(Reading time: 10 - 20 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 03 - வத்சலா

தேடும் கண்பார்வை தவிக்க...

வ்வொரு நொடியும் நத்தையாய் நகர்ந்துக்கொண்டிருந்தது ஸ்ரீராமுக்கு. அலுவலகத்துக்கு செல்லக்கூட மனமில்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தான்.

இறைவா! காப்பாற்று! இந்த ஒரு முறை அவளை காப்பாற்றி என்னிடம் தந்துவிடு. இனி அவள் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வாரத்துக்குள் பல லட்சம் முறை இறைவனிடம் இந்த வேண்டுதலை வைத்துவிட்டான் ஸ்ரீராம்.

தேடும் கண்பார்வை தவிக்க...

பைத்தியமே பிடித்துவிடும் போல் தான் இருந்தது. மனதை குடைந்துக்கொண்டிருக்கும் கேள்விக்கு விடை தெரிய இன்னும் நான்கு மணி நேரம் ஆகும்.

சத்தியமாய் அதில் மனம் செல்லாது என்று தெரிந்தும் குழப்பத்தில் தலை வெடித்து விடாமல் இருக்க டி.வி.யை உயிர்ப்பித்தான்.

'நா.....தம் எழுந்....ததடி கண்ண.....ம்மா..... ' ஜானகியின் குரலில் ஸ்ரீரஞ்சனி ஒலித்தது. கண்களை மூடி ஆழமாக சுவாசித்தான்.

ஸ்ரீரஞ்சனி. அவன் மனைவி. அவன் மனைவியாக இருந்தவள். அவர்கள் விவாகரத்து முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.

பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் தான் அவர்களுடையது.. காதலிப்பது எப்படி என்று அவனுக்கு அவள் தான் கற்றுக்கொடுத்தாள்.

திருமணமான புதிதில் ஒரு நாள் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அவன் மடியில் படுத்துக்கொண்டு கேட்டாள்.

பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடியே போட்டோலேயே என்னை உனக்கு ரொம்ப பிடிச்சு போச்சோ.?

மெல்ல சிரித்தான் அவன்.  இல்லையா பின்னே? ஆமாம் ஏன் திடீர்னு அப்படி கேட்கிறே....

'இல்லை நீ பொண்ணு பார்க்க வந்தப்போ நான் உள்ளிருந்து உன்னை பாத்திட்டே இருந்தேன். இந்த 'தே....டும் க...ண் பா....ர்வை' பாட்டிலே மோகன் அமலாவை தேடுவாரே அதே மாதிரி அப்படி தேடினியே அதான் கேட்டேன். அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் எனக்கு என் ஸ்ரீ ஞாபகம் தான் வரும்.' அழகாய் சிரித்தாள் அவள்.

மலர்ந்து சிரித்தபடியே சிரித்தபடியே அள்ளி அணைத்துக்கொண்டான் அவளை.

'போதும். வாழ்க்கையிலே வேறெதுவுமே வேண்டாம் ஸ்ரீ. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ போ போன்னு விரட்டினாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து. நான்கு ஐந்து மாதங்கள் கழித்துதான்  எப்படி துவங்கியது என்றே தெரியாமல் ஒவ்வொன்றாய் துவங்கியது.

'தினமும் இதே தோசைதானா. ஒரு நாளாவது இவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு யோசிச்சு சமைக்கறியா நீ ?' என்றான் அவன்..

ஏன். நானும் தான் ஆபீஸ் போறேன். எனக்கு பெருசா எதுவும் வேண்டாம். ஒரே ஒரு நாள் என்னை உட்கார்த்தி வெச்சு நீ தோசை சுட்டு போடேன் அது போதும்.. பொம்பளைங்கதான் சமைக்கணும்னு சட்டமா என்ன?

அலுவலக வேலை அழுத்ததில் அவன் மறந்து போன அவள் பிறந்தநாளும், அவள் வேலை காரணாமாக அவள் ஊருக்கு வர மறுத்த தீபாவளியும், இது போன்ற அல்ப விஷயங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, இருவருக்கும் இடையில் சுவர் எழுப்ப,

ஒரு நாள் ஆத்திரத்தில் கத்தினான் அவன் 'நீ செத்துத்தொலை. அதுக்கப்புறமாவது நான் நிம்மதியா இருக்கேன்.'

அதோடு உடைந்துப்போனாள் அவள். பல மாதங்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி தீவுகளாய் வாழ்ந்து, விவாகரத்து வரை போய் முடிந்தது.

வன் வீட்டில் எல்லாருக்கும் இவன் மீதே கோபம். யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை.  ஊரில் இருக்கும் அப்பா அம்மாவை சென்று பார்த்து பல மாதங்கள் ஆகிறது.

அவன் அன்று கோபத்தில் அவளை பார்த்து சொன்ன அந்த ஒரு வார்த்தை பலித்துவிடுமோ என்று அவனை கதி கலங்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த செய்தி ஒரு வாரம் முன்னால் தான் அவனுக்கு வந்தது.

ரஞ்சனியின் தோழி டாக்டர் சுதாவிடமிருந்து அழைப்பு.

என்ன ஸ்ரீராம் நீங்க? என்னதான் விவாகரத்து ஆகியிருந்தாலும் ரஞ்சனிக்கு சர்ஜரி நடக்கும் போது கூட நீங்க வந்து பார்க்க மாட்டீங்களா? என்னதான் இருந்தாலும் அவளோட கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கீங்க.'

இதயம் நின்றே போனது அவனுக்கு. சர்ஜரியா? அய்யோ! எனக்கு எதுவுமே தெரியாதே. என்னாச்சு அவளுக்கு.? பதறிப்போனான் அவன்.

'அவளுக்கு மார்பகத்தில. கட்டி. இன்னைக்கு சர்ஜரி.'

விழுந்தடித்துக்கொண்டு மருத்தவமனைக்கு  ஓடினான் ஸ்ரீராம். அவளுடைய அப்பாவும், அம்மாவும் அங்கே இருந்தார்கள். அவர்கள் இருப்பது இதே ஊரில் தான். இப்போது அவர்களுடன் தான் இருக்கிறாள் ரஞ்சனி.

அதுதான் விவாகரத்து ஆகிவிட்டதே அவளுக்காக ஏன் பதறுகிறேன் நான்.? புரியவேல்லை அவனுக்கு.

அந்த சில மணி நேரங்கள் தான் அவள் மீது அவனுக்கு இருந்த காதலை அவன் மொத்தமாக  நிமிடங்கள். அவள் அன்பின் ஒவ்வொரு துளியையும் அவன் உணர்ந்துக்கொண்ட நிமிடங்கள்.

எதுவுமே நம்மை விட்டுப்போய் விடுமோ என்று நினைக்கும் போதுதான் அதன் அருமைகள் புரிகிறதோ.?

திடீரென்று  எங்கிருந்து வருகிறது இதிபோன்ற தருணங்கள்.? வாழ்கை இவ்வளவு தானா.? இதை புரிந்துக்கொள்ளாமல் இனிமையாக கழிக்க வேண்டிய நிமிடங்களை கோப தாபத்தில் தொலைத்துக்கொண்டிருக்கிறோமா?

அங்கே அறுவை சிகிச்சை முடிவதற்குள் இவன் இங்கே துடித்து, தவித்து கண்ணீர் சிந்தி.... அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அவளுடைய தந்தை பத்மநாபன்.

றுவை சிகிச்சை முடிந்த பின் அவளை பார்ப்பதற்கு மனம் தவித்தது. ஏனோ பார்க்கும் தைரியம் இல்லை அவனுக்கு.

எத்தனை சண்டை போட்டிருக்கிறேன். என்னவென்று பேசுவது அவளிடம்.?

டாக்டர் அடுத்த குண்டை போட்டார் சர்ஜரி முடிஞ்சது. ஆனால். பயாப்ஸி பண்ணி பார்த்துதான் அந்த கட்டி கேன்சரா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியும். ரிப்போர்ட் வர ஒரு வாரம் ஆகும்.

'இறைவா அவளுக்கு எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது' பதறியது அவன் உள்ளம்.

அறுவை சிகிச்சையின் போது அவன் தவித்த தவிப்பையெல்லாம் அவளிடம் சொல்லியிருந்தார் அவள் அப்பா.

படுக்கையில் சாய்ந்த ரஞ்சனியின் கண்களில் நீர் சேர்ந்தது. மனதாலும், உடலாலும் நன்றாக இருக்கும் நேரங்களில் எதுவுமே தெரிவதில்லை

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி விவாகரத்தின் வலி, இது போல் தளர்ந்து போயிருக்கும் தருணங்களிலும், யாருமற்ற தனிமைகளிலும் தான் தெரிகிறது. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அப்போதுதான் புரிகிறது.

என்னதான் அப்பா அம்மாவுடன் இருந்தாலும், நான் இருக்கேன்டா உனக்கு என்று சொல்லும் அவன் வார்த்தையை தேடியது உள்ளம். தோள் சாய்த்து தலை வருடும் அவன் அணைப்புக்காக ஏங்கியது மனம்.

அவனை அழைத்து பேச வேண்டுமென்று தோன்றியது. என்னவென்று பேசுவது அவ்வளவு சண்டை போட்டிருக்கிறேனே!

நரகம். கடந்த ஒரு வாரமும் நரகமாகவே கழிந்தது அவனுக்கு. அவளுக்கு புற்றுநோய் வந்துவிடக்கூடாது . ஒவ்வொரு நொடியும் பயத்துடனே கழிந்தது.  இன்று பயாப்ஸி ரிசல்ட் வரப்போகிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.