(Reading time: 2 - 3 minutes)

கவிதை - பட்டுப்போனவள் - ராஜலக்ஷ்மி

பட்டுப்போன  பின்பும்  - உனை 

  விட்டுப்  போக  மனமில்லை 

காய்ந்து  போன  பின்பும்  - உனை 

  ஆய்ந்து  போட  மனமில்லை ...

 

என்றேனும்  ஒரு  நாள் - உன் 

  துளிர்க் கரம் நீட்டுவாய் . . .

 

மண்  மீது   தான்  கொண்ட 

  மனக்  கசப்புகளை  மறந்து 

இறுகப் பற்றிக்  கொள்வாய் 

   இசைந்து  உன் வேர்க்கால்களால். . .

 

 சூரியக்  காதலன் - தன்

   கூரிய  கரங்களால்  உனைத் 

       தொட்டுத்   தீண்டிடுவான் 

 

 சுவாசிக்க  மறந்த  - உன் 

   நாசி  துவாரங்கள்  தன் 

நுண்ணிய  கதவுகளை 

   தன்னிச்சையாய்  திறந்து  வைக்கும் 

 

நித்தமும்  நீர்  பாய்ச்சினேன் 

   நின்  மேல்  கொண்ட காதலினால்  - நீ 

புத்துணர்வோடு  விழித்திடுவாய்  - உன் 

   புலன்களை  சோம்பல்  முறிப்பாய் 

 

நாளொரு  மேனியும்  

 பொழுதொரு  வண்ணமுமாய் 

   மெல்ல மெல்ல  புதுப் பொலிவு  கண்டு,

 

வசந்த கால  வருகைக்காக  காத்திருந்து 

 

இயற்கையின்  இன்னொரு  முரணாய் . . .

 

மற்றுமொரு  முறை  பூப்பெய்துவாய்  - உன் 

  மலர்க்  குழந்தைகளை 

    மடியில்  சுமந்திடுவாய் . . .

 

அன்றுனை  நிராகரித்த 

   பட்டாம்பூச்சி  நண்பர்களும் 

ஆசையோடு  வந்தமர்வர் 

   ஓசையில்லாமல்  மலரிதழ்களில் 

 

சிறியதும்  பெரியதும் 

சிவப்பும்  மஞ்சளுமாய் . . .

 

அடர்  நிறத்தில்  பல 

 வெளிர் நிறத்தில்  சில 

 

காலைப்  பனியில்  நனைந்தும் 

மாலை  மதியில்  உலர்ந்தும் 

 

அழகழகாய்  மலர்ந்திடுவாய்  - என்ற 

 ஆழமான  நம்பிக்கையில் ! 

  

                பட்டுப்  போன  பின்பும்  - உனை 

                 விட்டுப்  போக  மனமில்லை . . . 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.