(Reading time: 8 - 15 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 01 - வத்சலா

எனக்கு பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். எப்போதுமே பாடல்கள் கேட்கும் போது, என் கண்முன்னே அந்த பாடல் சம்பந்தமான காட்சிகள் ஓடுவது போலே இருக்கும். அப்படி தோன்றியது தான் இந்த கதை. இந்த பாடல் திரைப்படத்தில் வேறொரு கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. என் மனதில் இந்த பாடலுக்கு ஏற்றார் போல் வேறொரு கதை தோன்றியது. அந்த கதையை நீங்களும் படித்து பாருங்களேன்...... 

உனக்கென்ன மேலே நின்றாய்

Unakkenna mele nindraai

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா.....

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா.....

சில நாட்களாகவே இந்த பாடலை தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறான் பத்ரி. அந்த கண்ணன் கோவிலை விட்டு வெளியே வரும் வரை அவன் மனதில் இதே கேள்வி தான் ஒலித்துக்கொண்டே இருந்தது.

நான் என்ன கள்ளா பாலா?

நீ சொல்லு நந்தலாலா.

என்ன ஒரே யோசனை? புதுக்கதைக்கான பிளானா? ,கோயிலை விட்டு வெளியே வந்ததும் ஒரு அழகான புன்னகையுடன். கேட்டாள் அவன் மனைவி மதுவந்தி.

இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு நாட்களே ஆகிறது

மதுவந்தி ஒரு அழகான ராகத்தின் பெயர். ஏதோ ஒரு திரைப்படத்தில் 'இளஞ்சோலை பூத்ததா' என்று ஒரு பாடல் வருமே அது இந்த ராகத்தில் அமைந்தது தான்.

மதுவந்தியின் புன்னகையை பார்த்தால் அந்த பாடல் தான் நினைவுக்கு வரும் அவனுக்கு. ஒரு சோலையில் பலநூறு பூக்கள் பூத்தது போலே இருக்கும் அவள் புன்னகை. கல்லூரி நாட்களில் இருந்து அந்த புன்னகையை ரசித்துக்கொண்டே தானே இருக்கிறான் அவன்.

'இப்போதைக்கு கதையெல்லாம் மூட்டை கட்டியாச்சு. கொஞ்ச நாளைக்கு என் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற இந்த ராகத்தை ரசிக்க வேண்டியது தான்' என்று கண் சிமிட்டி அவன் சொன்னவுடன், சட்டென அவள் புன்னகையில் கலந்த அந்த வெட்க கோடுகளை ரசித்த படியே காரை கிளப்பினான் பத்ரி.

கதை எழுதுவதை அவன் மூட்டை கட்டி வைப்பதற்கு இது மட்டும் காரணம் இல்லை. இன்னொரு மிகப்பெரிய மன அழுத்தமும் காரணம். அதனால்தான் மனைவியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று தன் அப்பாவின் அமெரிக்க பிசினஸை கவனித்துக்கொண்டு வாழ்கையை தொடரும் முடிவுக்கு வந்துவிட்டான் பத்ரி.

நாளை இருவரும் அமெரிக்காவுக்கு கிளம்புகிறார்கள்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, ஒரு பத்து நிமிடம் படுக்கையில் சாயும் எண்ணத்தில் அந்த புத்தகத்துடன் படுக்கைக்கு வந்தான் பத்ரி.

அந்த புத்தகத்தை புரட்டியிருக்க கூடாது என்று பிறகு தான் புரிந்தது.

அவன் கண்ணில் பட்டு தொலைத்து விட்டது அந்த பேட்டி. மனதிற்குள் எரிமலை கொதித்தது.

ஆடாத மேடையில்லை போடாத வேஷமில்லை

சிந்தாத கண்ணீரில்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆடும் பிள்ளை

நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா

நீ சொல்லு நந்தலாலா.

அந்த புத்தகத்தில் வெளி வந்திருந்தது அந்த பேட்டி. சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'இதயம் தொட்ட பூவே' திரைப்படத்தின் இயக்குனர் சந்திரகுமாரின் பேட்டி.

ந்திரகுமார் வேறு யாரும் மில்லை அவனது நண்பன். நண்பன் என்றால் சாதாரண நண்பன் இல்லை. உயிர் நண்பன். தன் உயிரை கூட அவனுக்காக கொடுத்துவிட தயாராகத்தான் இருந்தான் பத்ரி. சில நாட்கள் முன்பு வரை சந்துரு கூட அப்படித்தான் இருந்தான். ஆனால் இப்போது.......

பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே கதை நாடகங்கள் எழுதுவதில் பத்ரிக்கு ஆர்வம் அதிகம். அந்நாட்களில் எத்தனையோ நாடங்கள் எழுதி இருக்கிறான், குறும்படங்களை இயக்கி அவனே நடித்திருக்கிறான். நிறையவே பரிசுகளும் வாங்கி இருக்கிறான் பத்ரி.

பத்ரியை பொறுத்த வரை ஒரு கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு தாய் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம் அது.

ஒரு கரு மனதில் தோன்றிய நிமிடத்தில் இருந்து, அதை மெதுவாய் வளர்த்து, எழுதி, அழித்து, மறுபடி எழுதி, மறுபடி வேண்டாததை நீக்கி செதுக்கி, ஒவ்வொரு நிமிடமும் அதையே சுவாசித்து, கருவில் அசையும் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும்  தாய் ரசிப்பதை போல் அந்த கதையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து, அனுபவித்து.........

அவன் வீட்டில் உள்ளவர்கள் கூட திட்டுவார்கள் அவனை. ஒரு கதையை ஆரம்பிச்சிட்டா அவ்வளவுதான். வேறெதோ லோகத்துக்கு குடி போயிடுவான் இவன். எப்பபாரு விட்டத்தயே பார்த்துகிட்டு......

ஒரு தாய் தன் வயிற்றில் வளரும் குழந்தையை தொட்டு தொட்டு பார்த்து ரசித்து வளர்ப்பதை போல் வளர்ந்ததுதான் அந்த கதை. 'இதயம் தொட்ட பூவே திரைப்படத்தின் கதை.' அது பத்ரியின் கதை.

அதை, எப்போது, எப்படி எடுத்துக்கொண்டு போனான் சந்துரு என்றே புரியவில்லை பத்ரிக்கு. இவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அதை படமாக்கி வெளியிட்டு விட்டான் அவன் .கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் அவனே.

ன்று பெரிய சாதனையாளனாக பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு மொழிகளில் அந்த படத்தை இயக்க போகிறானாம் அவன்.

இதை கேள்வி பட்டதிலிருந்து பத்ரியின் மனதில் அப்படியொரு வலி. தாங்க முடியாத வலி. எதனால் அந்த வலி?. அவனுக்கு கிடைத்து விட்ட பணத்தைப்பார்த்தா இல்லை. நிச்சியமாக இல்லை. அவன் சம்பாதித்ததை விட மூன்று மடங்கு அதிகமான சொத்துக்கு அதிபதி பத்ரி.

இது வேறொரு விதமான வலி. தான் பெற்ற குழந்தையை வேறொருவன் கடத்திக்கொண்டு சென்று சொந்தம் கொண்டாடும் போது ஒரு தாயின் உள்ளம் அனுபவிக்கும் வலி. வார்த்தையில் வர்ணிக்க முடியாத வலி. அனுபவித்தால் மட்டுமே புரியக்கூடிய வலி.

அந்த கதை அவன் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்த கதை. அது அவனுடையது என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. நண்பனை எதிர்த்து எதுவும் செய்ய மனமும் வரவில்லை பத்ரிக்கு

யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று

பூவென்று முள்ளைக்கண்டு புரியாமல் நின்றேன் இன்று

பால் போல கள்ளும் உண்டு

நிறத்தாலே ரெண்டும் ஒன்று

எந்த வேலையிலும் மனம் செல்லாமல், இந்த பாடல் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு, அந்த கண்ணனை மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டிருந்தான் பத்ரி. 'எனக்கு ஒரு நியாயம் சொல் நந்தலாலா.!

அப்போதுதான் தன் தந்தையுடன் அவன் வீட்டிற்கு வந்து நின்றாள் அவன் தேவதை மதுவந்தி.

அவளது அப்பா ,,அவனது அப்பாவின் நண்பர். பேச்சினிடைய சட்டென்று கேட்டுவிட்டார் அவன் அப்பா. உனக்கு மதுவை பிடிச்சிருக்கா பத்ரி.? அவளை கல்யாணம் பண்ணிக்கரியா?

மதுவை பிடித்திருக்கிறதா? என்ன அபத்தமான கேள்வி இது. அவன் மனதில் இதயம் தொட்ட பூவே என்ற அந்த காவியம் வளர்வதற்கு அடிப்படையே  இந்த ராகம் தானே.? அவள் புன்னகை தானே.? அந்த கதையின் ஒவ்வொரு வரியும் இவளுக்கு சமர்ப்பிக்க பட்டது தானே.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.