(Reading time: 4 - 7 minutes)

புத்திக் கூர்மை – சுமதி

னிதாவுக்கும் சேகருக்கும் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. சேகர் வீட்டில் சேகரின் அம்மா பார்வதிதான் எல்லாம். அனைத்து முடிவுகளையும் அவள் தான் எடுப்பாள். சேகருக்கும் அவன் அப்பாவுக்கும் இது பழகின விஷயம். அவள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது அவர்கள் வழக்கம். அவள் தான் குடும்பத்தின் அனைத்து  முடிவுகளையும்  எடுப்பவள். இது புது மருமகள் வனிதாவுக்கு புதிதாக இருந்தது. அவள் வீட்டில் அப்பாவும் அம்மாவைக் கேட்டு முடிவு செய்வார். அது போல அவள் அம்மாவும் அவள் அப்பாவைக் கேட்டு தான் செயல்படுவாள். வனிதா சம்பந்தப்பட்ட விஷயங்களில் வனிதாவின் விருப்பத்தையும் கேட்டு தான் செயல்படுவார்கள்.

Puthi koormaiஆனால் இங்கு நிலமை தலைகீழ். அவள் எது சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்கும் மனநிலையில் சேகரில்லை. அப்படியே கேட்டாலும் கடைசியில் அம்மா சொல்றாங்க என்று சொல்லி அதுபடி நடக்க சொல்லிவிடுவான். ஆனால் பார்வதி ஒன்றும் ஹிட்லர் கிடையாது. மிகுந்த பாசக்காரி தான். அதனால் அவளின் யோசனைகளை யாரும் தட்டுவதில்லை. வனிதாவுக்குமே பார்வதியை எதிர்த்து பேசமுடியாத அளவுக்கு மரியாதையும் மதிப்பும் இருந்தது. எங்கே தன் மகன் மனைவியின் பின்னால் சென்றுவிடுவானோ என்று எல்லா மகனைப்பெற்ற அம்மாக்களுக்கும் இருக்கும் கவலைதான் பார்வதிக்கு. வானதிக்கு இது நன்றாகவே புரிந்த்து. ஆனால் அவள் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும். அவளைக் கேட்டுத்தான் எதுவும் செய்யவேண்டும் என்று பார்வதி நினைப்பது வனிதாவுக்கு சில சமயம் கஷ்டமாக இருக்கும்.

அடுத்த வாரம் வனிதாவுக்கும் சேகருக்கும் புனித வெள்ளியையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. வனிதாவுக்கு பாண்டிச்சேரி செல்லவேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை. அதற்கு  ஒரு காரணமிருந்தது. அவளின் நெருங்கிய தோழி மாலதி அங்குதான் இருக்கிறாள். அவளையும் சென்று பார்த்ததுபோல இருக்கும். அப்படியே ஊர் சுற்றியமாதிரியும் இருக்கும் என்பது வனிதாவின் எண்ணம். அங்கு இருக்கும் கடற்கரை, ஆசிரமம், கோயில்  பற்றியெல்லாம் மாலதி சொல்லக்கேட்டு வானதிக்கு ஆசை நன்றாக வளர்ந்துவிட்டிருந்த்து.

இதுவரை அவர்கள் வெளியில் சென்றால் குடும்பத்துடன் செல்வதுதான் வழக்கம். அதுவும் ஏதாவது கோயில், குளம் என்றுதான் முடிவாகும். இந்த தடவை வனிதாவும் சேகரும் தனியாக வெளியில் சென்று வரட்டுமென்று பார்வதி சேகரின் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை வனிதா கேட்டபின் தான் அவளுக்கு இவ்வளவு யோசனைகள். பார்வதி அவர்களை கோவைக்கு அனுப்புவது என்று முடிவு செய்தபின் அவளிடம் சொல்லி எதுவும் பயனிருக்கபோவதில்லை. அதுவும் பாண்டிச்சேரி வனிதாவின் விருப்பம் என்று தெரிந்தால் பார்வதி சேகர் தன் புது மனைவிக்கு கட்டுப்பட்டு அம்மாவிடம் பரிந்து பேச வந்துவிட்டான் என்று நினைப்பாள். தேவையில்லாத பிரச்சினை. சேகர் உண்மை விளம்பி வேறு. அவனிடம் சொன்னால் அப்படியே சென்று எல்லாவற்றையும் சொல்லிவிடுவான். அதனால் தான் வனிதவுக்கு சிந்தனையோ சிந்தனை.

அவள் விருப்பமும் நிறைவேறவேண்டும். அதே சமயம் பார்வதியும் மனம் கோணாமல் அவளாகவே முடிவெடுத்ததாகவும் இருக்கவேண்டும்.

ன்று அலுவலகம் முடிந்து வரும்போதே ஒரு நல்ல யோசனை. வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவள் தோழிக்கு போன் செய்தாள். பார்வதிக்கும் கேட்கும் இடத்தில் நின்றுகொண்டு வானதி பேச ஆரம்பித்தாள். “அவருக்கு பாண்டிச்சேரி செல்லவேண்டுமென்று ரொம்ப ஆசை போலடி. எனக்குத்தான் அங்கு போவது பிடிக்கவேயில்லை. அதைவிட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாமென்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் நான்.”

அன்றிரவு  சேகர் வீட்டுக்குவந்தவுடன் பார்வதி, “சேகர்... அடுத்த வாரம் வரும் விடுமறையில் நீயும் வானதியும் பாண்டிசேரி சென்று வாருங்கள். உடனே டிக்கெட் போட்டுவிடு”  என்று சொன்னாள்.  சேகரும் அம்மாவின் ஆணையை நிறைவேற்றினான். வானதி யாரையும் காயப்படுத்தாமல் புத்திக்கூர்மையுடன் நடந்ததுக்கு கிடைத்த பரிசான பாண்டிச்சேரிக்கு மகிழ்ச்சியுடன் சென்று வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.