(Reading time: 3 - 6 minutes)

என் ராஜகுமாரி - புவனேஸ்வரி

En Rajakumari

மடியில் உறங்கி கொண்டிருந்த கணவனின் முகம் பார்த்தேன்

எத்தனை நிம்மதியான உறக்கம் ?

 

திருமணத்திற்கு முன்பும் பின்னும்

ஆணுக்கு மட்டுமே கிடைத்த வரம் சுதந்திரம்

பெருமூச்சுடன் நினைவு பெட்டகத்தை திறந்தேன் !

 

திருமணத்திற்கு முன்   எங்கள் வீட்டின் இளவரசி

முடிசூடா ராஜகுமாரி நான் !

 

அதிகாலை என்பதே எனக்கு

அன்னையின் செல்லமான கோபக்குரல் ஒலிக்கும்போதுதான் !

 

அதுவும் தந்தையை சாக்கு காட்டி

மிரட்டி எழுப்பிடும் தாயிடம் தினமும் லூட்டி !

 

பல்துலக்கும் முன்பே அம்மாவின் தயவில் காபி

தம்பிக்கு வைத்ததையும் திருடிக் குடிப்பதில் தனி ருசி !

 

மங்களகரமாய் குளித்து தோற்றமளிக்கும் அம்மாவுக்கு

கன்னத்தில் சுடச்சுட என் காலை முத்தங்கள் !

 

சீ  போடி என்று சிணுங்கி கோபபட்டாலும்

எத்தனைமுறை அதை மனதிற்குள் சேர்த்து வைத்தாயோ !

 

அம்மா , உன் கன்னங்கள் இப்பொழுதெல்லாம்

என் முத்தங்களை தேடுகின்றனவா ?

 

குளித்து முடித்தவுடன் தந்தையின் தட்டிலிருந்து இட்லி ஒரு வாய்

தம்பியின் தட்டில் இருந்து ஒரு பூரி கடன் !

 

அம்மாவின் சேலை முந்தானையில்

ஈர கரங்களை துடைத்துவிட்டு உணவுடன் தொடங்கும் போராட்டம்!

 

பிடித்ததை எல்லாம் வாங்கி தரும்படி தந்தையிடம் கொஞ்சல்

அறிவுரை கூறும் அன்னையிடமோ விழிகளை சுருக்கி கெஞ்சல் !

 

சண்டைபோடும் தம்பியுடன் அடிதடி

நான் கண்விழித்துவிட்டாலே வீடெங்கும் கேட்கும் சரவெடி !

 

கத்தியை விட என் கண்ணீரே வீட்டில் கூர்மையான ஆயுதம்

பஞ்சுமெத்தையை  விட என் தந்தையின் மடிதான் எனக்கு உறைவிடம் !

 

என் செல்லப்பிராணி கூட எனக்கே தரும் முன்னுரிமை

எங்கெங்கும் எடுபடும் பெண்ணிவளின் பேச்சுரிமை !

 

இன்றோ, அலாரத்தை மௌனமாக்க அதிகாலையில் கண்விழிக்கும் நான்

சுப்ரபாதத்தை உயிர்பித்துவிட்டு ஜன்னல் வழியே தொலைந்துபோன சுதந்திரத்தை தேடுவேன் !

 

எனக்காக காபி குடிப்பதை மறந்து

வீட்டில் உள்ளவர்கள் தேவைகேற்ப பம்பரமாய் சுழலும் என் கைகள் !

 

கொண்டுவரும் காபியை குடித்துமுடிப்பதற்குள்

செல்லமாய் கொஞ்சிடும் என் கணவன்

எனக்கு கிடைக்கும் அன்றாட ஆறுதல் பரிசு அது !

 

மனதிற்குள் மெச்சுவாரோ  என்னவோ

மௌனமாகவே என்னை கண்காணிக்கும் அத்தை

என்றாவது அதிசயமாய் நீ சாப்பிட்டியா ? என்று கேட்கும்போது

 பெற்றிடுவேன் இரண்டாம் ஆறுதல் பரிசு !

 

காலையுணவு பரிமாறும் வேளை,

 எனக்கு பிடித்த உணவுகளை நினைவுகூர்ந்து கொண்டே

 தட்டில் வைப்பேன் கொஞ்சமும் பிடிக்காத உப்புமா

 

அதையும் ரகசியமாய் கணவன் ஊட்டிடும்போது

கிடைத்திடுமே எனக்கு மூன்றாவது ஆறுதல் பரிசு !

 

வரேன் அண்ணி என்பார் கணவனின் தம்பி

என்னிடம் சண்டை பிடிக்கும் தன் சகோதரனின் பிம்பம் நினைவில் !

 

காதலுடன் கணவன் பார்க்கையில்,

ஒரு கணம் சுதந்திர வானில் நான் !

 

அதற்குள் தடுத்திடும் அத்தையின் குரல்

இன்னைக்கு என்ன சமையல் என்றவாறே

 

ஏனோ அன்னையின் ஞாபகம் வரும்

அவரும் இப்படித்தான் கேட்பார் எனக்காக சமைத்திட !

 

என் வீட்டில் ஆயுதமான கண்ணீருக்கு இங்கு நீலிக் கண்ணீர்

என பெயர் வருமோ என்ற அச்சம் !

 

 வராத கண்ணீரை வரவழைத்து அடம்பிடித்தவள் ,

வரும் கண்ணீரை கூட கண்சிமிட்டி மறைக்க கற்றுக்கொண்டேன் !

 

ஆனால் இன்று கண்ணீர் இல்லை

காரணம் எனக்குள் துளிர் விட்ட எங்களுயிர்!

 

இறைவனிடம் வரம் கேட்கிறேன்

எனக்கொரு மகள் வேண்டும் !

 

நான் ஏங்கும் சுதந்திரத்தை

அவளுக்கு நான் தரவேண்டும் !

 

என் இம்சைகளில் அன்னை கண்ட சுகத்தை

இன்று நான் அனுபவிப்பதற்காக

 பிறந்து வரட்டும் என் ராஜகுமாரி !

திருமண பந்தம் மிக அழகானது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை .. எனினும் இப்படியும் ஓர் உணர்வில் இருக்கும் சகோதரிகளுக்கு என் கவிதை அர்ப்பணம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.