(Reading time: 1 - 2 minutes)

பாம்படத்து பாட்டி - ராஜலக்ஷ்மி

கம்பன் வீட்டு கட்டுத்தறி மட்டுமல்லவே - எங்க 

  பாட்டியம்மா பாம்படமும் கவிபாடுமே!

 

  பல்லு குத்தும்போதும் பாட்டு - அவ 

  நெல்லு குத்தும்போதும் பாட்டு 

 

 நடவு நடுகையிலும் பாட்டு 

 அறுவடையிலும் அவ பாட்டு 

 

 உலக்கையோடு 

 உரலு போடும் 

 ஓசைகேற்பவே - அவ 

 வளத்த காது பாம்படமும் 

 ஆட்டம் போடுதே!

 

 வெறகடுப்பில் சமச்சபோதும் 

 சலிச்சி போகல - அவ 

 அம்மியில அரச்சபோதும் 

 அலுத்து போகல 

 

 சால மீனு கொழம்பு வாசம் ஊர அள்ளுதே - அவ 

 சட்டியில செய்யும் போது எச்சில் ஊறுதே 

 

 அப்பங்கூட சண்ட போட்டு 

 ஆச்சி வீடு தேடி வந்த 

 கோபக்கார பேச்சியையும் - அவ 

 ஆக்கி வச்ச கொழம்பு வாசம் 

 வந்த கோப தாபமெல்லாம் வத்தி போக செய்யுதே

 

வாழ எலைய விரிச்சி போட்டு 

 மத்தியில நரம்ப நசுக்கி 

 வக்கணையா கொழம்ப ஊத்தி 

 பேச்சி ருசிக்கிறா - அவ 

 

 ருசிச்சி ருசிச்சி சப்பு கொட்டும் 

 அழகத்தான அப்பத்தாவும் 

 ரசிச்சி பாக்குறா

 

 எங்க ஆச்சி கைமணம் ஏழூறு எட்டுமே! -  அவ

 பாசத்தோட ஊட்டயில தின்ன வயிறு முட்டுமே! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.