(Reading time: 1 - 2 minutes)

வாழ்வின் முடிவு மரணத்தில் அல்ல - ஷக்தி

எவன் எழுதிய  புரியாத  சரித்திரம்  இது

பகல் என்றால் இரவும் உண்டு 

இன்பம் என்றால் துன்பமும்  உண்டு

வளமை என்றால் வறுமையும் உண்டு

இளமை என்றால் முதுமையும்  உண்டு

நிஜம் என்றால் நிழல் உண்டு

பிறப்பு என்றால் இறப்பும் உண்டு

 

சாகாவரம் கொள்ள ஆசை

சொர்க்கமோ நரகமோ கனவில் காண ஆசை

பஞ்ச பூதங்களும்  அரவணைக்க ஆசை

காதலும் கவியும் களம்பாட ஆசை

சரித்திரம் திருத்தி எழுத ஆசை

காலத்தோடு வாழ்ந்து காட்ட பேராசை

 

என் ஆசைக்கு எதிரி நானா என்று அறியவில்லை.

எதிரிக்கும் எதிரியாய் முடிவும் ஒன்று உண்டு

 

மரணம்.

முடிவில்லா வரம் பெற்ற மரணம் ஒவ்வொன்றிற்கும் முடிவு.

 

மரணம் நெருங்கும் போது வாழ துடிப்பவன் 

வாழும் போது வாழ்வதை ரசிக்க  மறக்கிறான்

நிலையில்லா இவ்வுலகின்  நிலைமை புரியாமல் 

நிலையாய் நிற்க தள்ளாடுகிறான்

கடைசி வரை நிலை இல்லாமல் மனிதன்..!

 

வாழ்வின் முடிவு மரணத்தில் அல்ல, நம் நினைவுகளில்,எண்ணங்களில்..!

 

மரணமும் மரணிக்கும் நாள் நம் கையில்.!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.