(Reading time: 3 - 5 minutes)

 13. ராதா கிருஷ்ணன் காதல் - புவனேஸ்வரி

Krishnar

பின்னலிட்ட கூந்தல் விரிந்திருக்க

பட்டாடை உடையும் கலைந்திருக்க

நேசம் தேங்கிடும் விழிகளில்

நோய் காண தகுமோ?

ராதை கோலம் நினைத்து

கலங்கி நின்றான் கார்முக கண்ணன்.

 

“முரளிதரா,

ராதையின் சரிபாதியே

ஸ்ரீ கிருஷ்ணா,

என் மனதின் மன்னா

கார்மேக வண்ணனே

என் வதனம் பாராய்”

ராதை கொஞ்சிட,

துன்பத்தால் வஞ்சிக்க பட்டானே கண்ணன்..

 

“ ராதே, யாம்..

யாம் உனை..”..

தடங்கல் இல்லாமல் பொங்கும் அவன் வார்த்தை நதி

அதை நிறுத்தி வைத்தது விதி!

 

நிதானமாய் சிரித்தாள் ராதை

தானமாய் காதலை வையகத்துக்கு தந்தாள் பேதை..

 

“ ஷ்யாமலவண்ணனே,

அனைத்தும் அறிந்தேன்..

அகிலத்தின் நன்மைக்காக

அடியேன் தமை நீங்கும் விதியும் அறிந்தேன்..

அறிந்தும் சிரிக்கின்றேன் விதியிடம் கர்வமாய் ?

 

காற்றை காலம் பிரிப்பதா?

நீரை நிதர்சனம் பிரிப்பதா?

வானை வாழ்க்கை பிரிப்பதா?

தீயை தர்மம் பிரிப்பதா?

நிலத்தை நாமும் பிரித்திடலாகுமோ?

 

தோற்றம் இருவராய் இருப்பினும்

நம் தோன்றல் ஒன்றல்லவா?

பரமாத்வாவின் சமர்ப்பணமாகிய

ஜீவாத்மா இந்த ராதை!

 

பிரிவென்றோ துயரென்றோ கலங்கிலேன்..

எத்திசையும் கண்ணன் போய்விடினும்

அவன் குழலிசை நானாவேன்!

 

கண்ணனின் தீர்ப்பு  நானாவேன்!

கண்ணனின் தீர்க்கம் நானாவேன்!

கண்ணனின் திருநாமம் நானாவேன்!

கண்ணன்  திருமுகம் நானாவேன்!

 

கண்ணனின் வெற்றி நானாவேன்!

கண்ணனின் துயரும் நானாவேன்!

கண்ணனின் நயனங்கள் நானாவேன்!

நயனத்தின் பார்வையும் நானாவேன்!

 

கண்ணன் உபதேசிக்கும் கீதை நானாவேன்!

கீதையை போற்ற வேண்டிய பாதையும் நானாவேன்!

 

நீ ,நான் என இருவராய் வாழ்ந்த காலம் ஓய்ந்தது கண்ணா,

இனி இருவர் ஒருவராய் வாழ்ந்திடும் வேலையிது!

மாயனாய் நீ செய்யும் லீலைகளில் ராதை உண்டு!

மானிடபிறவியாய் வாழும் என்னிலும் கண்ணன் உண்டு !

கண்ணீர் உதிர்த்து நீ பிரிந்தாய் என்று சொல்வேனோ?

என்னுள் உரைந்த உத்தமன் உனை மறவேனோ?

 

இருவரும் ஒருவராகிவிட்டோம்!

வா போகலாம் !

என் இதழில் நீயும்,

உன் இதழில் நானும்

புன்னகையாய், தமிழாய், அமுதாய் உறைந்திருப்போமாக!

 

விதியெண்ணி அஞ்சாமல்

கண்ணனின் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள் ராதை !

“ ராதே ராதே

வையகம் மட்டுமின்றி

கண்ணனின் அகமும் தெளிந்ததே!

உணர்ந்தேன் நம் நிலை !

இனி இல்லை வேதனை !

அகிலத்திற்கே சாபமிடுகிறேன் கண்ணன் ,

முகிலை வானம் மறந்திடினும்

முனிவனை வேதம் மறந்திடினும்

மூத்தோரை உற்றோர் மறந்திடினும்

மனிதருக்கு, முதல்காதல் மறக்காமல் போகட்டும்!

காலையை பிரியாத மாலை போல,

குழலை நீங்காத கீதம் போல,

ராதையை பிரிவதில்லை கண்ணன் !

இதை அகிலம் உணர்ந்து உரைக்கட்டும்

ராதே கிருஷ்ணா! ராதே கிருஷ்ணா ! ராதே கிருஷ்ணா!”

-முற்றும்- 

Ratha Krishnan kathal - 12

ஹாய் ப்ரண்ட்ஸ்” ராதா கிருஷ்ணன் கவிதைகள்” என்னையும் மீறி எனக்குள் எழுந்த கற்பனைகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை. கற்பனையை தந்த ராதையின் கண்ணனுக்கும் ஊக்கமளித்த நட்புக்கும் நன்றி. விரைவில் சந்திக்கிறேன்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.