(Reading time: 5 - 9 minutes)

என்னுயிராய் நீ! - புவனேஸ்வரி
Mother - Kid bond

ஹாய் ப்ரண்ட்ஸ்! ரெக்க எனும் படத்தில் வரும் “கண்ணம்மா” என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குள் தோன்றிடும் உணர்வுகளை கவிதையாய் எழுதியிருக்கிறேன்.. படிச்சிட்டு சொல்லுங்க

எங்கோ கேட்கும் இன்னிசை,

எனக்குள் எழுகிறது பேரின்பமாய்!

கைவிரல்கள் வயிற்றில் தாளமிட

அடிவயிற்றில் நீ எட்டி உதைப்பது போல பிரம்மை!

உன் பிஞ்சு விரல்களை பிடிக்க எண்ணி

வயிற்றை வருடுகிறேன்,

நான் தாலாட்டுவதாய் எண்ணி உறங்குகிறாயா என் மகனே?

 

மருத்துவர் சொன்ன இனிய செய்திக்குபின்,

என் உலகத்தில் நீயும் நானும் மட்டும் ஓயாமல் அன்பு பரிமாறுகிறோம்!

என் குரல் உனக்கு கேட்கிறதா?

உனக்கு அது இதம் தருகிறதா? அதிர்ந்து பேசுவதாய் தோன்றினால்

சமிக்ஞையாய் உதைக் கொடு,

உடனே மெல்லிய குரலில் பேச தொடங்கி விடுகிறேன்!

 

என் ரசனைகளை பட்டியலிடவா?

உனக்கும் என் உலகத்தின் பரஸ்பரம் முக்கியம் அல்லவா?

உன் அன்னையாகிய எனக்கு ,

மழை பிடிக்கும், மலர் பிடிக்கும்,

தமிழ் பிடிக்கும் அதிலும் கவிதைகளெனில் கொள்ளை பிரியம்!

நட்பென்றால் உயிரைக் கொடுப்பேன்!

பயப்படாதே நீயே என்னுயிர் என்றாலும்,

உன்னை யாருக்கும் தரமாட்டேன்..!

 

நீலமும் பச்சையும் சங்கமிக்கும் நிறம் பிடிக்கும்!

கதிரவன் தரும் கதகதப்பு பிடிக்கும்!

இசை என்பது என் உயிர் நண்பன்!  எனில்,

உனக்கவன் தாய்மாமன்! உனக்கும் அவனைப் பிடிக்கும்

என்பதை இப்போதே அறிகிறேன்..!

என் பிடித்தம் அத்தனைக்கும் ஒரே உருவாய்

என் கண்முன் வலம்வரும் உன் தந்தையை உயிராய் பிடிக்கும்!

நமக்காக வாழும் ஜீவனை என் விழிக்கொண்டு காண்பாய் கண்ணா!

இன்னும் ஆறு மாதங்களுக்கு விடுதலைத் தராமல்

என் பிடித்தங்களை சொல்கிறேன்!

நீ பிறந்ததும் உன் பிடித்தங்களை எனக்கு சொல்வாயாக!

 

நமது சின்னஞ்சிறு குடும்பத்தில்

நீ மிக முக்கிய வரவு!

அப்பா என்ற வார்த்தையின் ஓசை அடங்கி போன இவ்வீட்டில்

மீண்டும் உன் குரலில் அவ்வார்த்தை கேட்கும்!

அம்மா என்று அழைப்பதின் சுகம் நான் அறிவேன்,

அழைக்கப்படுவதின் சுகம் நீ எனக்கு உணர்த்துவாய்!

 

நாட்கள் அதிவேகமாய் நகர ஆசைக் கொள்வேன்,

என்னுள் நர்த்தனம் ஆடிடும் உன்னை

அள்ளி அணைக்க வேண்டுமடா!

நீ எட்டி உதைக்கும்போதெல்லாம்

என் கௌரவமும் ஆணவமும் அடியோடு ஓடிவிடுகிறது!

நீ என் கைகளில் வந்து விட்டால்

என் வாழ்க்கையே புனிதமாகிவிடுமென உணர்கிறேன்!

 

பிரசவ வலியிலும் அதிர்ந்து கத்த மாட்டேன்

நீ அழாமல் என் கையில் சேர்வாயா? 

ஆளை விழுங்கும் உன் கண்களில்

உன் தந்தையும் நானும் தொலைந்து போவோம்!

எங்கள் கைகளில் தஞ்சம் அடைந்த நிம்மதியில்

நீயும் புன்னகைப்பாய் !

 

பலநாட்கள் இதயத்துடிப்பாய் எனக்குள் ஒலித்த

பெயரையே உனது பெயராக்குவேன்!

கை தட்டி, சொடுக்குபோட்டு நான் நடத்தும் சாகசங்கள்

புரியாமல் போனாலும் எனக்காக நீ புன்னகைப்பாய்!

திருமணத்திற்குபின் என்னுள் தொலைந்து போன சிறுமியை

நீயே மீட்டெடுப்பாய்!

 

நீ என் உரிமையாவாய்,

நான் உன் அடிமையாவேன்!

பசியென நீ அழுகையில்,

மார்பில் சுமை கூடிட,

தாய்பாலுடன் ஓடிவருவேன்,

சேய் உன்னை அரவணைப்பேன்!

 

எனதன்பு மகனே,

உன் தந்தையின் சாயலில் பிறந்துவிடு!

அவரின் சிறுவயது குறும்பினை பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை!

அந்த வரத்தை எனக்கு நீ கொடுத்திடுவாய்!

என்னைப்போலவே என் மகன் என்று

உன் தந்தை பெருமை பேசும்போதெல்லாம்

நான் கோபம் போல பாசாங்கு செய்திட வேண்டும்!

 

எத்தனை உறவுகள் சுற்றி நின்றாலும்,

என் கதகதப்பை நீ உணர்வாய்!

எங்காவது ஒளிந்துகொண்டு உன் பெயரை அழைப்பேன்!

என்னைக் கண்டுப்பிடித்து நீ கண் சிமிட்டுவாய்!

 

தத்தி தத்தி நீ நடக்க ஆரம்பிக்க,

முதல்முறையாய் என் இதயம் தடக்கென துடிப்பதை உணர்வேன்!

நீ விழுந்து தானாய் எழுவதை பார்ப்பதற்காகவே

மனதை கல்லாக்கிக் கொள்வேன்!

 

என் மொழி உனக்கு புரியாது,

உன் மொழி எனக்கும் புரியாது

இருப்பினும் இருவரும் பேசுவோம்!

பேசிக்கொண்டே இருப்போம்!

காய்ச்சலென வந்து விட்டால் அதையும்

இருவருமே பகிருந்து கொண்டு

கொஞ்சம் உன் தந்தையின் தலையை உருட்டுவோம்!

 

முதலில் நீ சொல்லும் வார்த்தை எதுவாகினும்,

அது தமிழாகிட வேண்டும்!

அதுவே உன் அன்னைக்கு நீ தரும் பரிசு!

அர்த்தம் புரியாமல் நீ பேசிடும் வார்த்தைகளில்

நான் அகிலத்தை மறந்திட வேண்டும்!

 

நடக்க ஆரம்பித்தவன், இப்போது ஓடவும் தொடங்கி இருப்பாய்!

உன் பெயரை அழைத்துக் கொண்டே துரத்திய பலனாய்

நமது வீடெங்கும் உன் பெயர் எதிரொலிக்க வேண்டும்!

கால்வலியுடன் நான் அமரும்போது நீயும்

என்னைப்போல பாசங்கு செய்திட வேண்டும்!

 

என்றேனும் உனக்கு பெண் வேடம் போட்டு ரசிக்க வேண்டும்!

காலில் கொலுசுடன் நீ ஓடி வந்து சிரிக்கும்போது,

மகன்நீ மகளாக காட்சியளிக்கும் தருணத்தில்

ஓடிவந்து உன்னை தூக்கி சுற்றி முத்தமழை பொழிய வேண்டும்!

நான் கொடுத்த முத்தங்கள் அனைத்தும் இரட்டிப்பாய்

எனக்கு நீ தந்திட வேண்டும்!

 

உன் குறும்புகளை எழுதி வைக்கக் கூட

எனக்கு நேரம் போதாமல் போக வேண்டும்!

நான் இதுவரை எழுதிய படைப்புகள் அத்தனையும்

உன் சிரிப்பின் முன் தோற்று போக வேண்டும்!

என் சேலை உனக்கு வண்ண வீடாக வேண்டும்!

நீ கிறுக்கல்களினால் நம் வீடும் ஓவிய கண்காட்சியாகிட வேண்டும்!

 

கல்வி என்பதும் கலை தான் என்று நான் உனக்கு போதிக்க,

அக்கலையில் உன் திருட்டுத்தனங்களைக் காட்டி நீ சாதிக்க வேண்டும்!

என்றாவது நான் கோபத்தில் கொதித்தால்,

அதன் பொருளை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்!

இதுவரை பாடிய ராகமெல்லாம் மறந்திட,

தினம் உனக்கொரு புதிய ராகத்தில் நான் பாடிட வேண்டும்!

 

தலைவலியென நான் கண் அசந்தால் ,

என் நெற்றியில் உன் இதழ்களின் ஸ்பரிசம் வேண்டும்!

அன்பு மகனே, உன் ஆக்ககர எண்ணங்களுக்கெல்லாம்

ஊக்கமளித்து பாசம் காட்டிட நானிருப்பேன்!

எனது இன்றைய கனவுகளுக்கு உயிர் தர,

வருங்காலத்தில் என்னுயிராய் நீ ஜனிக்க வேண்டும்!

இன்னும் வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாத பரவசங்களுடன்

-உன் அன்னை!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.