(Reading time: 6 - 11 minutes)

கருத்துக் கதைகள் – 25. மற்றொரு வழி - ஜான்சி

alternative

ஹாய் சில்ஜீ ஃபிரண்ட்ஸ்,

உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். 

இன்றையக் கதையில் நாம் இரண்டு நண்பர்களைச் சந்திக்கப் போகிறோம். 

ஒருவர் பெயர் ரமேஷ், மற்றொருவர் பெயர் சுரேஷ் (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்ல?... எனக்கும் தான்) இரண்டு பேரும் கல்லூரியில் பணி புரியும் ஆசிரியர்கள். சமூகத்தைப் பற்றி மிகுந்த அக்கறைக் கொண்டவர்கள். இவர்களுள் ரமேஷ் மிகுந்த முன் கோபம் உடையவர் ஆனால், சுரேஷ் மிகவும் மனமுதிர்ச்சிக் கொண்ட நிதானமானப் போக்குக் கொண்டவர். 

அன்று இருவரும் பொதுவான ஒரு பிரச்சினையை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எரிச்சலும்,சிடுசிடுப்புமாக ஒட்டு மொத்த இளைஞர்கள் மேல் கோபம் கொண்ட விதமாக ரமேஷின் பேச்சு அமைந்திருந்தது.

இந்த காலத்து பசங்க உருப்படியா எதுவும் செய்யிறது இல்லை. பத்து பன்னிரண்டு வயசுல ஒவ்வொரு பையனுங்க கையிலயும் மொபைல் வந்திடுது. இண்டெர்னெட், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு நேரத்தை வீணாக்கிக் கிட்டு இவனுங்க பண்ணுற அலம்பல் தாங்கல. அது மட்டுமா 18 வயசு முடியறதுக்கு முன்னாடி டூ வீலர் ஓட்டறதும், ஆக்ஸிடண்ட்ல மாட்டுறதும். கைல கிடைச்சா ரெண்டு அப்பு அப்பிடலாமான்னு தோணுது.

"நீ சொல்றது எல்லாம் சரிதான் ரமேஷ், ஆனால் இப்படில்லாம் நாம் செய்ய முடியுமா? செஞ்சா தான் எல்லோரும் திருந்திடுவாங்களா? அப்படியே திருந்தினாலும் உன்னால எத்தனை பேரை திருத்த முடியும்? சொல்லு, அதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி நாம அதிரடியா எதையும் செய்ய முடியாது.ஆனால், நாம நினைச்சா கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி விஷயங்களை மாற்ற முடியும்" என்றார் சுரேஷ்.    

கொஞ்சம் கொஞ்சமாவா............., சுரேஷின் பேச்சில் நம்பிக்கையற்றவராய் முகத்தை திருப்பிக் கொண்டார் ரமேஷ்.

முடியும்பா ....

பதிலே பேசாமல் சுரேஷை ஒரு பார்வைப் பார்த்து நகர்ந்தார்.

சரி ஒரு விஷயம் சொல்றேன் கேளு... என்றவர், தன் கையை ஒரு பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டவராய் அருகிலிருந்த சாக்கடையிலிருந்து சாக்கடை நீர் நிரம்பிக் கிடந்த ஒரு பாட்டிலை எடுத்தார்.

"ச்சீய் என்ன செய்ற நீ? நாத்தம் தாங்கலை, முதல்ல அதைக் கீழப் போடு" என்றவரிடம்,

கொஞ்சம் பொறு... நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன், "இந்த பாட்டில்ல சாக்கடைத் தண்ணியை மாற்றி சுத்தமான தண்ணியா மாற்றனும்னா என்னச் செய்யனும்?

இது ஒரு கேள்வியா? .. என்றவராய் "அந்த பாட்டில்ல இருக்கிறத் தண்ணியை கீழே கவிழ்த்திட்டு, நல்லத்தண்ணியைப் பிடிக்கனும்".. 

"சரி, இப்போ இந்த சாக்கடை தண்ணீர் நிறைஞ்ச பாட்டில்  நம்மைச் சுற்றியுள்ள சமூகம்னு வைத்துக்கலாம்.அது தான் சாக்கடையா இருக்கேன்னு நம்மை மாதிரி ஆட்களால பார்த்துக் கிட்டு இருக்க முடியாது.அதனால தான் இந்த ஆதங்கம் , கோபம் எல்லாம்.

ஆனால் அதே நேரம் நீ நினைக்கிற மாதிரி தடாலடியா அது தான் நீ எல்லா கெட்டத்தண்ணியையும் தலைக் கீழாக் கவிழ்த்திட்டு சுத்தமான தண்ணியை நிரப்பறதுன்னு சொன்னியே அதே மாதிரி ஒட்டு மொத்த சமூகத்தையும் தலை கீழா மாற்றுவது முடியாத காரியம். ஆனால், இதுக்கு இன்னொரு வழி இருக்கு.....

இன்னொரு வழியா?

ஆமாம் இன்னொரு வழிதான்... என்றவரை விசித்திரமாய் பார்த்தபடி நின்றார் ரமேஷ்.

இங்கேப் பாரு... சொன்னவராய், அந்தப் பாட்டிலை பக்கத்திலிருந்த தண்ணீர் குழாயின் கீழே வைத்து தண்ணீர் குழாயை திறந்து விட்டார்.

இருவரும் அமைதியாக பார்த்த படி நிற்க ....

அந்த பாட்டிலில் நல்ல தண்ணீர் சிறிது சிறிதாக நிறைந்துக் கொண்டே வர , அதே நேரம் சாக்கடைத் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அத்தனை சாக்கடைத் தண்ணீரும் வெளியேறி விட பாட்டிலில் மீதமிருந்தது சுத்தமான தண்ணீர்.

பார்த்தாயா ... என்றபடி தண்ணீர் குழாயை மூடிய சுரேஷ்.

நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. ஆனால், நாம் அதை விமர்சிப்பதினாலோ, கோபப் படுவதினாலோ தீர்வு கிடைத்து விடாது.

இன்றைய இளையத் தலைமுறைகளைக் குறித்து நாம் குறைக் கூறுகிறோம்.அவர்கள் அளப்பரிய ஆற்றலும் அறிவும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நமக்கு தெரிகின்றதை விட அதிகமாக தெரிந்து இருக்கிறது. ஆனால், எவ்வளவு விஷய ஞானம் இருந்தாலும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்கிறத் தெளிவு அவர்களிடம் இல்லை.

ம்ம். ஆமோதித்தவராய் சேர்ந்து நடந்தார் ரமேஷ்.

முன்பெல்லாம் தாய்மார்கள் வீட்டைக் கவனித்துக் கொண்டார்கள். பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள முடிந்தது,கண்டிப்புக் காட்ட முடிந்தது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அம்மா அப்பா இரண்டு பேரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. பெற்றோர்கள் தங்களால் கொடுக்க முடியாத கவனிப்பை, தன்னுடைய மன உறுத்தலை நிவர்த்தி செய்கிறதாக எண்ணிக் கொண்டு பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அதை விட இன்னொரு விஷயம் என்னவென்றால் தன்னுடைய பிள்ளைகளை தங்கள் ஸ்டாடஸ் சிம்பலாக பாவிக்கிற பெற்றோர்கள் அதிகம். அவர்களுக்கு எல்லாம் வாங்கிக் கொடுப்பதே தன்னுடைய அந்தஸ்தை பிறருக்கு காட்டுவது என்று எண்ணுகிறார்கள். பெற்றோர்களுக்கே தாங்கள் செய்ய வேண்டியது என்ன் என்று புரியாவிட்டால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்?!.

வீட்டில் தான் இப்படியென்றால் வெளி உலகத்தில் என்ன நடக்கின்றது? எதாவது நல்லக் கருத்துக்களை சொல்லும் விதமாக பொழுது போக்குகள் இருக்கிறதா? நல்லத் தலைவர்கள் இருக்கின்றார்களா?  நல்லச் செயல்களைத் தூண்டும் அமைப்புக்கள் இருக்கின்றதா என்றால் எதுவும் இல்லை. 

சரி அப்படியென்றால் நாம் இதற்கு என்னச் செய்யலாம் என்றுச் எண்ணுகின்றாய்? குறுக்கிட்டார் ரமேஷ்.

நாம் எத்தனையோ விஷயங்களைச் செய்யலாமே...நல்ல விதமாக இளைஞர்களை வழி நடத்த, நல்லப் புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டலாம். உலகின் சிறந்த விஷயங்களை அறிந்துக் கொள்ள அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். நல்லொழுக்கங்களை பின்பற்றச் செய்யலாம். முன்பெல்லாம் ஆசிரியப் பணியை சேவையாகச் செய்தார்கள். இப்பொழுதோ அது எல்லாவற்றையும் போல மற்றொரு வேலையாக மாறி விட்டது.

நல்லவற்றை தினம்தோறும்  நம் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தி வந்தால், இந்த தீமைகள் எல்லாம் அந்த பாட்டிலிலிருந்த சாக்கடை நீரைப் போல கொஞ்சம் கொஞ்சமாக அகன்று மறைந்து விடுமே.

நம்முடைய நாட்டின்  மக்கள் ஒவ்வொருவரும் பிறரிடம் குறைகள், குற்றங்களைக் கண்டு பிடிப்பதை விட்டு விட்டு  நம்மாலான சின்னச் சின்ன நல்ல விஷயங்களை செய்வதாக இருந்தால் எவ்வளவோ நன்மை விளையும். நான் சொல்வது சரிதானே?

கேட்ட சுரேஷிடம் புன்முறுவலோடு ஆமோதித்தார் ரமேஷ்.

சரி, அப்படியென்றால் நாம் முதலில் நமது வகுப்பு மாணவர்கள், அக்கம் பக்கத்திலிருக்கும் சின்னஞ் சிறார்களிடமிருந்து ஆரம்பிக்கலாமா?

நிச்சயமாக... 

நண்பர்கள் இருவரும் நல்ல நோக்கங்களை நிறைவேற்ற தீர்மானித்தவர்களாக இணைந்து நடந்தனர்.

 

கதை சொல்லும் கருத்து:

இருளை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது நலமானது.

Don't curse the darkness, light a candle!

 

Story # 24 - Neram thavara vittaal

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.