(Reading time: 14 - 27 minutes)

நாட்டாமை தீர்ப்பு - ரதி

This is entry #02 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

"ல்லோர் வீட்டிலும் தான் இப்போ டிவி இருக்கே. ஊருக்கே கேட்கும் படி இப்படி அலற விடறதே உங்களுக்கு வேலையா போச்சு"  கையில் துடைப்பத்துடன் விஜயகுமாரி தன் கணவர் நாகராஜனை முறைத்துக் கொண்டிருந்தார்.

வாசலில் பால் ஊற்றும் செல்லமா வந்து நிற்க, " வந்து பாலை வாங்கி அடுப்பில் வைங்க" என்று விஜயகுமாரி சொல்ல

" மனுஷன நிம்மதியா ஒரு நியூஸ் கேட்க விடறியா.. காலையில் இருந்து எழுப்பறேன். அம்மணிக்கு ஏழு மணிக்குத் தான் விடியுது .நீயெல்லாம் மாமியார் நாத்தனாரிடம் சிக்காமல் சொகுசா இருந்துட்ட, அதான் இப்படி துளிர் விட்டு இஷ்டம் போல ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டு இருக்க " என்று புலம்பிய படியே பாலை வாங்கி அடுப்பில் வைத்தார் நாகராஜன்.

புடவை தலைப்பை இடுப்பில் சொருகிய படியே," இப்போ என்ன நாங்க எங்க இஷ்டத்துக்கு நடந்து இப்போ உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துட்டோம். வீணா எதுக்கு சொர்க்கத்தில் இருக்கிறவங்களை எல்லாம் வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கீங்க.. இருக்கிற வரை அவங்க மெச்சும் படியா தான் நடந்துகிட்டோம் நாங்க...உங்களுக்கு என்னை எல்லோரும் செல்லம் கொஞ்சினாங்கன்னு பொறாமை" என்று பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார் விஜயா.

"இவ மேல தான் நான் பொறாமை படறேன். ஹா ஹா . என் அழகுக்கும் அறிவுக்கும் பொண்ணுங்க கியூவில் நின்னாங்க. ஏதோ என் அம்மாவிற்கு அப்போது என்ன கிரகம் ஆட்டுவித்ததோ உன்னை பிடித்துப் போய்விட்டது" என்று சீண்டி விட்டார்.

"ஹையோ! இவரு பெரிய சொக்கநாதர். அப்படியே இவர் அழகில் மயங்கி போய் எல்லோரும் விழுந்துட்டாங்க. நீங்க பொண்ணு பார்த்த லட்சணம் எனக்கு தெரியாதாக்கும். மதினி சொன்ன கதையெல்லாம் சொன்னா நாளைக்குப் பொழுது விடிந்து வெள்ளைக் கோழி கூவிரும்"  என்று விஜயா நக்கலாக சொல்ல

நாகராஜன், " என்னத்த தான் டிகிரி படிச்சியோ. சேவல் தான் காலையில் கூவும். கோழியா கூவும்" என்று நானும் விடுவேனா என வேட்டியை மடித்துக் காட்டாத குறையாக சொற்போர் களத்தில் வீரமாய் முன்னேறினார்.

"படித்தப் பெண் தான் வேண்டும் அதுவும் மாஸ்டர் டிகிரி படித்திருக்க வேண்டும்ன்னு பெரிய கண்டிஷன் எல்லாம் போட்டது யாரு. அத்தை என்னைப் பற்றி சொன்னவுடன் போட்டோ கூட பார்க்க வேண்டாம் என்று தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையைத் தலையை ஆட்டியது யாரு.. பேச வந்துட்டார்" என்று வீராவேசமாக களம் இறங்கினார் விஜயகுமாரி.

தனக்கு ஒரு சிறு இடைவேளை வேண்டும் என்று உணர்ந்த நாகராஜன்," என்கிட்டே சண்டை போடுவது என்றால் உனக்கு திருப்பதி லட்டு சாப்பிடுவதைப் போல இருக்குமே.  போய் டிபன் செய்கிற வேலையை பாரு. நான் போய் குளித்து விட்டு வருகிறேன்" என்று தற்காலிகமாகத் தப்பி ஓடினார்.

வீட்டு வேலை செய்யும் சுமதி வந்துவிட அவளுக்கு ஆணைகள் பிறப்பித்து ராகி தோசை செய்து தன் கணவருக்கு எடுத்து வைத்தார்.

இரண்டாவது சுற்று ஆரம்பம். " நேற்று கம்பு அடை இன்று ராகி ரொட்டி. நான் மனிதனா இல்லை கால்நடையா" என்று சற்று உரக்கவே பேசிவிட்டார் நாகராஜன்.

சரியாக அந்த நேரம் பார்த்து தொலைபேசி சிணுங்க அதை எடுத்த விஜயகுமாரி," சொல்லு அம்முலு!! எப்படிமா இருக்க.. உடம்பு எப்படி இருக்கு" என்று தாய்மையின் பாசம் சொட்ட பரிவுடன் வினவினார்.

அம்முலு  என்ற உடனே நாகராஜன் தன் மனைவிக்கு சைகையால் ராகி தோசையைக் காட்டி "அவளிடம் சொல்லாதே! "என்று சமிஞ்கை செய்துக் கொண்டிருந்தார்.

புரிந்தும் வேண்டும் என்றே புரியாதது போல் சைகையில் என்ன என்று வினவியவாறே எதிர்முனையில் கேட்ட கேள்விக்குப் பதிலாய்," நீயே கேள் உன் அருமை அப்பாவிடம். காலையில் இருந்து என்னுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.. ராகி தோசை வேண்டாமாம். பூரி கிழங்கு தான் வேணுமாம். நான் உப்பு சப்பில்லாத சாப்பாட்டைப் போட்டுக் கொடுமை படுத்துகிறேனாம்" என்று கண் காது மூக்கு வைத்து வேண்டும் என்றே தன் மகளிடம்  போட்டுக் கொடுத்தார்.

உடனே அவர் கையில் இருந்த தொலைபேசியைப் பிடுங்கி," ராஜாத்தி!எப்படி கண்ணு இருக்க"  என வினவ " நான் நல்லா இருக்கிறேன் அப்பா. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று மகள் வினவ பதில் சொல்லும் முன்," அப்பா  உங்கள் பேரனும் பேத்தியும் உங்கள் குரல் கேட்டு குஷி ஆகிடாங்க. பாருங்க உதைக்கிறார்கள்" என பூரிப்புடன் சொல்ல

அளவில்லாத சந்தோஷத்துடன் தன் மனைவியை நோக்கி," பாரு, பேரன் பேத்திக்குக் கூட தாத்தான்னா தான் பிரியம்" என்று பெருமை பீற்றிக் கொண்டார்.

மகள்  எதிர்முனையில்," அதெல்லாம் சரி தான். பூரி கிழங்கு கேட்கிறீர்களாமே. என்ன இது அப்பா" என்று கடிந்து கொள்ள

நாகராஜன் உடனே தலையை இடம் வலமாக ஆட்டி," இல்லைடா அம்முலு . உன் அம்மா வேண்டும் என்றே சொல்கிறாள். உனக்கு அப்பாவைத் தெரியாதா என்ன. நான் எவ்வளவு சாந்தமானவன் என்று. சாப்பாடு விஷயத்தில் நீ சொல்லியிருக்கும் படி தான் தினம் கவனமாக சாப்பிடுகிறேன் .அவள் தான் காலையில் இருந்து பொழுது போகாமல் வம்பு வளர்த்து என் பிபியுடன் விளையாடுகிறாள். அவளிடம் சொல்லி வைடா செல்லகுட்டி" என்று தன்னிலை விளக்கம் கூறிக் கொண்டிருந்தார்.

"சரி நான் நீங்கள் சொல்வதை நம்புகிறேன் அப்பா.. அடுத்த வாரம் எல்லா டெஸ்டும் எடுத்து எனக்கு ரிபோர்ட் மெயில் பண்ணி விடுங்கள். நான் என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மெயில் அனுப்பி விட்டேன்.. அவர் பேச வேண்டுமாம். இதோ தருகிறேன்" என மகள் சொல்ல

"சரிடா கண்ணு..அதெல்லாம் எல்லா டெஸ்டும் நார்மலா தான் வரும் பாரேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து விஜயா பழிப்பு காட்டிக் கொண்டிருந்தார்.

" அப்பா..என்ன காலையிலேயே அம்மாவுடன் டிஷ்யூம் டிஷ்யுமா..நானும் உங்க அம்முலு கிட்ட சண்டை போடுன்னு சொல்றேன்..கேட்கவே மாட்டேன் என்கிறாள். நீங்கள் வந்து தான் சொல்லிக் கொடுக்கணும் அவளுக்கு"  என்று மகனாய் வாஞ்சையுடன் பேசிய மருமகனிடம் சிரித்துக் கொண்டே," அம்முலுவை பத்திரமாய் பார்த்துக் கொள்" என்று கூறி தன் மனைவியிடம் கொடுத்தார்.

" எப்படி இருக்கிறாய் ஆதி. என்ன சொன்ன இவர்கிட்ட இப்படி சிரிச்சிட்டு இருக்கார்" என்று தன் மருமகனிடம் விஜயா வினவ," அம்மா!! அதை அப்பாவிடமே கேட்டுக் கொள்ளுங்கள். அப்புறம் நானே உங்களை நியுயார்க்கில் இருந்து கூட்டி வருகிறேன். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அந்த வாரம்" என்று கூறினான்

"அம்முலுவை தனியா விட்டுட்டு எப்படி" என்று விஜயா சொல்லும் முன்" உங்க பொண்ணு ஆர்டர். உங்களை நான் கூட்டி வர வேண்டும் என்று. அவளிடம் கொடுக்கவா என்பதற்கு, "இல்லை வேண்டாம்" என்று மற்ற நல விசாரிப்புகள் முடிந்து வைத்து விட்டார்.

லாஸ் ஏஞ்செலஸ் நகரத்தில் கடற்கரை பார்த்த பால்கனியில் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்த இருவரும் சிரித்து ஓய்ந்து நிதானித்த வேளையில்," உன் கூட சண்டை போடலைன்னு உனக்கு குறையா இருக்கா... படவா" என்று செல்லமாய் தன் கணவனை அடித்தாள் அம்முலு.

"அம்மாவும் அப்பாவும் சோ கியூட் " என்ற கணவனின் தோள் சாய்ந்து கொண்டு

"ஆமா..எப்போதுமே இப்படி தான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.அவர்கள் இருவரும்  கணவன் மனைவியாய் ஒற்றுமையாய் பேசி சிரித்து மகிழ்ந்து  நான் பார்த்ததே இல்லை. எப்போதும் இவர்களுக்கு நான் தான் நாட்டாமை .நான் வேலையில் பிசியாக இருக்கும் போதும் கூப்பிட்டு இருவரும் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் நன்றாக திட்டி விடுவேன். இவர்களைப் பார்த்து கல்யாணம் கணவன் மனைவி உறவு எல்லாம் இப்படி தானோ என்று கூட நினைத்திருக்கிறேன். நீ தான் அந்த எண்ணத்தை மாற்றி விட்டாய் " என்று கணவனை காதலுடன் பார்த்து சொன்னாள் அம்முலு.

"எனக்கென்னவோ இதில் வேறு கருத்து தோன்றுகிறது குட்டிமா. சரி வா நேரம் ஆகிறது. சாப்பிடலாம்" என்று தன் கருத்தை முழுவதுமாக சொல்லாமல் விட்டு விட்டான் ஆதி.

மெரிக்கா  செல்ல தயார் ஆகிக் கொண்டிருந்தனர் விஜயகுமாரி நாகராஜன் தம்பதியினர். முதலில் நியுயார்க்கில் வசிக்கும் தங்கள் இளைய மகள் குட்டுலு வீட்டில் இரு தினம் தங்கி அவளுக்குத் தேவையான மசால் பொடி , சாம்பார் பொடி போன்றவற்றை சேர்ப்பித்து விட்டு அங்கிருந்து தங்கள் மூத்த மருமகனுடன் லாஸ் ஏஞ்செலஸ் செல்வதாக ஏற்பாடு. அம்முலுவின் தலைப் பிரசவத்திற்கு.

" விஜயா.. என் மருந்து டப்பாவை எங்கே வைத்தாய். ஒரு பொருள் ஒரு இடத்தில வைத்தால் அங்கு அப்படியே இருக்கிறதா.. எப்போ பார். இதை அங்கு வைப்பது அதை இங்கு வைப்பது" ஆரம்பித்து விட்டது இவர்களின் இன்றைய திருவிளையாடல்.

"நீங்கள் குப்பை மாதிரி போட்டு வைத்து இருந்தீர்கள். நான் அதை அடுக்கி வைத்தது இப்போது தப்பாக போய் விட்டது. அது தானே என்னுடன் இன்று வாக்குவாதம் செய்ய வில்லை என்றால் விமானம் பறக்காதே. அந்த பொது சேவையோ" என்று விஜயா பிரதிவாதம் வைத்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.