(Reading time: 2 - 3 minutes)

குட்டித் தேவதைக்கோர்.... - தங்கமணி சுவாமினாதன்

குட்டித் தேவதைக்கோர்..

கவிதை நான் தருவேன்..

 

உயிரின் உயிரே-எங்கள்

உயிரின் உறைவிடமே..

ஓரடி,ஈரடி மூவடி வைத்துத்

தத்தித் தத்தி நீ தளிர் நடை நடந்திட்டால்...

திருவாரூர் தேர் கூடத்திசைமாறி ஓடிடுமே..

பொக்கை வாய் திறந்து நீ பூப்போல் சிரித்திட்டால்

வண்ணப் பூக்களெல்லாம் வெட்கிப்போயிடுமே..

    வேறு திசை பார்த்திடுமே..

அன்புக்கண்ணே உன் அழகுமுகம் பார்த்தவுடன்..

வானத்துச் சந்திரனும் நாணத்தால் தன்முகத்தை

  மேகத்தில் மறைத்திடுமே..

எங்கள் உயிரில் கலந்த உறவே..உன்னை..

வண்ணனிலவே வானத்து மின்விளக்கே

சின்னப்பூவே சிரிக்கும் மத்தாப்பே..

ஆடும் மயிலே பாடும் குயிலே..

வானவில்லே பறக்கும் பட்டாம் பூச்சியே..

என வாழும் கவிஞரெலாம் வாழ்த்திப்பாடுவர்

வேண்டாம் உனக்கு இந்த வார்த்தை ஜாலங்கள்

       

நீயோ இறைவன் எழுதிய புதுக்கவிதை..

இவ் உலகை மாற்ற வந்த புரட்சிப் புத்தகம் 

வரும் காலம் இனி உந்தன் வலிமைக்கரங்களில்

புதுமை பாரதம் மலரட்டும் உன் திறத்தால்..

 

நட்பண்பு பலவோடு நீ நன் மகளாய்-

வளரவேண்டும்..

கற்றவர் சபைதனிலே உனக்குக் கரகோஷம்-

       எழவேண்டும்..

குறைவற்ற செல்வமதை அந்தக் குபேரன்-

     தரவேண்டும்..

மானமும் வீரமும் உந்தன் குருதியில்-

ஓடவேண்டும்..

தாயும் தந்தையும் உன்னிரு கண்களாய்-

       ஆகவேண்டும்..

பல்லாண்டு பல்லாண்டு நீ -

இப் புவிதனில் வாழவேண்டும்..

வளமும் நலமும் -உனக்குக்

குற்றேவல் புரிய வேண்டும்..

வாழ்வாங்கு வாழ்கவென-உன்னை

இவ் வையகம் வாழ்த்தவேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.