுதுகள்…

 

காலையில் பள்ளிக்கு கொண்டு விடுவதோடு மட்டுமல்லாது

மாலையிலும் பள்ளிவிடுவதற்கு முன்பாகவே வந்து, நின்று

அழைத்து செல்லும் அந்த அழகான காத்திருப்புகள்…

 

வாசலில் கேட்ட பைக் சத்தத்தில், அடக்கி வைத்திருந்த அழுகை

பீறிட்டு வர, என்ன வென்று கேட்ட விநாடியே,

அம்மா அடிச்சிட்டாப்பா… என ஏங்கிய சிறுமியை தூக்கிக்கொண்டு

இனி பிள்ளைமேல கைவைக்குற பழக்கம் வச்சிக்காத என

கட்டின மனைவியிடம் காட்டிய எக்கச்சக்க கோபங்கள்…

 

வெளியே சென்ற இடத்தில், உன் பொண்ணா இது?...

நல்லா இருக்குறாளே அழகா என யாரும் சொல்லிவிட்டால்

வீட்டிற்கு வந்த கையோடு கழித்த திருஷ்டிகள்…

 

படித்து வாங்கிய பட்டத்தை இருகைகளில் மகள் தர,

முகத்தில் வந்ததே ஓர் பெருமை, பூரிப்பு…

ஈடாகுமா யாவுமே அந்த கணநேரத்திற்கு?...

அதை பார்த்து ரசித்தபடியே,

டிகிரி வாங்கிட்டன்பா… என கட்டிக்கொண்ட மகளிடம்

“ஆமால…” என நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்ட நிறைவுகள்……

 

சோர்வாக வீடு திரும்பி படுத்திருக்கையில்

ஸ்பரிசம் பட்டு கண் திறந்த வளர்ந்த பெண்ணிடம்,

என்னம்மா?... என்னாச்சு?.. என சொல்லிக்கொண்டே

உடம்பிற்கு எதுவோ என்னவோ… என பயந்து

நெற்றியில் கைவைத்து பார்க்கும் தவிப்புகள்…

 

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ இருக்க,

பட்டென கடந்த காலத்திலிருந்து வெளிவந்து விழி திறக்க,

எதிரே என் இஷ்ட தெய்வம் ஸ்ரீராமன் சிரித்துக்கொண்டிருந்தார்…

 

பரந்து விரிந்திருந்த அந்த வானத்தில் இரவு முழுவதும்

மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தினை கணக்கிட்டு கூற இயலுமா?

மழை வரும் நேரங்களில் அடிவானத்தில் பூக்கோலமாய் தோன்றும்

வானவில்லின் அழகை வியக்காமல் இருந்திட தான் முடியுமா?

 

பெற்ற தகப்பன் பிள்ளை மீது வைத்திருக்கும் பாசமும் நேசமும் கணக்கிட இயலாதது…

அதே நேரம் அந்நேசத்தில் கரைந்துருகி என் தகப்பன் மாதிரி வருமா என வியக்காமல் இருந்திடவும் முடியாது...

 

அவரே என்னிடத்தில் சொன்னதுபோன்ற ஓர் அசரீரி…

 

இருக்கட்டுமே… அதனால் என்ன?..

கோடான கோடி தந்தைகள் இப்படித்தான் மகளிடம் இருப்பார்கள் எனினும்

என் அப்பா எனக்கு பொக்கிஷமான வரம்…

எனக்கு உயிர் கொடுத்த பிரம்மா என் அப்பா…

அனுக்ஷணமும் என்னை காக்கும் விஷ்ணு என் அப்பா…

நெருங்கவிடாது துன்பத்தை அழிக்கும் சிவன் என் அப்பா…

ஆம்… எனக்கே எனக்கான மும்மூர்த்தி தான் என் அப்பா…

 

சந்தோஷவானில் சிறகு விரித்து மகள் பறக்க,

கீழிறந்து தூக்கி உயர்த்திவிடும் கைகள் தகப்பனுடையது என்றால்

இல்லை என மறுப்பு சொல்பவரும் உலகில் உண்டோ?

 

சொல்வார்கள் மகளெல்லாம் தேவதைகள் என்று…

எனில் தந்தை எல்லாம் மகளை காக்கும் தேவதூதனா?...

 

ஆம் என் தேவதூதன் அவர்…

என் தேவரட்சகன் அவர்…

எல்லாவற்றிக்கும் மேல் என் தகப்பன் அவர்…

சொல்லும்போதே அடிநெஞ்சில் இனிக்கிறது..

இப்படித்தான் இருக்குமோ ஒவ்வொரு மகளுக்கும்…????!!!!

 

என் அப்பாவ சந்தோஷமா ஆரோக்கியமா

நூறுவயசுக்கும் மேல நான் நல்லா வச்சிக்கணும் ஸ்ரீராமா…

அதுக்கு நீ தான் துணை இருக்கணும்…

 

இறுக கண் மூடி வேண்டிக்கொண்டிருந்த நான்

கண் திறக்கையில் போட்டோவில் இருந்த ஸ்ரீராமரின் அருகில்

என் தகப்பனின் பிம்பம் தெரிய,

சட்டென திரும்பி இரண்டே எட்டில் அவரை அடைந்து

“ஹேப்பி பர்த்டே அப்பா…” என கட்டிக்கொள்ள,

அவரிடமிருந்து சின்னதாய் சிரிப்பு…

அம்மாவோட சேர்ந்து நில்லுங்கப்பா… என சொல்லி இருவரையும்

அருகருகே நிற்கவைத்து நான் ரசிக்க,

 

ஆச்சரியத்தில் மட்டுமல்ல..

மகிழ்ச்சியிலும் மனம் உச்சம் தொட்டு செல்லுகிறது…

ஆம்… பிஞ்சு மனம் கொண்ட வளர்ந்த என் தந்தை

இப்பூமிக்கு வந்த நாள்…

ஆம்… என் பிறை வானில் உதித்த

என் மூம்மூர்த்திக்கு… என் தேவதூதனுக்கு… இன்று பிறந்தநாள்…

 

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் செல்ல அப்பா….”

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.