(Reading time: 21 - 42 minutes)

எங்கே செல்லும் இந்த பாதை - ஜெய்

ண்ணா எழுந்திரு.  கடகடன்னு பல்லைத் தேய்ச்சுட்டு பாலைக் குடி.  பாட்டு பிராக்டிஸ் பண்ணனும்.  இன்னைக்கு பாப் ரவுண்டு இருக்கு ஞாபகம் இருக்கு இல்லை.  இப்போ full பாட்டு பிராக்டிஸ் பண்ணி முடிச்சாதான் சாயங்காலம் டான்ஸ் கிளாஸ்ல ஈஸியா இருக்கும்.”

“அம்மா ப்ளீஸ்ம்மா எனக்கு பாட்டு காம்படிஷன் போக வேண்டாம்.  எனக்குப் பிடிக்கல.”

“என்னடா பிடிக்கலை, பிடிக்கலைன்னுட்டு.  கிட்டத்தட்ட கால் இறுதி வரை வந்தாச்சு.  இத்தனை நாள் ஒழுங்காதானே பாடின”

Enge sellum intha pathai

“அம்மா பாட்டுன்னா பாட்டு மட்டும் இருக்கணும்.  அதுக்கு எதுக்கு என்னை ஆட சொல்றாங்க.  அதுவும் girls கை எல்லாம் பிடிச்சு ஆட சொல்றாங்கம்மா எனக்குப் பிடிக்கலை”, அடம் செய்யும் பத்து வயது மகனை ஆத்திரம் மிகப் பார்த்தாள் ஷன்மதி.

“உன்னை என்னடா பண்றது.  உன்கூட ஆடற girls கூட உன்னளவு அலட்டலைடா.  அவங்க எல்லாம் எப்படி ஆடறாங்க.  நீ ஏன் இப்படி இருக்கே?”

தனக்கு அங்கு நிகழ்வதை எப்படி அம்மாவிற்கு புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்தான் கண்ணன்.

“அவங்க பண்ணினா நானும் அதைப்  பண்ணனுமா. என்னால முடியாது.  உனக்காக பாட்டு மட்டும் வேணா பாடறேன்.  நீ அங்க வந்து என்னால டான்ஸ் எல்லாம் ஆட முடியாதுன்னு சொல்லிடு”

“அது ஒத்துக்க மாட்டாங்க கண்ணா.   ஆடிட்டே பாடினாதான் எல்லாரும் ரசிக்கும்படியா இருக்கும்டா.  அதுவும் பாப் பாட்டுக்கு movement கொடுக்காம ஆடினா எப்படி இருக்கும்.  நீயே சொல்லு”

“அம்மா சொன்னாப் புரிஞ்சுக்கோ.  எனக்கு அந்த டான்ஸ் சொல்லித்தர அங்கிளை பிடிக்கவே இல்லை”

“சும்மா, ஏதானும் காரணம் சொல்லணும்ன்னு சொல்லக்கூடாது கண்ணா.  அவர் எத்தனை பெரிய டான்ஸ் மாஸ்டர் தெரியுமா?  சென்னைல பெரிய டான்ஸ் ஸ்கூல் எல்லாம் வச்சு நடத்தறார்.  நிக்கக் கூட நேரம் இல்லாம சுத்திட்டு இருக்கற ஆளு.  ஏதோ இந்தக் competition நடத்தறவங்க கேட்டாங்களேன்னு வந்து சொல்லித் தர்றாரு.  நீ என்னடான்னா ஈஸியா அவரைப் பிடிக்கலைன்னு சொல்ற.  உடம்பு முழுக்க கொழுப்புடா உனக்கு”

“ஐயோ அம்மா, உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைமா.  அவர் டான்ஸ் சொல்லித்தரேன்னு கண்ட இடத்தில எல்லாம் கை வைக்கறார்மா.  என்னலாமோ பேசறாரு.  எனக்குப் புரிய மாட்டேங்குது.  ஆனா அங்க இருக்கற பெரிய அண்ணா, அக்காலாம் அவர் பேசும்போது என்னைப் பார்த்து ஒரு மாதிரி சிரிக்கறாங்க.  ரொம்ப ஷேமா இருக்குமா”, தன் பிரச்சனையை ஒரு வழியாக சொல்லி முடித்தான் கண்ணன்.  இனியாவது தன் தாய் தன்னை விட்டால் சரி என்று.

ஆனால் அப்படி விட்டால் எப்படி, அவள் ஷன்மதி அல்லவே.

“இங்க பாரு உனக்குப் பாடப் பிடிக்கலைங்கறதுக்காக அவர் மேல தப்பு சொல்லாத.  ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நூறு பசங்களுக்கு மேல அவர்கிட்ட டான்ஸ் கத்துக்க வராங்க.  அவர் அந்த மாதிரி எல்லாம் தப்பு பண்ற ஆளுன்னா எப்படி இத்தனை கூட்டம் வரும்.  டான்ஸ் அப்படின்னா உன்னைத் தொடாமையே சொல்லித்தர முடியுமா கண்ணா.  சில ஸ்டெப்ஸ் சொல்லித் தரும்போது தொட்டுதானேமா ஆகணும்.”

“அம்மா ப்ளீஸ்மா.  நீங்க என்ன சொன்னாலும் நான் ஆட மாட்டேன் சொல்லிட்டேன்”

அடுத்த நிமிடம் ஷன்மதியின் கை கண்ணனின் கன்னத்தில் இறங்கி இருந்தது. 

“என்னடா ரொம்பப் பேசற.  இப்போ எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டு பாட்டு பிராக்டிஸ் பண்ணி முடிச்சிருக்கே.  ஸ்கூல் முடிச்சு வந்த உடனே நாம அந்த டான்ஸ் ஸ்கூல் போறோம்.  முடியாது, பண்ண மாட்டேன் இந்த மாதிரி ஏதானும் அடம் பண்ணிட்டு உக்கார்ந்து இருந்தேன்னா முதுகு தோலை உறிச்சுடுவேன் சொல்லிட்டேன்.  நான் மட்டும் இல்லை, அப்பாவும் இன்னைக்கு ஊருல இருந்து வந்துடுவாங்க.  அப்பாக்கு வர்ற கோவத்தைப் பத்தி உனக்குத் தெரியும், யோசிச்சுக்கோ”, கண்ணன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் அறையை விட்டு வெளியேறினாள் ஷன்மதி.

இன்று மாலை டான்ஸ் ஸ்கூல் போகாமல் எப்படித் தப்பிப்பது, அதுவும் அம்மாவுடன் சேர்த்து அப்பாவையும் சம்மாளிக்க வேண்டுமே  என்று யோசித்தபடயே தன் அம்மா சொன்ன வேலைகளை ஒவ்வொன்றாக முடித்து பள்ளிக்கு சென்றான் கண்ணன்.

ன்னடா கண்ணா கார்த்தாலேர்ந்து மூட் அப்செட்டா இருக்க.  என்கிட்ட கூட பேசவே இல்லை”, தன் மதிய உணவு டப்பாவைத் திறந்தபடியே கேட்டான் ரகு.

“அம்மா கார்த்தால அடிச்சுட்டாங்கடா”

“விடுடா இதெல்லாம் நமக்கு புதுசா என்ன.  நான் கூடத்தான் இன்னைக்கு எங்கம்மாகிட்ட செம்ம மாத்து வாங்கினேன்.  அதுக்குன்னு மூட் அப்செட்டாவா உக்கார்ந்து இருக்கேன்.  அதெல்லாம் இந்தக் கன்னத்துல வாங்கி அந்தக் கன்னத்துல விட்டுடம்னும்டா”

“ப்ச் போடா நீ அடி வாங்கினேனா நிஜமாவே தப்பு பண்ணி இருப்பே, அதுனால ஆன்ட்டி உன்னை அடிச்சிருப்பாங்க.  ஆனால் எங்க வீட்டுல அப்படி இல்லை.  நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம அடிச்சுட்டாங்க”

“அது கரெக்ட்தாண்டா.  நான்தான் கார்த்தால பாத்ரூம் ஃபுல்லா சோப்பைக் கொட்டிட்டேன்.  எனக்கு அப்பறம் குளிக்கப் போன என் தம்பி அதுல வழுக்கி விழுந்துட்டான்.   அதுக்குதான் உதை விழுந்துது.  சரி அதை விடு.  நீ எதுக்கு அடி வாங்கின.  நீதான்  எந்த  கலாட்டாவும் பண்ணாத ரொம்ப நல்ல குழந்தையாச்சே.  எங்கம்மாவே எப்போ என்னைத் திட்டினாலும் உன் பேர் சொல்லித்தான் திட்டுவாங்க.  அவனை மாதிரி இருக்கப்  படிடான்னு”

“ப்ச் பேசாம நான் உங்க வீட்டுலையே பொறந்திருக்கலாம்டா.  நான் அந்த டான்ஸ் அங்கிள் பத்தி சொல்லி இருக்கேன் இல்லை.  இனிமே நான் அங்க போய் டான்ஸ் கத்துக்க மாட்டேன்னு சொன்ன்னதுக்குதான் அடிச்சாங்க”

“ஓ ஆனா நீ அவங்ககிட்ட அங்க என்ன நடந்ததுன்னு சொன்னியா?”

“சொன்னேன்டா, அப்போக்கூட அம்மா என்னை நம்பாம நான் சும்மா பொய் சொல்றேன்னு சொல்றாங்க.  இன்னைக்கு அப்பா வேற ஊருலேர்ந்து வந்துடுவாரு.  அவரை சமாளிக்கவே முடியாதுடா.  இந்தக் காம்படிஷன்க்காக ஏகப்பட்ட பணம் செலவழிக்கராறு.  நான் முடியாதுன்னு  சொன்னா அவ்வளவுதான்,  ஆனா என்னால திரும்பி அங்க போக முடியாது.  டேய் நீதான் நல்ல ஐடியாலாம் சொல்லுவியே. எனக்கும் இதுலேர்ந்து தப்பிக்க ஒரு   ஐடியா சொல்லேன்”

“நீ சொல்றது புரியுதுடா.  சரி மொதல்ல சாப்பிடலாம்.  அப்பறம் உக்கார்ந்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.  எனக்கு யோசனை வரணும்ன்னா வயுறு ஃபுல்லா இருக்கணும்டா”

“ஏண்டா யோசிக்க மூளைதானே நிறைய வேணும், வயிறு எதுக்கு ஃபுல்லா இருக்கணும்”

“ஆமாம் இதெல்லாம் என்கிட்ட வக்கணையாக் கேளு.  உங்கம்மா பேசும்போது மட்டும் வாயைத் திறக்காதே”

பேசியபடியே இருவரும் சாப்பிட்டு முடிக்க, ரகு தன்னை ஒரு பத்து நிமிஷம் தொந்தரவு பண்ணாமல் இருக்கும்படிக் கூறி கண்ணை மூடிக் கொண்டு  யோசிக்க ஆரம்பித்தான்.  யோசிக்கும் அவனையே தன்னைக் காக்க வந்திருக்கும் கடவுளாக பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

“என்னடா ஏதானும் தோணிச்சா?”, பத்து நிமிடங்களுக்குப் பிறகும் ரகு கண்ணைத் திறக்காததைப் பார்த்து கண்ணன் கேட்க

“ஹ்ம்ம் எனக்கு ரெண்டு ஐடியா தோணுது.  உனக்கு எது ஓகேன்னு பாரு, சரியா.  போன வாரம் சண்டே அன்னிக்கு டிவில ஒரு படம் போட்டாங்க, அதுல ஒரு அங்கிள் தனக்குப் பிடிச்ச ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொல்லி அவரோட நாக்கை கட் பண்ணிக்கராறு.  அதே மாதிரி நீயும் பண்ணிட்டேன்னு வைய்யி உன்னால பாட முடியாது, என்ன சொல்ற”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.