(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 48. வாழ்க்கைக்கு அழகான தர்க்கம் - வின்னி

Enjoy life

றப்பு மிகுந்த கோபத்தில் இருக்கிறது!

ஏன் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்? ஏன் என்னை நெருங்க அவர்கள் அஞ்சுகிறார்கள்?

 அவர்கள் ஒரு நாள் என்னை அடைய வேண்டும் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லையா?

உலகில் அவர்கள் வாழ்வது சிறிது காலம்! அந்த வாழ்க்கை மறையப் போவதை நினைத்து அவர்கள் ஏன் வேதனைப்படுகிறார்கள்? உறவுகளை விட்டுப் பிரிய அவர்கள் ஏன் தயங்குகிறார்கள்?

அவர்கள் இறந்ததும், உறவினர்கள் ஏன் அழுகிறார்கள்? 

ஏன் மறுபிறப்பு என்ற கற்பனையில் இருக்கிறார்கள்?

ஏன் இன்னும் வாழ்க்கையின் தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள்? இறந்த பிறகு அவர்கள் அவற்றை எங்கும் கொண்டு செல்வதில்லையே? நான் உயிரைத்தவிர ஒன்றையும் கேட்பதில்லையே!  உயிரை எடுக்காமல் இருக்க நான் அவர்களிடம் லஞ்சம் கேட்பதில்லையே! சொந்தம், பந்தம்,  கிராமம், நகரம், நாடு, சாதி, சமயம், மொழி, ஏழை, பணக்காரன் என்று எத்தனையோ அர்த்தமில்லாத பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஏன் என்னிடம் தமது பயத்தைக் காட்டுகிறார்கள்? 

அவர்கள் பிறக்கும் போது இருந்த சந்தோசம், இறக்கும்போது ஏன் அவர்கள் சொந்தங்களிடம் இல்லை?

இறப்பு இப்படிப் பல கேள்விகளால் குழம்பிப் போய் இருக்கிறது! மண்டை வெடித்து தனக்கும் இறப்பு வந்து விடுமோ என்ற சந்தேகம், அதன் மனதில் எழுகிறது!

“எனது சந்தேகங்களை வாழ்க்கையிடம் கேட்டால் என்ன?”, இறப்பு யோசிக்கிறது. அதற்கு அந்த பூமிக்குப் போகவேண்டுமே!

“எங்கு போர் நடக்கிறதோ? அங்குதான் எனக்கு வேலை அதிகம். ஆனால், போர் இருக்கும் இடத்தில் வாழ்க்கை இருக்காதே!”

நான் வாழ்க்கையை எடுப்பதில்லை உயிரைத்தானே எடுக்கிறேன்!

இறப்பு, சீரியாவில் இருக்கும் எலேப்போவை அடைகிறது. குண்டுகளால் சிதறிப் போய் இருக்கும் அந்நகரில் பதுங்கி இருக்கும் வாழ்க்கையைக் கேட்கிறது,

"ஏன் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள், ஆனால்  உன்னை நேசிக்கிறார்கள்?"

அதற்கு வாழ்க்கை கூறியது,

"நான் ஒரு அழகான பொய், நீ ஒரு வேதனை கொடுக்கக்கூடிய உண்மை",

வாழ்கை மேலும் விளக்கிக் கூறியது:

பிறக்கும் பொது வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது, ஒருவரும் மரணத்தைப் பற்றி யோசிப்பதில்லை.  

இளமையில் நேரமும் சுறுசுறுப்பும் இருக்கும், பணம் இருக்காது. காலம், விளையாட்டிலலும கல்வியிலும் கழிந்துவிடும்.

உழைக்கும் வயதில் பணமும் சுறுசுறுப்பும் இருக்கும் நேரம் இருக்காது. 

வயோதிபத்தில்  பணமும் நேரமும் இருக்கும் சுறுசுறுப்பு இருக்காது. 

வாழ்க்கை ஒரு உல்லாசப் பிரயாணம்! ஆனால் வாழ்க்கையும், இறப்பைப்போல் ஒருமுறைதான் வரும்.

மானிடர் உயிரில் சொந்தங்களை வைத்துக் கொள்கிறார்கள், சொந்தங்களில் உயிரை வைப்பதில்லை. 

தூரத்தில் அரசியல்வாதிகளும் வெவ்வேறு மொழிகளில் பேசுவது கேட்கிறது. “அவர்களும் ஒருநாள் என்னிடம்தான் வரவேணும்”  என்று வாழ்க்கையிடம் கூறி, இறப்பு தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு, அங்கிருந்து புறப்படுகிறது. 

வழியில் சிலர் முனங்குவது கேட்கிறது. அது ஒரு வயோதிபர் இல்லம்.அங்கிருப்பவர்கள் இறப்பைக்  கண்டதும் "எங்களை உன்னுடன் அழைத்துச் செல்ல வந்துவிட்டாயா?” என்று சஆவலுடன் கேட்கிறார்கள்.

அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள், இறப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள். உறவுகளால் கைவிடப்பட்டவர்கள்.

இறப்புக்கு வாழ்க்கையின் உண்மை புரிகிறது.

வாழ்க்கையைப் பார்த்து புன்னகைத்தபடி, மேலும் உயிர்களை எடுக்காமல்,  அங்கிருந்து நகர்கிறது.   

Story # 47. Verupatta iru kanottangal

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.