(Reading time: 5 - 10 minutes)

குழந்தையின் சிரிப்பில்... – கவாகம்ஸ்

This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

மாலதிக்கு தலைவலி சற்று குறைந்திருந்தது. மணி மாலை நான்கை கடந்திருந்தது. பால்கனியில், வெயிலின் கோபம் தாளாமல் பூமியிடம் தஞ்சம் அடைந்திருந்த பூக்கள் எல்லாம் சற்று தலைதூக்கி மாலதியை பார்த்துச் சிரித்தன. அவளும் பதிலுக்கு புன்னகை புரிந்து தான் வழக்கமாக உட்காரும் நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் இயற்கையை ரசித்தாள். கணவரும் குழந்தைகளும் ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள் என்று எண்ணியவுடனே சிறிது பரபரப்படைந்தாள்.

சமையலறையில் நுழைந்து வடைக்காக அரைத்து வைத்த உளுந்தை ஆராய்ந்தாள். அசதியில் அதிக நேரம் தூங்கிவிட்டபடியால், உளுந்து தண்ணீர் விட்டிருந்தது.

"ஐயையோ! தண்ணி விட்டிருச்சே! இனி வடை சரியா வராதே" என்று வருத்தப்பட்டுக் கொண்டாள்.

KUZHANTHAIYIN SIRIPIL

மளமளவென்று வெங்காயம், இஞ்சி, கொத்துமல்லிதழை அரிந்து , தேவையானவற்றை மாவுடன் கலக்கி, வடைகளை சுட்டு ஹாட் பாக்ஸில் நிரப்பி முடிக்கவும் காலிங் பெல் சத்தம் கேட்கவும் சரியாய் இருந்தது. 

கதவை திறந்தவுடனே, "அம்மா ! " என்று குழந்தை சந்திரிகா மாலதியை கட்டிப் கொண்டாள். " என் செல்லம்!" என்று நெற்றியில் முத்தமிட்டாள் மாலதி. 

15 நிமிடங்களில் ஆறு வயது சந்திரிகாவிற்கு கைகால் முகம் கழுவி, உடை மாற்றி , கையில் ஒரு பொம்மையும் கொடுத்து சோபாவில் உட்கார வைத்தாள். 

"ட்ரிங்" "ட்ரிங்"

இப்பொழுது கணவர் சுரேஷ்.

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மிகுந்த கோபத்தோடும் விரக்தியோடும் வந்திருந்தான். 

மாலதி, "அப்பா வந்தாச்சு ! " என்று சந்துவிடம் குதூகலமாய் கூறிவிட்டு " போய் பேஸ்வாஸ் பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள டீ போட்டுடறேன்" என்றாள் கணவனை பார்த்தபடி. சுரேஷ் எதையுமே கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான். 

சுரேஷ் ரெடியாகி வருவதற்குள் டீயும் போட்டு முடித்து, வடையையும் டீயையும் ஹாலில் டீபாய் மேல் வைத்து தானும் அமர்ந்தாள்.

"சந்து! இந்தா குட்டி! இதை சாப்பிடு..., அம்மா அப்புறமா பால் ஊத்தித்தரேன்", என்று கூறி பிஞ்சு விரல்களுக்கு நடுவில் வடையை திணித்தாள். 

சந்துவும் அணில் வேர்கடலையை கொறிப்பதைப்போல், கைவிரல்களுக்கு நடுவில் அழகாய் வைத்து சிறிது சிறிதாக கடித்துச் சாப்பிட்டாள்.

சோபாவில் வந்தமர்ந்து வடையை கையிலெடுத்த சுரேஷ், "என்ன இது? மெதுவடை மாதிரியா இருக்கு? ஒரு சேப்பே இல்லாம பக்கோடா மாதிரி" என்றான் நக்கலாய்

"ஏன் அப்படியென்ன குறைய கண்டுட்டீங்க" என்றாள் மாலதி கோபமாய்

"உளுந்து வடைனா மொதல்ல வட்டமா இருக்கும். நடுவுல சின்ன ஓட்டை இருக்கும் . அப்பத்தான் சென்டர்ல நல்லா வேகும். இதுகூடத் தெரியல. உன்னையெல்லாம் கட்டுக்கிட்டு .... " என்று தலையில் அடித்துக் கொண்டு மாலதியை மட்டம் தட்டினான். ஆபிசில் தன் உயர்அதிகாரிகள் மேல் காட்ட முடியாத வீரத்தை கோபத்தை தன் மனைவி மேல் காட்டி திருப்திப்பட்டுக் கொண்டான்.

மாலதிக்கு குறைந்திருந்த தலைவலி சட்டென்று அதிகமானது. 

" இவ்வளவு தெரிஞ்ச நீங்களே சமைச்சு சாப்டுக்க வேண்டியதுதானே! என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? 38 வயசாகியும் ஒருத்தியும் திரும்பி பார்கலைன்னு பரிதாபப்பட்டு உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தம்பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று பதிலடி கொடுத்தாள்.

சுர்ரென்று கோபம் தலைக்கேரியது சுரேஷிற்கு.

" யாரு யாருக்கு வாழ்க்கை கொடுத்தது? நான்மட்டும் நயா பைசா வாங்காம உன்ன கல்யாணம் பண்லைன்னு வச்சுக்க உங்கப்பனால உனக்கு கல்யாணமே பண்ணியிருக்க முடியாது.... சோத்துக்கே வழியில்லாத உன் குடும்பத்துலயிருந்து பொண்ணெடுத்தம்பாரு என்னை சொல்லணும். " என்று பொறிந்தான்.

மாலதியின் ரோஷம் உச்ச கட்டத்தை அடைந்தது. 

"இதப்பாருங்க! எதுன்னாலும் என்னோட நிறுத்திக்கங்க! எங்கப்பா அம்மாவை இழுத்தீங்க , அப்புறம் நடக்கறதே வேற. உங்க அப்பா மட்டும் என்ன டாடா பில்லாவா? சின்ன வயசுல தெருத்தெருவா போய் வாழைப்பழம் வித்ததென்ன எனக்குத் தெரியாதா ?" , என்று தன் பங்குக்கு சூளுரைத்தாள்.

சந்திரிகா என்ன நடக்கிறதென்றே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை தாங்க மாட்டாது சுரேஷ், "என்னடி சொன்ன ?" , என்று மாலதியை அறைய கை ஓங்கிக் கொண்டு வேகமாக எழுத்தான். 

ப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த ஆறாம் படிக்கும் கிரிஷ் அப்பாவைத் தடுக்கும் பொருட்டு , " அப்பா !!" என்று கனமான குரலில் கத்தினான். கிரிஷை கவனித்த சுரேஷ் சற்று தணிந்து அமர்ந்தான். ஆனால், தனது கோபத்தை தன் பற்கள் மீது காட்டிக் கொண்டிருந்தான். மாலதி கண்களும் கோபத்தில் சிவந்திருந்தது.

" என்னாச்சு? என்ன பிரச்சினை ? ஏன் இப்படி சண்டை போடறீங்க ?, " என்று கேட்டான் கிரிஷ்.

இருவரும் அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர். 

தன் தங்கையை நோக்கி, " சந்து! என்னாச்சு? ஏன் சண்டை போடுறாங்க ?," என்று அதே கேள்வியை திரும்பக் கேட்டான் கிரிஷ்.

வாயிலிருந்த வடையை மெல்ல விழுங்கிவிட்டு, வலது கையிலிருந்த வடையை இடது கைக்கு மாற்றி, " அத்த்தூ.... அத்து...", என்று சற்றுத் தயங்கினாள்.

"சொல்லு சந்து! எதுவாயிருந்தாலும் பயப்படாம சொல்லு!" , என்று உற்சாகப்படுத்தினான், கிரிஷ்.

சந்து தன் மழலை மொழியில், இழுத்து இழுத்து, " அத்து .... அது.... வந்ந்து.... இத்தோ.. இதோ... இந்ந்த வ்வடைய் வடைய் இருக்குல்ல .... வடை .... அதுல்ல .... அதுல்ல்ல.... வோட்டை... ஓட்டை ..... இல்லியாம்ம்ம்..., " என்று வலது கையால் இடது கை வடையை சுட்டிக்காட்டி மிகுந்த வருத்தத்துடனும் சோகத்துடனும் கூறினாள்.

குபீரென சுரேஷ், மாலதி இருவருமே தங்களை மறந்து சிரித்துவிட்டனர். 

அப்பாவும் அம்மாவும் ஏன் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் தானும் வெட்கத்துடன் நெளிந்து சிரித்தாள், சந்து.

ஆதியும் புரியாமல் அந்தமும் புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான், கிரிஷ். எதுவுமே புரியாவிட்டால்தான் என்ன? இதோ! அவன் இதழ்களும் சிரிக்கத் துடிக்கின்றது...     

This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.