(Reading time: 4 - 7 minutes)

கௌரவம் - சசிகலா

ப்பொழுதும் கலகலவென பேசி சிரித்தபடி வேலை செய்யும் தணிகாசலம் இன்று சோக முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் பரமேஸ்வரனுக்கு மனசு தாளவில்லை. இருவருமே அந்த ஹோட்டலில் ஒன்றாக வேலை செய்பவர்கள். பெரிய படிப்பும் பண வசதியும் இல்லாததால், இந்த சர்வர் வேலையிலேயே பல வருடங்களாக இருந்துவிட்டனர். பிள்ளைகளின் படிப்பு, வீட்டு செலவு என்று இருக்கையில் அகலக்கால் வைத்து சறுக்கிவிடக்கூடாதே என்பதற்காகவே அதே இடத்திலேயே இருந்துவிட்டனர் . யோசித்தபடியே வந்த பரமேஸ்வரன் ,

"என்னப்பா தணிகாசலம், ஏன் என்னவோப்போலிருக்கே ? உடம்புக்கு ஏதேனும் முடியலையா?" என்றபடி அருகே அமர்ந்தார் .

" இல்லப்பா .. உடம்புக்கு என்ன? நல்லாத்தான் இருக்கேன். மனசுதான் சரியில்ல"

Kowravam

" என்னாச்சு ?"

"ப்ச் .. என்னன்னு  சொல்றது?  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது என் பிள்ளகளுக்காகத்தான். ஆனா அவர்களுக்கு நான் இந்த வேலை செய்யறது அசிங்கமாப்படுது . இத்தனை நாளா சோறு போட்டது இந்த வேலை தானே ?நான் மட்டுமென்ன நல்ல வேலை கிடைச்சு இன்னுமும் இங்கே இருக்கேனா? படிப்புமில்ல. வேறென்ன செய்ய? "

“ விடுப்பா... இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு. சின்ன குழந்தைங்க. அவங்களுக்கென்ன தெரியும். பசங்க சம்பாதிக்க ஆரம்பிச்சதும் சின்னதா ஒரு டீக்கடை அரம்பிசிட்டாபோச்சு "

"அது சரி. அதுக்கும் டீக்கடைன்னு குத்தம் சொல்வானுங்க."

 "புரிஞ்சிக்குவாங்கப்பா. கவலைப்படாதே. வேலையிருக்கு வா" என்றபடி தணிகாசலத்தின்  கவனத்தை திசை திருப்பி அழைத்து சென்றார் பரமேஸ்வரன்.

ன்னதான் நண்பருக்கு ஆறுதல் சொன்னாலும் தன் மனதை அடக்குவது அவ்வளவு சுலபமாயில்லை பரமேஸ்வரனுக்கு. அவரைப் போலவே இரு பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறாரே..பெரியவன் இளங்கோ இன்ஜினியரிங் நான்காம் வருடம் படித்து கொண்டிருக்கிறான். மகள் தாரா டீச்சர் ட்ரைனிங் படித்து கொண்டிருக்கிறாள்.என்னதான் நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் தணிகாசலம் சொன்னதுபோல் இவர்கள் மனதிலும் எண்ணமிருந்தால் என்ன செய்ய? நண்பனின் பிள்ளைகள்போல் தன பிள்ளைகளும் நடந்து கொண்டால் ? நினைக்கும்போதே மனம் வேதனையாய் இருந்தது.

இருப்பினும் தன்  கடமை அவர்களை முன்னேற்றுவது . தவறான வழியில் சம்பாதிக்ககூடாதே தவிர எந்த வேலை செய்தாலும் தவறில்லை. ஒருவேளை தன் பிள்ளைகளே அவ்வாறு நடந்துகொண்டாலும் மனதை தேற்றிக்கொள்ளதான் வேண்டும் என்று எண்ணியபடியே இருக்க உணவுகூட சரியாக இறங்கவில்லை.

'என்னாச்சு'  என்று கேட்ட மனைவியிடம்கூட 'ஒண்ணுமில்ல. வேலை அதிகம் அதுதான். நான் படுக்கபோறேன் ' என்றபடி மனைவியின் கேள்வி கணைகளிலிருந்து தப்பித்துக்கொண்டார்.

இல்லையென்றால் இதையெல்லாம் அவளுக்கும் சொல்லி அவள் மனமும் வேதனைப் படுவானேன். இன்பத்தை பகிர்ந்துக்கொள்ளலாம் , துன்பதையல்ல என்று எண்ணியபடியே உறங்கப்போனார்.

றுநாள் காலை ஹோட்டலுக்கு சென்றபோது மதியம் வரை வெகு பிஸியாகவே இருந்தது. மதியத்திற்குப் பிறகுதான் சிறிதுநேரம் அமைதியாக அமர முடிந்தது. அப்போது பெரிய சிரிப்பலையுடன் ஒரு கல்லூரி மாணவர்கள் கூட்டம் உள்ளே நுழைய பரமேஸ்வரனின் கவனமும் அவர்கள்புறம் திரும்பியது. ஆனால் அவர்களைப் பார்த்தவுடனேயே திக்கென்றிருக்க உட்புறம் சென்று விட்டார். அவர்கள் அமர்திருந்தது அவர் சர்வீஸ் செய்ய வேண்டிய மேஜை என்றபோதும் உள்ளே சென்று வேறு ஒருவரை அனுப்பிவிட்டு அமர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில் பரமேஸ்வரநின் சக ஊழியர் வந்து

"உன்னை யாரோ பார்க்கணுமாம்பா " என்று சொல்ல யாராக இருக்கும் என்று யோசித்தபடியே பரமேஸ்வரன் வெளியே வந்தார்.

"என்னப்பா ஏன் உள்ளே போனீங்க? நான் உங்களை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேணாமா?"

"இளங்கோ "

"ஏன்பா ஓனர் எதுவும் சொல்லுவாங்களா?"

"அதெல்லாம் இல்லப்பா "

"அப்பறமென்ன .. வாங்க "என்றபடி அவரை அழைத்து சென்றவன் ,

"ஹாய் பிரெண்ட்ஸ் ... எங்கப்பாவை அறிமுகப்படுத்தி வைக்க சொல்லி கேப்பீங்களே.. இவர்தான் எங்கப்பா பரமேஸ்வரன் " என்று பெருமையுடன் சொல்ல,

"ஹாய் அங்கிள். எப்படியிருக்கீங்க? உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் . உங்க பையன் படிப்புல ரொம்ப ஸ்மார்ட் "என்று  பல குரல்கள் ஒலிக்க பரமேஸ்வரனுக்கு மகிழ்ச்சியில் கண்களில் நீர் துளிர்த்தது.

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.