(Reading time: 13 - 25 minutes)

நெஞ்சத்திலே நிறைந்தவனே - மீரா

ருடங்கள் பல கழித்து பிறந்து வளர்ந்த மண்ணில் கால் பதித்தான் அனுஷிஹான்... மேல் படிப்பிற்காக  வெளிநாடு  சென்றவன் படித்து முடித்து அங்கேயே தொழிலும் தொடங்கி அதில் வெற்றி பெற்று தாய்நாட்டில் தான் பிறந்த ஊரில் அதைத்  தொடர  இன்று தான் மறுபடியும் வந்திருக்கிறான்..

நெஞ்சத்திலே நிறைந்தவனேஅவனின் அன்னை ஷாந்தி அழுகையோடு அவனை வரவேற்று மகனை வீட்டிற்குள் அழைத்து சென்றார். பிடித்த  உணவுகளை பார்த்து பார்த்து சமைத்து  அன்போடு ஆசையாய் பரிமாறினார்.. ஒரே மகன்..அனுஷின் தந்தை அவன் சிறுவயதாய் இருந்த போதே பிரிந்து சென்று விட்டார்.. கணவரை இழந்து தனியே அவர் நின்றபோது அவருக்கு துணையாய் நின்றது அவரின் தம்பி தான்... இன்றும் அவரின் ஆதரவு தொடர்கிறது..

வனுடைய கம்பெனி ஆரம்பிக்கிற விஷயமாக பேச வேண்டியவர்களை பார்த்து பேசி விட்டு வரும் வழியில் தற்செயலாக பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான்.. அந்த பெண்ணும் இவனை பார்த்தும் பார்க்காதது போல் அகன்று விட்டாள்..

பின்னாடியே சென்றவன்,

“என் இப்படி கண்டுக்காம போறீங்க ? எப்படி இருக்கீங்க அக்கா ? மாமா நல்லா இருக்காங்களா ?” என்று கேட்டான்..

அவள் பதிலே சொல்லாது நடையில் வேகம் கூட்டினாள்..

“அக்கா ப்ளீ ஸ்.. நில்லுங்க.. நான் உங்களுக்கு விரோதி இல்லையே.. ஏன் இப்படி பேசாம போறீங்க  ?

அவனை ஒரு நிமிடம் நின்று நிதானமாக பார்த்தவள்,

“விரோதிய கூட மன்னிப்பேன் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்று கண்கலங்க கோபமாக சொன்னாள்..

“அப்படி நான் என்ன தவறு  செய்தேன் ?”

“நீ தான் எதுவுமே செய்யலையே..” என்று அழுதுவிட்டாள்...

அவனுக்கு எதுவும் புரியவில்லை... அவளை கைத்தாங்கலாக பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.. தண்ணீர் பாட்டில் கொடுத்து முகம் கழுவ செய்தவன் , சூடாக ஒரு காபி வாங்கி கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு,

“இப்போ  சொல்லுங்க.. என்னாச்சு அக்கா ? ஏன் அழறீங்க ? மாமாக்கும் உங்களுக்கும் எதாச்சும் பிரச்சனையா ? சொல்லுங்க... உங்க கல்யாணத்துக்கு வீட்டில்  சம்மதிக்கலையா ? “

“அவனை தீர்க்கமாக பார்த்தவள் எனக்கு கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆச்சு... ஒரு பையன் இருக்குறான்.. என் கணவர் என்னை நல்லபடியா பார்த்துக்கறார்.. போதுமா ? உங்க கேள்விக்கெல்லாம் நான்விடை சொல்லிட்டேன்..” என்று எழ போனாள்...

“அப்புறம் எதுக்காக அக்கா அழுதீங்க ? என்ன மன்னிக்க மாட்டேன்னு என் சொன்னீங்க ?”

அவளுக்கு அவனை பார்க்கவே பிடிக்கவில்லை... இருந்தும் பொறுத்துக்கொண்டு,

“என்ன மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா ? வேற யாரையுமே தெரியாதா ?”

அவளை புரியாது பார்த்தவன்,

“இங்கே நாம ரெண்டு பேர் தான இருக்கிறோம்.. வேற யாரையுமே எனக்கு தெரியலையே அக்கா” என்றான்...

இதற்கு மேலும் அவனிடம் பேசினால் பொது இடம் என்றும் பார்க்காமல் அவனை அடித்து விடுவோம் என்று தோன்றிவிட ,

“நான் வீட்டிற்கு போகணும்.. உங்களுக்கு சொந்தமான ஒரு பொருள் என்கிட்டே இருக்கு...கொஞ்சம் அதை வந்து வாங்கிக்கிறீங்களா ?”

“கண்டிப்பா வரேன் அக்கா... எதுக்காக அக்கா இப்படி மரியாதை எல்லாம்... நான் உங்க தம்பி தான் அக்கா.. வா போ என்றே சொல்லுங்க அக்கா... “

அவனின் கெஞ்சுதலை பொருட்படுத்தாது,

“நான் என் காரில் முன்னாடி போறேன்.. நீங்க பின்னாடியே வாங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக காரை எடுத்து கிளப்பினாள்...

ழகான ஒரு பெரிய வீட்டினுள் காரை நிறுத்தியவள் அவனை பார்த்து,

“வாங்க” என்றாள்...

“உட்கார்.. நான் இப்போ வந்துடறேன்”  என்று அங்கிருந்த அறையினுள் சென்றுவிட்டாள்..

உள்ளே வந்தவன் கண்கள்அங்கே ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களை வரிசையாக ஆராய்ந்தன...

அதில்... ஆனந்தியும் அவள் கணவன் ப்ரஜனும்  சேர்ந்திருந்த கல்யாண புகைப்படம், அடுத்து அவளின் குடும்ப புகைப்படம், அவளின் செல்ல மகன் புகைப்படம்... என்று பார்த்து சிரித்து கொண்டிருந்தவன் ... அடுத்த புகைப்படத்தில் அந்த சிரிப்பை தொலைத்தான்.. கண்கள் மின்ன அதை பார்த்தவன்... சட்டென எழுந்து அந்த புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்த பெண்ணை விழியகல பார்த்து,,, நடுங்கும் விரல்களால் தொட்டுபார்த்தான்..  அங்கே அந்த நிமிடம் வந்தவள் அவனின் நிலையை கண்டு ஒரு சிறு பெருமூச்சு அவளுள் எழுந்தது...

“அங்கே என்ன பார்க்கிறாய்” என்ற அவளின் குரலில் அவனின் மோன நிலை அறுபட்டது..

ஆனந்தியை நேராக பார்க்க முடியாது திணறியவன்,

“அக்கா அது வந்து சும்மா தான் பார்த்துட்டு இருந்தேன்...” என்று மென்று முழுங்கினான்...

அவனிடம் ஒரு அட்டைப்பெட்டியை கொடுத்தவள்..

“இன்று வரை இதை பாதுகாத்தேன்... இனி நீ பாதுகாப்பாயோ இல்லை தூக்கி எறிவாயோ...  உன் விருப்பம்..” என்று கூறினாள்..

அவன் எதையோ கேட்க துடிப்பது தெரிந்து,

“உன் கேள்விக்கு விடை என்னிடமில்லை என்றாள்..

அவனுக்கோ அதிர்ச்சி தந்த வேகத்தில் தனிமை தேவையாய்..

“வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதி வேகமாக காரை செலுத்தியவன் வீட்டினை அடைந்து அவனது அறைக்குள் சென்று தாழிட்டு அந்த பெட்டியை திறந்தான்...

அதில் ஒரு டைரியும் அவனின் வண்ணச்சித்திரங்களும்  இருந்தது...  அவை அனைத்தும் கைப்பட வரைந்த ஓவியங்கள்...

டைரியை எடுத்து வருடியபடி முதல் பக்கத்தைப்  படிக்க ஆரம்பித்தான்...

" என் நெஞ்சத்திலே நிறைந்தவனே...

என் ஒவ்வொரு நாள் விடியலிலும் உன்னை சேர்ந்திட மாட்டோமா என்று தான் எண்ணுகிறேன்..ஏனோ அது நிறைவேறா கனவாகவே உள்ளது... என் நிறைவேறா  காதலைப் போல...

மனதினில் உன்னை மகிழ்ச்சியுடன் சுமக்கிறேன்.. முடிவில்லா வானத்தைப் போலே உன் மீதான என் காதலுக்கும் முடிவில்லை... கண்கள் காணும் திசை யாவும் நீதான்.. கைகள் தீண்டும் காற்ங்கிலும் உன்ஸ்பரிசம் தான்... கண் மூடி நான் இரவு சாயும் மெத்தை உன் நெஞ்சம் தான்... உன்னுடனே நான் இன்பமாக வாழ்கிறேன்... கற்பனையில்... நிஜத்தில் தான் நீ என்னை துரத்துகிறாயே " .....

படித்தவன் விரல் நடுங்க அடுத்த பக்கத்தை புரட்டினான்...

" இரண்டு நாள் முடியாமல் மலேரியா காய்ச்சலில் விழுந்தேன்.. உன்னிடம் பேச முடியாது போனது.. மூன்றாம் நாள் இரவில் எனக்கு போன் செய்து திட்டி தீர்த்தாய்.. என்னை எந்த அளவு நீ தேடினாய் என்று அன்றுபுரிந்து கொண்டேன்... இனி இது போல் செய்யாதேடி ... நிஜமா  ரொம்ப பயந்துட்டேன்டி. என்னதான்  முடியலை என்றாலும் எனக்கு தகவல் சொல்லிடுடி..  உங்கிட்ட பேசாமல் என்னால இருக்க முடியலைடி.. நான்சொல்றது புரியுதா இல்லையாடி உனக்கு.. இனி இப்படி போன் எடுக்காம இருந்து பாரு.. உன்ன கொன்னுட்டு தான்டி எனக்கு அடுத்த வேலை... உன்னை இந்த அளவு மிஸ் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லடி.. குட்டிமா ஐ மிஸ் யு சோ மச் டி.. என்றாய்..

ரொம்ப பயந்துட்டியா மா ? சாரி மா.. இனி சாகுற நிலைமையில்  இருந்தாலும் உங்கிட்ட பேசிட்டு தான் சாவேன் சரியாமா ?

உன்ன கொல்லுவேன் நான்... ஏண்டி இப்படி பேசுற நீ ??... இந்த இரண்டு நாள் நான் தவிச்சது போதாதா ?இன்னும் ஏண்டி என்ன இப்படி தவிக்க விட்ற ?

ஹ்ம்ம்... என்று சிரிச்சேன்

இங்க நான் பயந்து போய்  இருக்கேன்.,. நீ சிரிக்கறியாடி..

அதான் நான் சரி ஆயிட்டனே மா.. அப்புறம் என் இப்படி திட்டுற ?

திட்டுறதா ?  நிறைய திட்டணும்னு தான் ஆச பட்டேன்..  ப்ச்... எங்க உன் வாடுன குரல் கேட்டதும் கொஞ்சமா திட்டிட்டு விட்டுட்டேன்..

இது தான் உங்க ஊர்ல கொஞ்சமா ?

ஆமாடி... என் செல்லகுட்டி...

ஹ்ம்ம்...

குட்டிமா..

ஹ்ம்ம்... சொல்லுமா...

ஐ லவ் யு டி...

அந்த நொடி தான் உன்னுள் என்னை முற்றிலும் தொலைத்து உன் மீதான காதலுக்கு வித்து போட்ட நாள்...

நீ தோழனாய் சொன்னாயோ... காதலனாய் சொன்னாயோ... ..அறியேன்.... அன்றிலிருந்து தான் நான் உன்னை நேசிக்க ஆரம்பித்தேன். நீ  துடித்த துடிப்பும் தவிப்பும் எனக்காக எனும் போது ஒரு பெரும் கர்வம் என்னுள் உதித்தது... "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.