(Reading time: 9 - 18 minutes)

போகி - நிலாவதனி

போகி

ஹையா..ஜாலி ஜாலி...எனக்குதான் நெக்ஸ்ட் வீக் புல்லா லீவே...ஹேய்ய்ய்ய்...” என்று கூவிக்கொண்டே ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே வந்தாள் அந்த வீட்டின் குட்டி தேவதை திவ்யா.

“பாத்து வாடா..விழுந்திடாத..என்ன திவிக்குட்டிக்கு இவ்வளவு சந்தோஷம்”என்றவாறே தன் காலைக் கட்டிக்கொண்ட பேத்தியைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

“ஹய்யோ பாட்டி, எனக்கு இன்னும் டூ டேஸ் மட்டும் தான் ஸ்கூல்..அப்புறம் ஒன் வீக்...செவென் டேஸ் ஹாலிடே..ஜாலி டே பாட்டி”என்றவாறே பாட்டியையும் சேர்த்து தட்டாமாலை சுற்றத் தொடங்கினாள் திவ்யா.

“ஏய்..குட்டி என்ன இது..இப்படிப் பண்ணினா உன் பாட்டி கீழ விழுந்திடுவா..தலை சுத்தும்மா...விடு..விடுடா கண்ணு..”தாத்தாவின் குரல் கேட்டதும் திவ்யா பாட்டியை விட்டு தாத்தாவிடம் வந்தவள், “தாத்தா, எனக்கு ரொம்ப நாள் லீவ் விட்டா உங்க ஊருக்குப் போலாம்னு சொன்னீங்களே..அப்ப போலாம் தாத்தா..ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்சத் தொடங்கினாள்.

அவளைத்தூக்கி மடியில் இருத்திக்கொண்ட தாத்தா, “ போலாண்டா கண்ணு, போலாம்..ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஹோம் வொர்க் முடிக்கணும்..அம்மாகிட்ட சொல்லணும்..அப்பா கிட்ட போறதுக்கு பெர்மிஷன் கேக்கணும்..எவ்ளோ வேலை இருக்கு..செய்வோம் சரியா?” என்று மனைவியைப் பார்த்தவாறே சொன்னார் பெரியவர்.

அவரின் பார்வையை சரியாய்ப் புரிந்து கொண்ட பாட்டியும், பேத்தியிடம், “ஆமாண்டா கண்ணா,,ஊருக்குப் போறதுக்கு அம்மா கிட்ட, அப்பாகிட்ட எல்லாம் கேட்டுக்கிட்டுப் போகலாம்..இப்பதானே நீ ஸ்கூல்ல இருந்து வந்த..போய் கை கால் கழுவிட்டு டிபன் சாப்பிட்டு வா..அப்புறமா நாம பேசலாம்..சரியா? என்று சொல்லவும் உள்ளிருந்து அனைத்தையும் கேட்டவாறே திவ்யாவின் அன்னை,பெரியவர்களின் மருமகள்  பிருந்தா வெளிவரவும் சரியாய் இருந்தது.

“ஏய்..திவ்யா..எத்தனை தடவை சொல்றது உனக்கு..ஸ்கூல்ல இருந்து வந்ததும், அழுக்கோட இருக்கக் கூடாதுன்னு..வந்ததும் வராததுமா என்ன அரட்டை வேண்டியிருக்கு..போ போயி ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றவள், பெரியவர்களைப் பார்த்து,”அவளுக்குத்தான் தெரியாது..நீங்களாவது உடனே கழுவ அனுப்பி விடலாம்ல..எவ்வளவோ கிருமிங்க வெளில இருக்கு..அதோட குழந்தை இருந்தா என்ன ஆகும்னு அறிவு வேண்டாம்..இதுல வேற ஊருக்குக் கூட்டிப்போறிங்களாக்கும்..எப்பப் பாத்தாலும் ஊரு ஊருன்னு பட்டிக்காட்டுப் பழக்கத்த என் புள்ளைக்குத் திணிக்கப் பார்க்கறீங்களா?இதோ பாருங்க..என் பொண்ணு இந்த லீவுக்கு எங்க அம்மா வீட்டுக்குப் பங்களூருக்குத் தான் போவா..நாங்க போறோம்.முடிவு பண்ணியாச்சு..இதைக் கலைக்கப் பாத்திங்கன்னா நிரந்தரமா உங்க கிராமத்தையேக் கட்டிக்கிட்டு அழ வேண்டியதாயிருக்கும..பாத்துக்கோங்க” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட, பெரியவர்கள் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து விட்டனர்.

பெரியவர்கள் இருவரும் தஞ்சைப் பக்கம் ஒரு சிறு கிராமத்தில் இருந்து தன் மகன் ரமேஷின் மேற்படிப்பிற்காக, இருந்த நஞ்சை புஞ்சைகளை, அசையாச் சொத்துக்களை விற்று விட்டு நகரத்திற்குக் குடி பெயர்ந்தவர்கள்.தங்களிடம் இருந்த அனைத்தையும் மகனிற்காக இழந்தவர்கள், மகனை மருமகளிடம் முழுதுமாக இழந்துவிட்டதுதான் நிஜம்.அவர்களின் ஒரே ஆறுதல் பேத்தி திவ்யா மட்டுமே..அவளுக்கு இவர்களிடம் அலாதிப்பிரியம்..ஏழு வயதான போதும் வயதிற்கு மீறிய பக்குவமும் முதிர்ச்சியும் இயல்பாகவே இருந்தது.வார இறுதி விடுமுறை முடிந்து திரும்ப பள்ளி தொடங்கும் முதல் நாள் மட்டும் சற்றே அடம் பிடித்து, முகத்தில் சுணக்கம் காண்பிக்கும் அவள் அப்புறம் வரும் நாட்களில் இறக்கை கட்டிய பட்டாம்பூச்சியாய் வலம் வருவாள். பிருந்தாவும் வேலைக்குச் செல்வதால், தாத்தா பாட்டியின் செல்லம் அவள்..ஆறுதலும் அவளே..

பிருந்தாவைப் பொறுத்தவரை, பெரியவர்களுக்கு ஏதோ இரண்டு வாய் உணவிடுவதை மட்டும் கடமையாக நினைப்பவள்.அவளும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் எல்லா  வேலையும் அவர்களிடம் வாங்கிவிடுவாள்.வயதானால் தள்ளாமையும் வரும்.அவர்களுக்கென்று சிறு சிறு விருப்பங்களும் உண்டு என்று நினைக்கமறந்துவிட்ட மருமகள் அவள்..

பெரியவர்களுக்கு சொத்து சுகம் இல்லையென்றாலும் கிராமத்து ஏழை இதயங்கள் அவர்களுக்குப் பட்டுக்கம்பளம் விரித்து அரவணைக்கக் காத்துக் கிடக்கின்றன.தாங்கள் வாழ்ந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புவது தெரிந்தும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு வீட்டுக்குக் காவலாக வைத்து விடுவாள் பிருந்தா.

 

பெரியவர்கள் தங்கள் விருப்பம் இந்த முறையும் நிறைவேறப்போவது இல்லை என்ற கவலையில் ஆழ்ந்திருக்க, பிரெஷ் ஆகி வந்து அமர்ந்தாள் அவர்களின் செல்லப் பேத்தி.

பள்ளிக்கதைகளை சொல்லிக்கொண்டே வந்தவள், “தாத்தா, எனக்கு இந்த தடவை நிறைய கரும்பு வேணும் தாத்தா..என் பிரெண்ட் வீட்டுல இப்பவே வாங்கிட்டாங்களாம்.நாம எப்போ வாங்குவோம்..உங்க ஊரில கரும்பு நிறைய கிடைக்குமா தாத்தா? என,

“அது..கிடைக்கும் ம்மா...அப்பா வந்ததும் நாமளும் போய் வாங்கலாம் சரியா?

“ஐயோ தாத்தா, அப்பா வந்ததும் இங்க வாங்கலாம்..ஆனா நாமதான் ஊருக்குப் போறோமே..அங்க கிடைக்குமா? நான் என் பிரெண்ட் கிட்ட சொல்லணும் தாத்தா” என்று அதிலேயே குறியாய் இருந்தாள் திவ்யா.

“என்ன உன் பிரெண்ட் கிட்ட சொல்லணும் குட்டி” என்று கேட்டவாறே ரமேஷ் வரவும், “ஹை அப்பா..வாங்க வாங்க நாம எப்போப்பா கரும்பு வாங்கப் போறோம்”என்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“ம்ம்..போலாம் போலாம்..நாளைக்கு நீ ஸ்கூல்கு போயிட்டு வந்ததும் போய்வாங்கலாம் ஓகே வா”

“சரிப்பா..அப்ப எப்ப ஊருக்குப் போலாம்?

“ஊருக்கா? எந்த ஊருக்கு? அம்மா ஊருக்கா? இங்க பாரு டிக்கெட்..நாம எல்லாரும் சண்டே கிளம்பறோம் ஓகே வா?”

“ம்ஹ்ம்..அங்க இல்லைப்பா...தாத்தா பாட்டி ஊருக்கு...அவங்க அங்க கூட்டிப் போறேன்னு சொல்லிருக்காங்களே..ரொம்ப நல்லா இருக்குமாம்ப்பா..சூப்பரா பச்சைப் புல்வெளி, பழத்தோட்டம், பிரெஷ் வெஜிடபிள்ஸ்..பிரெஷ் காத்து அப்புறம்..ம்ம்..தாத்தா இன்னும் ஏதோ சொல்வீங்களே..ஹான்..நல்ல நல்ல மனசு..இதெல்லாம் எனக்குக் காமிக்கேன்னு சொல்லிருக்காங்கப்பா தாத்தா..நீங்க இதெல்லாம் பாத்திருக்கீங்களாப்பா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.