(Reading time: 11 - 21 minutes)

முதலில் பாடலை ரசித்த நிலா அதன் அருகேச் சென்றதும் அதன் பாடல் வரியில் சொல்லியிருப்பது போல விளையாட்டாக அந்த மரத்தை அன்பாக இருக் கரத்தாலும் அணைத்து அசைத்தாள். உடனே அந்த மரத்திலிருந்த வெண்ணிற முத்துக்கள் சிந்தின. மிகவும் மகிழ்ச்சியோடு அமைதியாக அவற்றைப் பொறுக்கிக் கொண்டவளாக தன்னுடைய பாவாடையின் பையில் அதை வைத்துக் கொண்டாள்.

தான் அங்கு வந்த வேலையான தொலைந்த குடத்தைத் தேடும் வேலையில் ஈடுபட்டாள். அக்கம் பக்கம் எங்கேயும் குடத்தைக் காணவில்லை. அந்த மரத்தை விட்டு முன்னேறிச் சென்றாள். அங்கு ஏதோ முனகும் குரல் அவளுக்கு கேட்டது. யார் முனகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவள் முன்னேறிச் சென்றாள்.

சற்றுத் தொலைவில் ஒரு வயதான தாத்தா குளிரில் விறைத்தவாறு நின்றுக் கொண்டிருந்தார். அவர் உடம்பைச் சுற்றி பனிப் படலமாக படர்ந்து இருந்தது. குளிரில் பரிதாபமாக அவ நடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவசரமாக அவரிடம் போய் நின்றாள். அவரது மூக்கு, கண்கள், காதுகள் தவிர மற்ற எல்லாமும் பனியால் மூடப்பட்டு இருந்தது. இப்போது என்னச் செய்ய வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.

தாத்தா அவளிடம்,

“பாப்பா, எனக்கு உதவி செய்” என்றுச் சொன்னார்.

“நான் என்னச் செய்ய வேண்டும் தாத்தா?” என்று அவள் விசாரித்தாள்.

“நான் கொஞ்சம் தூங்கியதும் இந்த பனி என்னை மூடிக் கொண்டது, நான் வயதானவன் அதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்கத்தில் இருக்கும் உளி மற்றும் சுத்தியல் கொண்டு என் உடலில் இருக்கும் பனியை உடைத்து எனக்கு உதவி செய். கவனமாகச் செய், இல்லாவிட்டால் என் உடலில் பட்டு விடும் என்றுக் கூறினார்.

நிலாவோ தாத்தா கூறியபடி உளியை சாய்வாக வைத்து சுத்தியல் கொண்டு மெதுவாக அடித்து தாத்தாவின் உடலில் இருந்த பனிக் கட்டிகளை அகற்றினாள். அதற்கு மிகவும் நேரமானது.

பனி அகன்றதும் தாத்தா குளிரில் நடுங்கினார். "எனக்கு சாப்பாடு செய்து தருவாயா பாப்பா, சாப்பிட்டால் தான் எனக்கு குளிரின் வெட வெடப்பு குறையும்" என்றுக் கேட்டார்.

அவருக்கு தேவையான கம்பளி கொண்டு அவரைப் போர்த்தி விட்டு அங்கிருந்த சமையலறையில் சென்று அங்கிருந்த அரிசி, பருப்பைக் கொண்டு சாதம் வடித்து , பருப்புக் குழம்பை வைத்து அவருக்கு சாப்பிடக் கொடுத்தாள். வீட்டில் சமையல் செய்து பழகியிருந்ததால் அவளுக்கு அப்போது உணவு தயாரிக்க அதிகம் நேரம் எடுக்கவில்லை.

தாத்தாவிற்கு அந்த சாப்பாட்டை உண்ட பின்னர் குளிர் விட்டு விட்டது. அவர் நிலாவிடம் பேசி அவள் எதற்காக கிணற்றின் உள்ளே வந்தாள் என்று தெரிந்துக் கொண்டார்.

“ஓ உன் குடத்தை தேடி வந்திருக்கிறாயா?... சரி சரி என்னுடன் வா” எனச் சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டுச் சென்றார். சற்றுத்தூரம் சென்ற பின்னர் ஒரு அறை வந்தது.

“கிணற்றில் யார் எதை தவற விட்டாலும் இந்த ஸ்டோர் ரூமில் வந்து சேர்ந்து விடும்” என்றுச் சொல்லி ஒரு அறையைத் தன்னிடம் இருந்த சாவியால் திறந்தார்.

அதனுள்ளே மலைப் போல குவிந்திருந்த பொருட்களைப் பார்த்த நிலா ஆவென வாயைப் பிளந்தாள். எத்தனையோ குடங்கள், வாளிகள், கைக் கடிகாரம், நாணயங்கள் என மக்கள் கைத்தவறி கிணற்றில் தவற விட்ட பற்பல பொருட்கள் அங்கே நிறைந்துக் கிடந்தன.

“நிலா பாப்பா உன் குடத்தைப் போய் எடுத்துட்டு வா…..” என்று தாத்தா சொல்லவும் அந்த மலைப் போன்ற உயரமான குவியலில் ஏறி தன்னுடைய குடத்தை எடுத்துக் கொண்டு நிலா திரும்பினாள்.

“ அப்போ நான் வரேன் தாத்தா, குளிர்ல கவனமா இருங்க” எனச் சொல்லி நிலா விடைப் பெற்றாள். தாத்தா அவளுடைய குடத்தில் ஏதோ ஒன்றைப் போட்டார்.

“உன்னுடைய வீட்டுக்குப் போய் அது என்னவென்றுப் பார் என்றுக் கூறினார்.

“சரி தாத்தா” என்றவளாய் விடைப் பெற்றுச் சென்றாள். கிணற்றில் ஏறும் போது குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஏறினாள். அப்போது விடிந்திருந்தது.

வீட்டில் கலாவை பாட்டி மிகவும் கஷ்டப் பட்டு எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும், அவள் எழும்பவில்லை. கொண்டு வந்த தண்ணீரை வீட்டிலிருந்த பாத்திரங்களில் ஊற்றியவள் கடைசியில் குடத்தின் அடியில் கல் போல ஏதோ ஒன்று தட்டுப் படவே அது என்னவென்று எடுத்துப் பார்த்தாள். அந்தக் கல்லை கையில் எடுத்ததும் வீடே ஒளி வெள்ளமாகியது. பாட்டி அவளருகே வந்து அதை என்னவென்றுப் பார்த்தார். அவருக்கு உடனே அது என்னவென்றுப் புரிந்து விட்டது.

“நிலாம்மா, இது வைரம். இவ்வளவு பெரிய வைரம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்றுக் கேட்க, அவள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். வியப்பும் ஆச்சரியமாக பாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். தூக்கத்திலிருந்து எழுந்து வந்த கலாவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சில நாட்களிலேயே அவர்கள் வீட்டின் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து போய் விட்டிருந்தது. தான் கொண்டு வந்திருந்த முத்துக்களைக் கோர்த்து அக்காவுக்கும் தனக்கும் மாலைகள் செய்துக் கொண்டாள் நிலா.

பாட்டி எப்போதும் நிலாவை பாராட்டி பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் தங்கையைக் குறித்த பாராட்டைக் கேட்டு கேட்டு கலாவிற்கு எரிச்சலாக இருந்தது. தானும் இப்படி ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அவளுக்கு வந்து விட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.