(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 23. எலிப்பொறி - Chillzee Team

mousetrap

ரு கிராமத்தில் ஒரு விவசாயி அவனின் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.

அவன் வீட்டில் ஒரு கோழி, ஒரு பசு, ஒரு ஆடு இருந்தது. அதே இடத்தில் ஒரு எலியும் இருந்தது. அவர்கள் நால்வரும் நண்பர்களாக இருந்தார்கள்.

விவசாயியும் அவன் மனைவியும் இல்லாத நேரத்தில் அந்த எலி மற்ற தன் நண்பர்களுடன் வந்து பேசிக் கொண்டிருக்கும்.

ரு நாள் விவசாயி பெரிய பொட்டலம் ஒன்றை கொண்டு வருவதை பார்த்த எலி, அது என்ன என்று தெரிந்துக் கொள்ள வெகு ஆர்வத்துடன் வீட்டில் இருந்த சிறிய ஓட்டையில் தன் சிறிய தலையை விட்டு பார்த்தது.

பெரிய பொட்டலமாக இருக்கிறதே, நண்பர்கள் நான்கு பேருக்கும் கொண்டாட்டம் தான் என்று எண்ணியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எலி, விவசாயியின் மனைவி அந்த பொட்டலத்தில் இருந்து வெளியே எடுத்த பொருளை பார்த்து திகைத்து போனது.

அது ஒரு எலிப்பொறி!

அவ்வளவு தான் எலிக்கு கிலி பிடித்துக் கொண்டது. ஒரே ஓட்டமாக ஓடி தன் நண்பர்களிடம் தான் பார்த்ததை சொன்னது.

அதை கேட்டு மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“எலிப்பொறி இருந்தால் உனக்கு தான் பிரச்சனை, எனக்கென்ன வந்தது...! எனக்கு அதை பற்றி கவலையும் இல்லை அக்கறையும் இல்லை” என்றது கோழி.

“ஆமாம் எலி இது உனக்கு தான் பிரச்சனை எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றது ஆடு.

“உனக்கு இது தேவை தான் எலி.” என்று எக்களித்தது பசு.

தன் நண்பர்களின் பேச்சிலும், சிரிப்பிலும் மனம் நொந்து போன எலி வேறு வழி இல்லாமல் விவசாயியின் வீட்டினுள் இருந்த தன் சிறிய வீட்டை நோக்கி சென்றது.

சிறிது நேரத்தில், ‘டப்’ என்று எலிப்பொறியில் இருந்து சத்தம் கேட்டது.

விவசாயின் மனைவி ஏதோ எலி சிக்கி விட்டது என்று நினைத்து விளக்கு ஸ்விட்சை போடாமலே இருட்டில் அவசரமாக அந்த எலிப்பொறியை எடுத்தாள். அடுத்த வினாடி அந்த எலிப்பொறியில் தன் வால் சிக்கிக் கொண்டிருந்ததால் திகைத்து தடுமாறிக் கொண்டிருந்த பாம்பு அவளைக் கடித்தது.

அவளின் அலறல் கேட்டு ஓடி வந்த விவசாயி அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். சில நாட்கள் சென்ற பின்பும் அவளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவளை மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்தான் அந்த விவசாயி.

அப்போது ஒரு மருத்துவன், கோழி சூப் அவனின் மனைவி உடல் தேற உதவும் என்று சொல்லவும் உடனே தன் வீட்டில் இருந்த கோழியை அடித்து சூப் செய்துக் கொடுத்தான்.

ஆனாலும் அவனின் மனைவியின் உடல் நலத்தில் மாற்றமில்லை.

அவளை பார்க்க என்றே உறவினர் பலரும் வந்தனர். வேறு வழி இல்லாமல் ஆட்டை அடித்து அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தான் அந்த விவசாயி.

நாட்கள் செல்ல அந்த விவசாயியின் மனைவி உடல் நலம் தேறாமல் இறந்து போனாள். விவசாயி துக்கம் தாளாமல் அழுதான்.

இதற்கு மேல் பசுவை தன்னால் பார்க்க இயலாது என்று அதை வேறு ஒரு விவசாயியிடம் விற்று விட்டான். தன்னுடைய புது எஜமானன் பசுக்களை அடித்து துன்புறுத்துபவன் என்று தெரிந்திருந்ததால் கலக்கத்துடன் அவனுடன் சென்றது பசு.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த எலி ஒன்றும் செய்ய இயலாமல் வருத்தத்துடன் இருந்தது.

 

வாழ்க்கை என்பது நம் ஒரே ஒருவரை பற்றியது இல்லை. நாம் ஒவ்வொருவரும் பல வகையில் மற்ற சக மனிதர்களை சார்ந்து வாழ்பவர்கள்.

ஒருவருக்கு கஷ்டம் ஏற்படும் போது எனக்கென்ன என்று சுயநலமாக இருக்காமல் அவருக்கு உதவி செய்யுங்கள், அப்படி உதவி செய்ய இயலாவிட்டாலும் ஊக்கப் படுத்தும் விதமாக பேசி அவருக்கு உற்சாகத்தைக் கொடுங்கள். இன்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையை விட பெரிதாக கூட நமக்கு ஏற்படலாம்!

ஒவ்வொருவரும் மற்றவற்கு உதவி செய்து அன்போடு வாழ்ந்தால் இந்த உலகமே அழகான இடமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை smile.

Story # 22 - Nambikkai

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.