(Reading time: 9 - 17 minutes)

இஸ்திரி - சுரேஷ்

ன்றும் நான் வெறுமையாக ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் விதியின் விஷம விழிகள் பட்டு இன்று கவலையோடு அமர்ந்திருக்கிறேன். பரம்பரை பரம்பரையாக சலவைத்தொழில் செய்து வருபவர்கள் நாங்கள். மக்களின் அழுக்குத் துணிகளை சலசலத்து வரும் ஆற்றுநீரில் துவைத்து, கரையில் உலரவைத்து, பின் இஸ்திரி போட்டு, வேலை செய்த அலுப்பில் எல்லோரும் ஒன்று சேர்ந்து உணவு உண்ணுவோம். இன்பமயமான தருணம் அது. 

ஆற்று நீர் எங்களுக்காகவே மலையிலிருந்து குதித்து வருவதாய்த் தோன்றும். ஆற்றங்கரை அருகிலேயே எங்கள் வீடும் அமைந்திருந்தது. வேலையில்லாத நேரத்தில் வீட்டின் முன் இருக்கும் ஆலமரத்தடியில் ஓய்வெடுப்பேன். தினமும் மூட்டை மூட்டையாக அழுக்குத் துணிகள் குவியும். குவியும் துணிகளை பொதி சுமப்பதற்காக சில கழுதைகளையும் வளர்த்து வந்தோம். எங்கள் உழைப்பை வாரி இறைத்ததால் வறுமையும் எங்களை அண்டவில்லை. எங்களை போன்று பலர் இந்தத் தொழிலை சந்தோசமாக செய்துவந்தோம். 

எங்கள் ஊர் மிதமான வளர்ச்சிகொண்ட கிராமம். காலப்போக்கில் மக்களின் வசதி பெருகப் பெருக எங்களின் தொழில் நலிவடையத் துவங்கியது. எங்கள் தொழிலுக்கு எமனாக வந்து சேர்ந்தவை தான் துணி துவைக்கும் இயந்திரமும் இஸ்திரிப் பெட்டியும். அழுக்கு துணிகள் வரத்து குறைந்து உழைக்க வழியில்லாமல் சோர்ந்த வேளையில் வறட்சியும் எங்கள் ஊரை வாட்டியது. வறுமையும் எங்களை கொத்தித் தின்ன ஆரம்பித்தது. எங்களுக்கு ஜீவாதாரமாக இருந்த நதியும் வறண்டு போனது. எங்களின் வறுமையைப் பார்க்க அது விரும்பவில்லை போலும்! பாதி பேர் விவசாயத்தை விட்டுவிட்டு சொந்தமாக வேறு தொழில் புரிய தொடங்கிவிட்டனர். தொழில் புரிய வசதி இல்லாதோர் வேறு வழியின்றி வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பிழைப்பைத் தேடி சென்றுவிட்டனர். நான் மட்டும் நான் நேசித்த என் பரம்பரைத் தொழிலை விட்டுவிட மனமில்லாமல் இங்கேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 

isthiri

இன்று இவ்வூரில் வண்ணான் என்று சொல்லிக்கொள்ள நான் மட்டுமே இருக்கிறேன். என்னிடமிருக்கும் ஒரே ஒரு நோஞ்சான் கழுதையும் பொதி சுமக்காமல் சோம்பேறியாகிவிட்டது. இன்று எனக்குத் துணையாக ஆலமரத்தடியில் படுத்திருக்கிறது. என் தந்தை 'கடவுளை விட நம்பிக்கை நம்மைக் காப்பாற்றும்' என்று என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் மறையாமல் இருக்கிறது. அதனால், கடைசி நம்பிக்கையோடு நான் காத்துக்கொண்டிருக்கிறேன். 

"இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே வேலையில்லாம இருக்கப்போறீங்க?" என்றாள் என் மனைவி கனகம் வீட்டினுள் இருந்து வெளியே வந்தபடி. 

"வேலையில்லாம இல்ல புள்ள. நம்ம புள்ளைய துணி வாங்கியார சொல்லி அனுப்பிருக்கேன் இப்போ வந்துருவான்"

"ஏன் புள்ளைய அனுப்புறீங்க? அவனையும் உருப்படவைக்க உங்களுக்கு உத்தேசமில்லையா?" என்று சிடுசிடுவென சீறினாள். 

"நேத்தைய விட இன்னைக்கு குறைவான துணிதான்பா கிடைச்சது" என்று கூறியபடி வந்தான் மணி.

"ஏன் ராசா, அந்த நாலாவது வீதில இருக்க வாத்தியார் கொடுக்கலையா?" 

"இல்லப்பா. அவங்க ஊருக்கு போயிருக்காங்க. இந்தாங்க" என்று கூறியபடி வாங்கி வந்த துணிகளையும் அடுப்புக்கரியையும் கொடுத்தான் மணி. 

"அம்மா! பள்ளிகூடத்துக்கு நேரமாச்சி. சாப்பாடு போடு. இன்னிக்காச்சும் சுடு சோறு செஞ்சியா?" 

"ஆமாடா, உன் அப்பா தினமும் பெட்டி நெறைய பணமா கொண்டு வராரு, ஆக்கி ஆக்கி கொட்ட. பழயத வச்சிருக்கேன். சாப்ட்டு கெளம்பு"

அவள் மறைமுகமாக என்னை குற்றம்சாட்டுகிறாள் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தும் நான் அமைதியாகவே இருந்தேன்.

"இத பாருங்க, நாளையோட இந்த வண்டி, இஸ்திரிபெட்டி, ஒண்ணுக்கும் உதவாத இந்த கழுதை எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு நம்ம ஊரு சினிமா கொட்டாயில போய் வேலைய பாருங்க. பண்ணையார் எவ்வளவு பெரிய மனுஷன்? அவரே கூப்பிடுறாரு. இப்படி முரண்டு புடிச்சி எந்த கோட்டைய புடிக்கபோறிங்க?" என்று கோபமாக அறிவுரை வழங்கினாள். பின்பு, "நான் செங்கல் சூளைக்கு போயிட்டு வரேன்" என்று கூறி விடுவிடுவென நடந்தாள். 

கனகத்திற்கு கோபம் எவ்வளவு வருமோ அதே அளவு கருணையும் வரும். என் குடும்பம் உணவுத் தட்டுப்பாடின்றி வாழ்கிறதென்றால் அதற்கு பெரும்பங்கு கனகத்தையே சாரும். செங்கல் சூளையில் கடின வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். அவளுக்காகவாவது நான் வேறு வேலைக்குச் செல்லவேண்டும். கனகம் வேலைக்குச் சென்ற சில நிமிடங்களில் மணியும் பள்ளிக்கு செல்லத் தயாரானான். 

"அப்பா கோவில் தர்மகர்த்தா சீக்கிரம் இஸ்திரி பண்ணிட்டு சட்டைய கொண்டு வர சொன்னாரு. நான் போயிட்டு வரேன்பா" என்று கூறி பள்ளிக்கு சென்றான் மணி. 

நான், இஸ்திரி பெட்டியில் அடுப்புக்கரியை நிரப்பி தணல் போட்டு துணிகளை இஸ்திரி செய்ய ஆரம்பித்தேன். பழைய நினைவுகளை சந்தோசமாக அசைபோட்டபடி வேலையை முடித்து, இஸ்திரி போட்ட துணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க அவர்களின் வீட்டை நோக்கி நடந்தேன். ஒவ்வொரு வீட்டின் வாசலில் நின்று குரலெழுப்பி உள்ளிருப்பவர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வெளியே வந்து பணத்தை கொடுத்து துணியை வாங்கிச் சென்றார்கள்

இறுதியாக கோவில் தர்மகர்த்தா சண்முகம் வீட்டிற்குச் சென்று, "அய்யா! அய்யா!" என்று குரல் எழுப்பினேன். சில வினாடிகள் கழித்து சண்முகம் வெளியே வந்தார்.

"என்ன மாரிமுத்து, இப்படியே காலத்த ஓட்டுறதா முடிவு பண்ணிட்டியா?"

"ஏன் அய்யா இப்படி கேக்குறீங்க?"

"இன்னும் உதவாத தொழிலையே புடிச்சிட்டு இருக்கியே? தினமும் எத்தன துணி வந்துடபோது? வேற பொழப்ப பாருப்பா. இன்னைக்கு கரண்ட் போய்டுச்சி. அதனால தான் இஸ்திரி போட சொல்லி உன் பையன் கிட்ட துணிய கொடுத்தனுப்பினேன். இல்லனா நானே மின்சார இஸ்திரி பெட்டில இஸ்திரி பண்ணிருப்பேன்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.