(Reading time: 4 - 7 minutes)

கருத்துக் கதைகள் – 32. வாழ்வில் சிக்கனம்..தேவை இக்கணம்... - தங்கமணி சுவாமினாதன்

miser

ரு ஊரில் வேலுச்சாமி என்பவன் இருந்தான்.அவன் மிகவும் கருமி.உலோபி.எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டான்.அறுந்த கைக்கு சுண்ணாம்பு தரமாட்டான்.ரொம்ப ரொம்ப கஞ்சன்.ஏன் அவனை ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய கஞ்சன் என்று கூட சொல்லலாம்.அவ்வளவு மோசமான கஞ்சன்.ஒரு ஆழாக்கு சாதத்தை தினமும் வேளைக்கு இரண்டு பருக்கையாக உண்பான்.அவன் மனைவி வயிற்றுக்குச் சோறின்றியே இறந்தாள் என்று தெரிந்தவர்கள் சொல்லுவர்.அந்த அளவு கஞ்ச மகா பிரபு அவன்.

அந்த கஞ்சனுக்கு திருமண வயதில் ஒரு மகன் இருந்தான்.அவன் தந்தையைப் போலவே தனயன் என்று சொல்லும்படியாக ஏன் தந்தையையே மிஞ்சும் வண்ணம் மகா கருமியாக இருந்தான்.இவனின் கஞ்சத்தனத்திற்கும் அளவே இல்லை.

ஒரு நாள் கஞ்சன் வேலுச்சாமி தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி புறப்பட்டான்.வழியில் சாப்பிடவேண்டுமே என எண்ணி ஒரு துண்டின் மூலையில் மிகச் சிறிய கிண்ணத்தால் அரிசியை அளந்து போட்டு அதை இறுகக் கட்டி தோளில் போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினான்.

வெகு தூரம் நடந்ததால் அவனுக்குக் களைப்பாய் இருந்தது. வழியில் ஆறு ஒன்று இருப்பதைக் கண்ட கஞ்சன் ஆற்றுத்தண்ணீரில் முகம் கழுவி தண்ணீர் குடித்தான்.அவ்வாற்றங்கரையிலேயே சிறிது நேரம் இளைப்பாற எண்ணி அமர்ந்து கொண்டான்.

அதே வேளையில் இன்னொரு ஊரில் கஞ்சன் வேலுச்சாமி போலவே அவனுக்குச் சற்றும் குறையாத அளவில் மற்றொரு மகா மகா கஞ்சன் இருந்தான்.அவனுக்கு திருமண வயதில் பெண் ஒருத்தி இருந்தாள்.

அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டி அவன் கஞ்சன் வேலுச்சாமி போலவே ஒரு துண்டில் ஓர் ஆழாக்கு அரிசியைக் கட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவனும் வேலுச்சாமி அமர்ந்திருந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான்.இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.ஒருவர் பற்றி இன்னொருவர் தெரிந்து கொண்டனர்.இருவரும் சம்பந்தி ஆவது என முடிவுக்கு வந்தனர்.

திடீரென பெண்ணைப் பெற்றவன் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் உணவு உண்டுவிட்டு வருவதாகவும் சொல்லி தோளில் மாட்டியிருந்த அரிசி இருக்கும் துண்டை எடுத்துக் கொண்டு தண்ணீரின் அருகில் சென்றான்.இடது கையில் துண்டைப் பிடித்துக் கொண்டு அரிசி இருக்கும் பகுதியைத் தண்ணீரில் முக்கினான்.முக்கிய பின் அத் துண்டை மேலே தூக்கினான்.தண்ணீரில் மூழ்கி எழுந்த அரிசிப் பகுதியிலிருந்து தண்ணீர் வழிந்தது.அப்படி வழிந்த தண்ணீரை வலது கையால் ஏந்தி ஏந்திக் குடித்தான்.

போவ்..என்று ஏப்பம் விட்டபடி தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

இவன் செய்ததையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்த கஞ்சன் வேலுச்சாமியின் முகம் மாறிவிட்டது.

வேலுச் சாமி இவன் முகம் பார்த்து உன் மகள் என் வீட்டிற்கு மருமகளாய் வருவதில் எனக்கு விருப்பம் இல்லை...நீ மிகவும் செலவாளியாக இருக்கிறாய்.இது என் குடும்பத்திற்கு சரிப்படாது. உன்னைப்போலவே தானே உன்மகளும் செலவாளியாக இருப்பாள்.எனவே இந்த சம்பந்தம் வேண்டாம் என்றான்.

பெண்ணைப் பெற்ற கஞ்சனுக்கு மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது.நான் என்ன தவறு செய்து விட்டேன்? சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். என் மகளை உங்கள் மருமகளாக்கிக் கொள்ள மறுக்காதீர்கள் எனக் கெஞ்சினான்.

சரி..போகட்டும்...நான் எப்படி என் உணவை உண்கிறேன் எனப் பாருங்கள் எனச் சொல்லி தண்ணீரின் அருகில் சென்றான்.தனது அரிசி இருக்கும் துண்டை இடது கையால் பிடித்து தண்ணீருக்கு மேலே காண்பித்தான்.துண்டில் கட்டியிருந்த அரிசி முடிச்சின் நிழல் தண்ணீரில் தெரிந்தது.தண்ணீரின் மேல் தெரிந்த அரிசி முடிச்சின் நிழல் பகுதியில் தெரிந்த நீரை வலது கையால் அள்ளி அள்ளிக் குடித்தான்.ஆஹா.. வயிறு நிரம்பி விட்டது எனச் சொல்லியபடி வயிற்றைத் தடவியபடியே பெண்ணைப் பெற்ற கஞ்சனிடம் வந்தான்.

அவனோ ஆஹா.ஆஹா..பிரமாதம் பிரமாதம் உங்கள் செயல் என்னை திகைப்படைய வைத்துவிட்டது.

இவ்வளவு நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே. இனி நானும் உங்களை போலவே நடப்பேன். என் மகளையும் இவ்வாறே நடந்து கொள்ளும் படி அறிவுறுத்துவேன் என்றான்.

இவனின் பதிலால் மகிழ்ந்து போன கஞ்சன் வேலுச்சாமி அவனின் மகளை மருமகளாக்கிக்கொள்ளச் சம்மதித்தான்.எப்பேற்பட்ட கஞ்சன்கள் இவர்கள்.வாழ்க்கையில் சிக்கனமாக இருக்கலாம்.அது மிகவும் நல்லது.ஆனால் இவ்வளவு கஞ்சத்தனமாக இருத்தல் கூடாது.என்ன சரிதானே..?

 

கதை சொல்லும் கருத்து:

சிக்கனத்தைக் கடைபிடித்தல் மிகவும் நல்லது.அதற்காக கஞ்சத்தனம் கூடாது.....நன்றி..

Story # 31 - Enni thuniga

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.