(Reading time: 3 - 5 minutes)

தற்கொலை - பவித்ரா

Tharkolai

வன் அந்த மிகப்பெரிய நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில், அவனுடைய ஓட்டை டிவிஎசின் மேல் அமர்ந்திருந்தான். தன்னுடன் சேர்ந்து அதுவும் உயிர் வாழ தகுதியற்றது என்பது அவன் கருத்து. மிகப்பெரிய சாலையாக இருந்தது. நேராக சென்றால் பெங்களூர் வந்து விடுமாம். யாரோ சொன்னார்கள். ஆனால் அவன் பெங்களூர் செல்ல வரவில்லை, யமனுலகம் செல்ல விரும்பினான். பெரிய பெரிய லாரிகளும், பஸ்களும், சரெல் சரெலென அவனை கடந்து சென்றுக் கொண்டிருந்தன. அப்படி வரும் லாரிகளில் ஒன்றின் மேல் மோதித் தான் உயிர் விட வேண்டுமென்று அங்கே நின்றிருந்தான்.

அவனுக்கு காதல் தோல்வி இல்லை, கடன் தொல்லை இல்லை. ஆனால் உடுத்திக் கொள்ள ஏதோ ஒன்றிரண்டு கிழிசல்களையும், ஒரு வேளை உணவுக்கு உண்டான சில்லறையையும் தவிர அவனிடம் எப்போதும் காசு இருந்ததில்லை. தினம் ஒரு வேலையும், கால் வயிறு உணவும் அவனை சித்ரவதை செய்தன. அவனை தேவை இல்லாமல் படைத்து விட்டதாக கடவுளை அடிக்கடி திட்டினான். இன்று முடிவு செய்து விட்டான். கடவுளிடம் நேராக சென்று முறையிடுவதற்க்கு.

அங்கு வந்து நின்று கால் மணி ஆயிற்று. தூரத்தில் வரும் லாரி தான் என்று முடிவு செய்கையில், அருகில் நிழலுருவம். பின் சந்திலிருந்து, சைக்கிளில் ஒருவன் வந்திருந்தான். சலித்துக்கொண்டான். நிமிடங்கள் கடந்தன.

உச்சிவெயில். வியர்வை வழிந்து சட்டை நனைந்தது. நா வரண்டது. கொஞ்சம் இளனீர் அல்லது தண்ணீர் கிடைத்தால் தேவலை. ச்சே.. னொந்துக்கொண்டான். சாவதற்கு முன் எதற்கு தண்ணீர்? ஹாண்டிலை பிடித்திருந்த கை தளர்வது போல் தோன்றியது. நடுக்கமா? ஒரு வேளை பயமோ? இருக்காது. வெயிலினால் வரும் மயக்கமாய்த்தான் இருக்க வேண்டும். இனி தாமதிக்கக்கூடாது. திரும்பி ஒருமுறை சைக்கிள்க்காரனைப் பார்த்தான். பின் முடிவு எடுத்தவன் போல், ஹாண்டிலை இருகப்பற்றினான்.

க்றீச்.....!!!!

கீழே விழுந்திருந்தவன் மேல் அந்த சைக்கிள். சுற்றி பார்த்ததில் புரிந்தது. பின்னால் சந்திலிருந்து வேகமாய் வந்த பைக் ஒன்று சைக்கிளை இடித்து, சைக்கிள்க்காரன் அவன் மேல் சாய்ந்து, விழ செய்திருந்தான். விழுந்த வேகத்தில், சைக்கிள் கம்பி அவன் கையை நன்றாக பதம் பார்த்திருந்தது. அவனுடைய வண்டி அவனைவிட அதிகம் பாதிப்படைந்திருந்தது.

கை லேசான வீக்கத்துடன் விண்விண்னென்றது. ரத்தம் கட்டியிருக்கிறது போலும். பசி தாகத்துடன், விழுந்த அதிர்ச்சியும், வலியும் அவனைக் கொன்றன. கண்கள் இருட்டுவது போல் தோன்றின. சூழ்ந்துக்கொண்ட சிலர் பைக்காரனை திட்டுவது கேட்டது.

“என்னப்பா நீ? சைக்கிளாய் இருக்கப்போய் சார் சின்ன அடியோடு தப்பிச்சாரு, இதுவே பெரிய வண்டியா இருந்தா என்ன ஆயிருக்கும்?”

அவனுக்கு என்னவோ செய்தது. எழுந்து கைக்காலை உதறிக்கொண்டான். வண்டியை சரி செய்ய எப்படி பணம் சம்பாதிப்பது என யோசித்துக்கொண்டே, அருகிலுருந்த இளனீர் கடையை நோக்கிச் சென்றான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.