(Reading time: 17 - 33 minutes)

திருமணப் பரிசு !! - ஜான்சி

திய உணவு நேரம், தனது டிபனை திறந்தவள் சாப்பிட தோன்றாமல் , அந்த அலுவலக உணவகத்தின் ஒவ்வொரு மூலையையும் தன் விழிகளால் துழாவினாள். ச்சே.. இந்த ரேகா எப்பவுமே இப்படித்தான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லணும்...... இன்னும் காணல, வரட்டும் வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்குது... என்று கருவியவள் . ஹாய் சித்ரா டியர்..... என்ற ரேகாவின் குரல் கேட்டதும் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி விட்டு என்ன ரேகா நீ.. எவ்வளவு நேரமாச்சு தெரியுமா? நீ வர வர எனக்கு இம்போர்ட்டான்ஸ் கொடுக்கறது இல்ல ,பிரமோஷன் கிடைச்சதிலருந்து ரொம்பதான் மாறிட்ட போ என்று சிணுங்கினாள். "சாரிடி ரொம்ப லேட் ஆகிட்டேனா? , மீட்டிங் இருந்தது அங்க நெட்‌வர்க் வேற இல்ல அதான் மெஸ்ஸேஜ் செய்ய முடியல , சரி சரி என்னை ரொம்ப கொஞ்ச வேண்டாம் உன் சந்தீப் என்கிட்ட கோபிச்சிட போறாரு" என்று பதிலுக்கு சீண்டினாள் .

அவள் அருகில் அமர்ந்து இருவரும் சாப்பிட துவங்கியதும் சித்ரா பேச ஆரம்பித்தாள்,"ரேகா நீ சொன்ன விஷயம் இருக்கில்ல அதை பற்றி நான் அவர்கிட்ட நேற்று கேட்டேன்,அவர் அதை ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிட்டார் தெரியுமா? மேரேஜுக்கு தான் ஒரு மாசம் இருக்கே அதனால இந்த வாரமே நாங்க ரெண்டு பெரும் "ஃபுல் பாடி செக் அப்" செய்ய பொறோம்".... அவள் பெருமிதமாக கூற, ரேகா தர்ம சங்கடமாக அவளை நோக்கினாள். "ஏன் சித்ரா நான் சொன்னது நீ தப்பா எடுத்துக்கலியே? .."என வார்த்தை கிடைக்காமல் தடுமாற, என்ன ரேகா என் லைஃப் பில் உனக்கு இருக்கிற அக்கறையால தானே சொன்ன அதில என்ன இருக்கு .நீ மட்டும் தைரியம் தரலன்னா நான் இந்நேரம் அந்த உப்பு மூட்டையை இல்ல கட்டிஇருந்திருப்பேன்... கல கல என சிரித்தாள் அவள், அவளது சிரிப்பில் ரேகா மனம் இலகுவாக இன்னும் பல கதைகள் பேசியவர்களாக சாப்பிட்ட பின் தங்கள் டிபார்ட்மென்டிற்கு திரும்பினர்.

சித்ரா வேலைக்கு சேர்ந்த முதல் நாள் மனமெல்லாம் பயமும் பட படப்புமாக அலுவலகத்திற்கு வந்தவள் தனக்கு சீனியரான ரேகாவிடம் அலுவலக நடைமுறைகள் கற்று கொண்டாள்,அவளின் கனிவான குணத்தின்பால் கவரப்பட்டதால் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக நெருங்கிய தோழிகளாக ஆகிவிட்டனர் .

Thirumana parisu

ரேகா எப்போதுமே அமைதியான குணம் ஆனால், சித்ராவோ பட பட என பேச்சும் துரு, துருவென துள்ளலுமாக திரிபவள். இருவரும் குணத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் கூட ஒருவர்பால் மற்றவர் கொண்ட அன்பும்,அக்கறையும் அவர்களை வலுவான நட்பில் இணைத்திருந்தன.

ஒரே இடத்தில் வேலை செய்தவரையில் உடனுக்கு உடன் சித்ராவிற்கு அவள் நினைத்ததை ரேகாவிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆனால்,சமீபத்தில் ரேகாவிற்கு பணி உயர்வு கிடைக்க வேறு டிபார்ட்மென்டிற்கு மாறியதும் உணவு இடை வேளை மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது.அதில் சித்ராவிற்கு ஒரே வருத்தம்.

ரேகாவிற்கு அவள் சொன்ன உப்பு மூட்டை விஷயம் ஞாபகம் வந்தது புன்முறுவலுடன் அதை யோசித்தவாறு வேலையை ஆரம்பித்தாள்.அன்றொரு நாள் சித்ரா அருகில் வந்து," நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன் ரேகா" என்றாள், என்ன என கேட்க," வீட்டில மாப்பிள்ளை பார்த்திருக்காங்க எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு நான் திருமணம் செய்யவா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்கு அதிலும் அந்த ஆள் இருக்காரே சரியான உப்பு மூட்டைடி?!!! கேட்ட ரேகாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவள் பெரும்பாலும் தொந்தி இருப்பவர்களை அப்படி சொல்லுவாள் என தெரியுமாதலால் இவளை சொல்லி திருத்த முடியாது என்று நினைத்தவாறு . ம்ம்.. என்று அவளை தொடர சொன்னாள்.

"அந்த ஆள் கிட்டே தனியா பேசினேனா அவர் பேச்சும், முழியும் ஒண்ணும் பிடிக்கல, நீங்க சிலிம்மா ஷில்பா ஷெட்டி மாதிரி இருக்கீங்க, அதிலும் உங்க கண் மீன்விழியேதான்னு ஒரே வழிசல், ரோட் ஸைட் ரோமியோ மாதிரி கமெண்ட் அடிக்கிறான்.அவனும் அவன் பார்வையும் இந்த சொல்வாங்களே பெண் பார்க்க போறதுன்னா குடும்பத்தோட போய் ஸைட் அடிக்கறதுன்னு அப்படித்தான் நினைச்சிருப்பான் போல,அவன் மூக்கு மேலயே ஒரு பன்ச் விட்டிருப்பேன் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது.ஆனால் பிடிக்கலன்னு நான் சொன்னா வீட்டில எப்படி எடுத்துக்குவாங்கன்னு புரியல.அரசாங்க வேலை பார்க்கிறவர்னு எல்லோரும் ரொம்ப விருப்பபடுறாங்க நான் என்ன சொல்ல?"............என்றவளை உற்று பார்த்து விட்டு," உன் விசிறிகள் எண்ணிக்கை ரொம்ப கூடி கிட்டே போறது சித்ரா" என்று சிரித்தவளை, முதுகிலேயே ரெண்டு அடி போட்டவள் "என்னடி கிண்டலா?" என்று முறைத்தாள்.

"நான் எவ்வளவு ஸீரியஸா பேசிட்டிருக்கேன்" என்று குறை கூற, சரி சரி இப்ப என்ன திருமணம் செய்யணுமா வேண்டாமான்னு குழப்பம் அப்படி தானே? இங்க பாரு பெற்றவங்க எப்போதுமே பிள்ளைகள் நன்மைக்காகத்தான் சொல்வாங்க அதனால திருமணம் செய்வது பற்றி குழம்பாதே, அதது வயசில் செஞ்சுக்கணும், ஆனால் யாரை திருமணம் செய்யணும் என்பதை நீதான் முடிவெடுக்கனும் அரசாங்க வேலை, அம்மா அப்பா விருப்பம் எல்லாவற்றையும் ஒரு பக்கம் தள்ளி வச்சிட்டு ஒரு நிமிஷம் இந்த நபர் தான் உன் வாழ்க்கை துணையா வரணும்னு உன் மனசு சொல்லுதான்னு கேளு, சரின்னா பண்ணிக்கோ இல்லன்னா அப்பாக்கிட்ட தைரியமா நீ என்ன நினைக்கிறன்னு சொல்லு. இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், என்னை பொருத்த வரைக்கும் பெண்கள் தங்களுடைய திருமண விஷயத்தில் மட்டும் எப்போதுமே சுயநலமா தான் முடிவெடுக்கணும்னு நான் சொல்லுவேன் என்று சொல்லி முடிக்கும் போது அவள் முகத்தின் இறுக்கம் கூடி போயிருந்தது.

டுத்த நாள் அவளிடம் சித்ரா," ஹேய் தாங்க்ஸ் ரேகா ,நீ சொன்ன அட்வைஸ் கேட்டு தெளிவாயிட்டேன். நேற்றே அப்பா கிட்ட எனக்கு இந்த ஆள் பிடிக்கலன்னு சொல்லிட்டேன்,ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்றேன்.' என்றாள். 

அதற்கடுத்த மாதமே சந்தீப் பெண் பார்க்க வர வழக்கம் போல அதற்கு முன் தினம் குழப்பமும், பயமுமாக இவளை சித்ரா வறுத்தெடுத்தாள்,பதில் சொல்லாமல் புன்னகைத்தவளை பார்த்து "கல்லுளி மங்கிடி நீ" என்று திட்டிக் கொண்டு இருந்தாள். இவள் கண்டு கொள்ளவே இல்லை, அவளுக்கு தான் சித்ராவைப் பற்றித் தெரியுமே அடுத்த நாள் இன்னும் நிறைய கதை கேட்க வேண்டி இருப்பதால் அதற்கு கொஞ்சம் எனர்ஜியை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த பெண் பார்க்கும் படலத்திற்கு அடுத்த நாள் கனவிலே மிதந்தவளாக வந்த சித்ராவை பார்த்த ரேகாவிற்கு எல்லாம் புரிந்து போனது. ஓஹோ!! மேடம்கு மாப்பிளையை ரொம்ப பிடிச்சிடுச்சி போல என்று, அவளிடம் வந்தவள் உற்சாகமாக "ரேகா,தெரியுமா சந்தீப் ரொம்ப ஃப்ரென்லிடி கண்ணை பார்த்துதான் பேசினான்,வழியல.. தன் வேலை ,வருமானம் முதலா எல்லா விஷயமும் ரொம்ப இயல்பா என்கிட்ட பகிர்ந்துகிட்டான்". நீ சொன்னேயில்ல, அது போலவே என் உள் மனசு என் கிட்ட இவன் தான் என் லைஃப் பார்ட்னர்னு சொன்னது நான் உடனே அப்பா கிட்டே சம்மதம் சொல்லிட்டேன் என்று சொன்னவள் முக மலர்ச்சி பார்த்து இவள் மனம் நிறைந்தது வாழ்த்துகள் சொன்னாள் .

எப்போதுமே மனதில் பட்டதை எடுத்துச் சொல்வதோடு சரி தன் கருத்தை வலியுறுத்தாதவள் முதல் முறையாக சித்ராவிடம் "ப்ளீஸ்டி நீயும் சந்தீப்பும் மெடிகல் செக் அப்" செஞ்சுக்கோங்க என பல முறை வலியுறுத்தியிருந்தாள்.அவள் கூறிய யோசனைபடியே சித்ரா அதற்காக தன் வருங்கால கணவனிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள்.முதலில் சொல்லி விட்டாலும் கூட பிறகு "இவள் என்ன தேவையற்ற விஷயத்தில் தலையிடுகிறாள்" என்று சித்ரா தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என ரேகாவிற்கு மனதில் ஒரு தவிப்புத்தான் ஆனால் இப்போது சித்ராவின் பதில் கேட்டதும் ஏனோ மிகவும் நிறைவாக உணர்ந்தாள்.

லுவலகத்திலிருந்து புறப்பட்டவளுக்கு அன்று தன்னுடைய தமக்கையின் ஞாபகம் மிக அதிகமாக வந்தது.அவளை சந்திக்க புறப்படும் முன் க்ரெச்சிற்க்கு ஃபோன் செய்தாள். 

எதிர் முனையில் ஃபோன் எடுக்கப்பட்டது .

"சுமதி அக்கா நான் ரேகா பேசறேன். நான் ஆஃபீசிலிருந்து வர 1 மணி நேரம் கூடுதலா ஆகிடும்.

ஏன்ஜல் குட்டி எப்படி இருக்கா? அழாம இருக்காளா?"

"ரேகா, நீ கவலைபட வேண்டாம் உன் மக அழாம விளையாடிகிட்டு இருக்கா.ஒரு மணி நேரம் தானே அதற்க்கென்ன நான் அவளைப் பார்த்துக்கிறேன்

அவளுக்கு சாயங்கால சாப்பாடும் கொடுத்திடறேன் அமைதியா வா" என்று பதில் கிடைத்ததும்,

"சரி அக்கா தேங்க்ஸ் " என்று சொல்லி தொடர்பை துண்டித்தாள்.

.ரேகாவின் மனதில் அக்காவின் நினைவுகள் அலைகளாக எழுந்தன.

ப்போது ரேகாவிற்கு ஒரு பதினாறு வயது இருக்கும், அக்கா கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடுதலில் மும்முரமாக இருந்த நேரம். எதிர்பாராத விதமாக பெற்றோர்கள் இருவரும் சாலை விபத்தில் மரணம் எய்து விட, அந்த போராட்டமான சூழ்நிலையை அக்கா எவ்வளவு மனத்திடத்துடன் சமாளித்தாள். தாய் தந்தையின் இழப்பு தெரியாமல் பார்த்து கொண்டாள். சொந்த வீட்டை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை அல்லவா ,அப்போது அக்கா மட்டும் தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டு தன்னை விட சிறியவளான விவரம் தெரியாத என் வாழ்க்கையையும் அமைத்திரா விட்டால் சொந்தங்கள் என்று யாரும் எட்டி பார்க்காத அந்த தருணத்தில் என்ன ஆகியிருக்குமோ?

அக்கா எனக்கு தோழி, ஆலோசகர் ,அம்மா எல்லாம் ஆகி போனாள்.தன்னுடய திருமண வயது ஆகியும் தன்னுடைய வாழ்க்கையை எண்ணாமல் என் படிப்பிற்காக உழைத்தாள்.இப்படி சுயநலமில்லாத சிந்தனை எத்தனை பேருக்கு வரும்?!!. இன்று என் படிப்பு , நான் செய்யும் வேலை எல்லாம் அவள் தந்த கொடை அல்லவா? என்று எண்ணும் போது மனம் உருகுகின்றதே. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.