(Reading time: 3 - 5 minutes)

புத்திமதி – சுமதி

ரகதத்தின் செல்போன் மணியடித்தது. வழக்கம் போல் அவள் மகள் நதியா தான் லைனில். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மரகதத்திடம் அவளின் மாமியார் பற்றி புலம்பி தீர்த்துவிட வேண்டும் நதியாவுக்கு. என்றும் போல் மரகதம் புத்திமதி சொல்ல ஆரம்பித்தாள்.

Puthimathi“இன்றாவது உன் கணவரிடம் உறுதியாக சொல்லி விடு... தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று. எத்தனை நாள் தான் உன் மாமியாரிடம் மல்லுக்கட்டுவது”.“

மரகதம் பேசுவது வீட்டுக்குளே வந்து கொண்டிருந்த சாந்தாவுக்கு நன்றாக கேட்டது. சாந்தா மரகதத்தின் மருமகள் வானதியின் அம்மா. அதாவது மரகதத்துக்கு சம்மந்தி. அவள் எல்லாவற்றையும் வெளியில் நின்றவாறே கேட்டு விட்டு சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தாள்.

“வாங்க சம்பந்தி.. இரண்டு வாரம் ஆச்சு கல்யாணம் முடிந்து பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு         வந்து. நீங்கள் அடிக்கடி வந்து போனால்தானே நல்லது... வானதி உள்ளே ரூமில் இருக்கிறாள்... நீங்கள் போய்ப்பாருங்கள். நான் உங்களுக்கு டீ போட்டுக்கொண்டு வருகிறேன்”” என்று சமயலறைக்குள் சென்றாள்.

வானதி சாந்தாவைப் பார்த்தவுடன் ஒரே பூரிப்பு.

“அம்மா” என்று ஒடி வந்தாள். “எப்படிம்மா இருக்கீங்க? அப்பா தங்கை எல்லோரும் நல்லா இருக்காங்களா? எனக்கு பிடித்த முறுக்கு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாயா? எனக்கு உன்னை, அப்பா, தங்கை பற்றிய நினைவுதான்..... தெரியுமா?””

சாந்தா அவளை தோளில் சாய்த்துக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள். “திருமணத்துக்குப்பின் பொண்ணுங்களுக்கு புகுந்த வீடு பழகித்தானே ஆகணும். உன் மாமியார் ரொம்ப நல்லவங்க.... அவங்க வளர்ந்த விதம் வேறு... நீ வளர்ந்த விதம் வேறு.. அவர்கள் எது சொன்னாலும் அவர்கள் கோணத்திலிருந்து பாரு... புரிந்து நடந்துகொள்... அவர்கள் உனக்கு இன்னொரு அம்மா. நீ அவர்களுக்கு மருமகள் இல்லையா..... இந்த மாதிரி புகாரெல்லாம் உன் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்காதே... உன் பாசத்தால் அவர்கள் எல்லோரையும் அரவணைத்து நடக்க பழகிக்கொள்”.”

வானதிக்கு சாந்தா ஏன் இதெல்லாம் சொல்லுகிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அப்பொழுது டீ எடுத்துக்கொண்டு வந்த மரகதத்துக்கு இதைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது தன் தவறு என்னவென்று. வீட்டுக்கு வீடு வாசப்படி. தன் மருமகள் தனிக்குடித்தனம் பற்றி சிந்திக்கக்கூடும் என்று யோசித்துப்பார்த்ததேயில்லை.

உடனே தன் மகளுக்கு போன் செய்து அவள் மாமியாரைப்பற்றி இனிமேல் தன்னிடம் புகார் சொல்லக்கூடாதென்றும் தனிக்குடித்தனம் பற்றி யோசிக்க வேண்டாமென்றும் சொல்வதற்கு சென்றாள். இதை பார்த்த சாந்தவுக்கு திருப்தி. இனிமேல் மரகதம் வானதியை தன் மகள் போல் பார்த்துக்கொள்ளுவதோடு மகளின் கூட்டுக்குடும்பத்திலும் தலையிடமாட்டாள் என்பதில் சாந்தாவுக்கு துளி கூட சந்தேகமேயில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.