(Reading time: 2 - 4 minutes)

பெண் சுதந்திரம்????? - சிவரஞ்சனி 

Woman

பெண்ணே!
நீ சுதந்திரம் கிடைக்கவில்லை என்கிறாய்!

ஆனால் கிடைத்துள்ள சுதந்திரத்தை ஒழுங்காகப் பயன்படுத்துகிறாயா?

விண்ணில் பறக்க சிறகுகள் வேண்டும் என்கிறாய்!

ஆனால் விண்ணில் பறக்கத் தகுதியான நோக்கம் உன்னிடம் உள்ளதா?

உனது சுதந்திரம் உன் பொறுப்புகளைத் திறந்து,அதனைச் சிறப்பாகச் செய்ய வழிவகை செய்ய வேண்டும்!

ஆனால் நீயோ, 
பொறுப்புகளைத் துறப்பதற்காகவே சுதந்திரம் வேண்டும் என்கிறாய்!

ஓர் ஆண் போல் நடை போடுமளவு சுதந்திரம் வேண்டும் என்கிறாய்!

ஆனால், ஆண்மையின் கம்பீரம்,மிடுக்கு,ஆளுமை இவை உன்னை அடைய நீ தகுதியாக இருக்கிறாயா?

நீ ஏன் ஓர் ஆணாக ஆசைப்படுகிறாய்?
பெண்ணே! நீ பெண்ணாய் இரு!

அடக்கம்,அமைதி,அன்பு,
பண்பு,பரிவு,பணிவு,
பொறுமை,கனிவு,கருணை
இவற்றைத் துறப்பதல்ல சுதந்திரம்!

இவற்றை கம்பீரமாகவும்,மிடுக்குடனும்,
ஆளுமையுடனும் கையாளுவதே சுதந்திரம்!

இவற்றைத் தவிர்த்த எந்த ஓர் ஆணும் நல்ல ஆணாகவோ,எந்த ஒரு பெண்ணும் சிறந்த பெண்ணாகவோ இருக்க முடியாது!

பெண்மை என்பது அழகு!
ஆண்மை என்பது அவசியம்!

நீ உன் அழகையும் துறக்க நினைக்கிறாய்!
அவசியத்தையும் அடைய மறுக்கிறாய்!

இவை இரண்டையும் இணைத்துத் திரியாக்கி,உன்னுள் உள்ள நெருப்பால் இவ்வுலகில் தீபமேற்று!

பெண்ணே!
உன்னை மதிக்க இவ்வுலகம் காத்திருக்கிறது!

ஆனால் நீயோ,உன்னை மிதிக்க வழிவகுக்கும் தவறான சுதந்திர பிரயோகிப்பினை வரவேற்கிறாய்!

என்னடா இவள்! இப்படிக் கூறுகிறாள் என எண்ணாதே!

இன்றைய  தினத்தில் உன்னை நீ உணர வேண்டும்!
இன்னும் உயர வேண்டும்!
அதற்கு உன்னிடமுள்ள குறைகள் நீங்க வேண்டும்!

எது சுதந்திரம் என்று உணராமலேயே,ஏன் சுதந்திரம் தர மறுக்கிறீ்ர் என்கிறாய்!

கொடுப்பதல்ல சுதந்திரம்!
எடுத்துக் கொள்வதுதான் சுதந்திரம்!

கொடுக்கத் தகுந்த சுதந்திரம் தவறானது!
எடுக்கத் தகுந்த சுதந்திரம் முறையானது!

கிடைத்துள்ள கலாக்கனியை பலாக்கனியாக்க முயற்சி செய்!

இல்லாத பலாக்கனியை எண்ணி,இருப்பதை இழந்து விடாதே!

உனது பெண்மை நெருப்பு போன்றது!
அதனை விட்டு நீ வெளியேறினால்,அது உன்னை எரித்துவிடும்!

அந்த நெருப்பினை,நல்லதொரு பூவுலகம் சமைக்கப் பயன்படுத்திக்கொள்!

உன்னை இப்பூவுலகம் பூக்களால் அர்ச்சிக்கும்!!!

பி.கு.  தோழியரே! இதில் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.