(Reading time: 14 - 28 minutes)

திருமணத்திற்கு பின் காதல் - ரம்யா

This is entry #45 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest

யாருக்காகவும் நான் காத்திருக்க தேவை இல்லை என்பது போல் தன் அழகிய கதிர்களின் ஒளியோடு சூரியன் உதித்தான். காலை பொழுது என்னவோ நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் சித்ராவின் மனதில் இருளே சூழ்ந்து இருந்தது. மண்டபமே விழா கோலம் கொண்டிருந்தது. உறவினர்களின் வருகையும், பெண்களின் பட்டு புடவையின் சரசரப்பும், மல்லிகை பூவின் மணமும் இடத்தை அலங்கரித்தது. இவை அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்தாள் சித்ரா. திருமண பெண்ணிற்கான அடையாளம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தாள். திருமணம் முடிந்து பிறந்த வீட்டை பிரிந்து செல்ல மனம் கலங்குகிறாள் என்று நினைத்து அவளை சமாதானம் செய்தனர் உறவு பெண்களில் சிலர்.

முகூர்த்த நேரம் காலை 10 முதல் 12 வரை என்பதால் திருமண வேலைகள் அனைத்தும் மெதுவாகவே நடந்தது. சித்ராவின் தோழிகள் வந்த பிறகே அந்த இடம் மேலும் கலகலப்பானது. சித்ராவின் அன்னை மகளுக்கு தேவையான நகை புடவையை கொடுத்து விட்டு அவளை தனியாக அழைத்து,

"இந்த நல்ல நாளுக்காகதானே காத்திருந்தோம் சித்து. ஏன் இப்படி சந்தோஷமே இல்லாம இருக்கற? எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ பயப்படாதே."

"எனக்கு இதெல்லாம் தேவையா அம்மா? நான் இதற்கெல்லாம் தகுதி உள்ளவள் தானா? எனக்கு என்னை நினைத்தாலே அசிங்கமா இருக்கு அம்மா."

"என்ன பேச்சு சித்து இது. நான் உன்னை நல்லாத்தான் வளர்த்தேன். நீயும் என்றுமே புடம் போட்ட தங்கம் தான். நீ என்ன தப்பு செய்த இப்படி பேசறதுக்கு?"

"அம்மா..........” என்று விம்மினாள்.

"எல்லாம் நல்லதுக்குத்தான். சீக்கிரமா ரெடி ஆகணும் சரியா?"

"ம்ம்ம்....."

தோழிகளின் உதவியோடு திருமணத்திற்கு தயாரானால் சித்ரா. பெண்ணின் பெற்றோர்களுக்கு இரு கண்கள் போதவில்லை தங்கள் பெண்ணின் திருமண அலங்காரத்தை காண. தன்னை பெற்றவர்களுக்காக, அன்னையின் மன நிம்மதிக்காக உதட்டில் சிறு புன்னகை ஏந்தி மணமேடை சென்றாள். முறையான சாஸ்திரங்கள் முடிந்து உறவினர்களின் வாழ்த்துகளோடு, ஐயரின் மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தின் ஒளியோடு கெட்டிமேளம் முழங்க சித்ரா கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் ரஞ்சித். குனிந்த தலை நிமிராமல் ரஞ்சித் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கிய போது அவன் விரல் பட்ட ஸ்பரிசம் அவளை நிமிர்ந்து பார்க்க செய்தது. நிமிர்ந்தவளின் கண்ணில் நீரை கண்டு திடுக்கிட்டவன் அவள் கரம் பிடித்து மென்மையாக அழுத்தி உனக்காக என்றும் நான் இருப்பேன் என்பது போல் கண்களால் அவளுக்கு எடுத்துரைத்தான். 

மேலும் சில சடங்குகள், உறவினர்களின் வாழ்த்துக்கள், பரிசுகள், மறுவீடு அழைப்பு என்று நடந்த போதிலும் சிங்கத்தை கண்ட மான் போல மிரண்டாள். புது இடம் புது மக்கள் என்பதால் அப்படி இருக்கின்றாள் என்று நினைத்தான் ரஞ்சித். புது தம்பதியரின் வாழ்க்கை பெண்ணின் வீட்டில் துவங்க வேண்டும் என்ற முறை இருப்பதால் மணமக்களை மணப்பெண் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவள் வீட்டிற்கு சென்றால் சரி ஆகிவிடுவாள் என்று நினைத்தான் ரஞ்சித். அங்கும் எதையோ கண்டு மிரண்டவள் போல் இருப்பதை கண்டு தவித்தான். இரவின் தனிமையில்

"என்ன சித்ரா உனக்கு என்னை பிடிக்கவில்லையா? பெரியவர்களின் கட்டாயத்தால் தான் என்னை திருமணம் செய்தாயா?"

இப்படி ஒரு கேள்வியை அவனிடம் இருந்து எதிர்பார்க்காத சித்ரா அடிபட்ட மானாய் நிமிர்ந்தாள். அவள் பார்வையே அவளுக்கு அவனை பிடித்திருப்பதை உணர்த்தியது. பின்னர் ஏன் இந்த பயம் என்று மீண்டும் சிந்தித்தான். கணவன் மனைவி உறவு பிடிக்காமல் வந்த பயமாக இருக்குமோ என்று நினைத்து,

"சித்து ..........."

"ம்ம்................"

"உனக்கு இஷ்டம் இல்லாதது எதுவும் இங்க நடக்க போவது இல்லை. ஏன் இந்த தேவை இல்லாத பயம்?"

".............."

"திருமண களைப்பு உன் முகத்தில் தெரியுது. மனதை அமைதிபடுத்திவிட்டு பேசாமல் தூங்கு. நாளை பேசி கொள்ளலாம். குட் நைட்." என்று கூறி அவளுக்கு முதுகு காட்டி படுத்தான். செய்வது அறியாமல் சித்ராதான் தவித்தாள். ரஞ்சித்தை பிடித்திருந்தும் அவளால் அவனிடம் பேச முடியாமல் பழக முடியாமல் தவித்தாள். அவள் படுக்காததை அறிந்த ரஞ்சித்,

"சித்ரா, என்னை உன்னுடைய நல்ல நண்பனா நினைத்துக்கொள். கணவனா நினைக்கணும்னு அவசியம் இல்ல. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீதான் எனக்கு எப்போவும். உனக்காக நான் இருக்கேன். எதுக்கும் பயப்படவேண்டாம். நாளைக்கே நாம பெங்களூர் போகணும். அங்கேயும் நீ எனக்கு நல்ல தோழிதான்."

முதல் முறையாக சித்ரா அவனிடம் பேசினாள்.

"நாளைக்கே ஏன்?"

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நாம முதல்ல போவோம். மறுபடியும் லீவ் கிடைத்த பிறகு அம்மா அப்பா அத்தை மாமா எல்லாரையும் வர சொல்லலாம். சரிதானா?"

அவளுக்கும் இந்த இடத்தை விட்டு சென்றால் போதும் என்று நினைத்து,

"ம்ம்... சரி.."

"கொஞ்சம் சிரிக்க கூடாதா?"

".........................."

"சரி சரி .ஒன்னும் சொல்லல உன்னை. இப்போ படுத்து தூங்கு", என்றான்.

கல்யாணத்திற்காக எடுத்த லீவ் என்னமோ இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தது. இருப்பினும் தன் மனைவியின் மனதில் இருக்கும் குழப்பம் தீர அவனுக்கும் அவளுக்கும் தனிமை தேவையாக இருந்தது. இப்படியே பலவாறு சிந்தித்த ரஞ்சித் தன்னையும் அறியாமல் உறங்கினான்.

காலை பொழுது விடிந்ததும் தெரியாமல் அசதியில் உறங்கிய தன் மனைவியின் அமைதியான அழகை கண்டு தன்னையும் அறியாமல் அவள் அருகில் நெருங்கி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். இதழ் பதித்ததோடு அவள் காதருகில் குனிந்து,

"உனக்காக என்றும் நான் இருப்பேன்", என்றான்.

அவள் எழுந்ததும்

"குட் மார்னிங் சித்ரா"

"ம்ம்ம்......" என்று புன்னகைத்தாள்.

அவன் முடிவு செய்தது போல் பெரியவர்கள் அனைவரையும் சமாதானம் செய்துவிட்டு தன் புது மனைவியுடன் பெங்களூர் புறப்பட்டான்.

நாட்கள் வேகமாகவும் அழகாகவும் சென்றது. சித்ராவும் ரஞ்சித்தும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். முன் போல் அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சித்துடன் பேச துவங்கினாள். இருப்பினும் மனம் விட்டு தன் மனைவி தன்னிடம் பேசவில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஞ்சித் அதை பெரிதுபடுத்தவும் இல்லை. அவளுக்காகவே வாழ்ந்தான். திருமண வாழ்க்கை கூட மிக அழகானது என்பதை அவளுக்கு மெதுவாக புரிய வைத்தான். என்னதான் தன் கணவன் தன்னிடம் அன்பாக இருந்தாலும் சித்ராவால் அவனோடு சகஜமாக பழக முடியவில்லை. நாட்கள் வாரம் ஆயின. வாரங்கள் மாதம் ஆயின. சித்ராவிடம் எந்த வித மாற்றமும் இல்லை. ரஞ்சித்தின் விரல் கூட அவள் மீது பட அனுமதிக்கவில்லை. அன்பாக அவளை நெருங்கினால் உடனே கண்ணீர் சிந்தினாள். இதற்குமேலும் தன்னால் பொறுமையாக இருக்க முடியாது என்று நினைத்த ரஞ்சித் முதல் முறையாக சித்ராவிடம் தன் கோவத்தை வெளிகாட்டினான். என்னதான் பொறுமையாக இருந்தாலும் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்குவதை போல் ஒடுங்கினாள். இன்று கொஞ்சம் நன்றாக பேசுகின்றாள் என்று நினைத்து நெருங்கினாள் இரண்டு நாட்கள் அவன் எதிரில் வராமல் அறையினுள் ஒதுங்கி கொள்வாள். எத்தனை நாள் தான் பொறுமையாக இருக்க முடியும். இன்று நேராக என்னதான் வந்தது அவளுக்கு என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

"சித்ரா................."

"ம்ம்ம்..................."

"நான் உன்கூட கொஞ்சம் பேசணும்."

"தினம் பேசிட்டு தான இருக்கோம்?"

"நான் சொல்றது நம்ம வாழ்க்கை பத்தி. என்னைய என்னதான் நெனச்சிட்டு இருக்க?"

"............."

"எனக்கும் பொறுமை கொஞ்சம் கம்மிதான்."

"உங்களுக்கு இப்போ என்ன, நான் தான வேணும்? நீங்களும் சராசரி ஆண் தானே. இதற்குமேல் உங்களுக்கு பொறுமை இருக்காதுன்னு எனக்கும் தெரியும்."

"சீச்சீ ........ என்ன பேச்சு இது? உன் மனதை தான் காதலித்தேனே தவிர உன் உடலை அல்ல. இவ்வளவு நாள் என்னை இவ்வளவு மட்டமா தான் நீ நெனச்சி இருந்தியா?"

"நான்................."

"போதும் நீ என்கிட்டே பேசினது. மனைவி மனசில இருக்கற குழப்பம் தெரியாம தானா எல்லாம் சரி ஆகும்னு நம்பி உன் போக்குல உன்னைய விட்டதுதான் தப்பு. இப்படி பொறுமையா இருந்ததுனால தான நீ என் அன்ப கூட கொச்சை படுத்திட்ட? நீ என்கிட்ட பேசற தகுதிய இழந்துட்ட. உன்னைய நான் என் மனசில எப்படி ஒரு இடத்தில வச்சிருக்கேன்னு உனக்கு புரியல. உனக்கு புரிஞ்சிருந்தா இப்படி பேசுவியா நீ?" சித்ரா பேசிய வார்த்தையை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

"................"

"நான் தான் நல்ல நண்பர்களா இருக்கலாம்னு சொன்னேனே. அதற்கு கூட உனக்கு இஷ்டம் இல்ல. அப்படி என்னைய பிடிக்கலேனா கல்யாணத்திற்கு முன்னரே சொல்லிருக்கலாமே. ஏன் இப்படி தேவை இல்லாம என்னைய கஷ்டபடுத்திட்டு இங்க இருக்க?"

"நான் என்ன கஷ்டபடுத்தினேன் உங்கள?"

"இதுக்கு மேல இன்னும் கஷ்டபடுத்த வார்த்தை இருக்கா?"

"நான் ஏதோ தெரியாமா.............."

"என்ன தெரியாம? ஏன் நான் இது வரை உன்கிட்ட தப்பான எண்ணத்தோட வந்திருப்பேனா? பொண்டாட்டின்னு உரிமை எடுத்திருக்கேனா? நான் தான் இவ்வளவு நாள் முட்டாளா இருந்திருக்கேன்."

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..........."

"இனிமேல் மட்டும் என்ன சொல்லிட போற? உன்னைய பத்தி இன்னிக்குதான் நல்லா தெரிஞ்சிகிட்டேன். என் அன்புக்கு தகுதியானவ நீ இல்ல."

அதுவரை பொறுமையாக இருந்த சித்ரா,

"ஆமா, நான் எதற்குமே தகுதியானவ இல்ல. எனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா... அப்போவே எங்க அம்மாகிட்ட சொன்னேனே எனக்கு இந்த கன்றாவி எல்லாம் தேவையான்னு. கேட்டாங்களா? இப்படி என்னைய தனியா தவிக்க விட்டுடாங்களே?"

"என்ன சொல்ற சித்ரா?"

"பேசாதீங்க. என்ன சொன்னீங்க? என்னைய பத்தி உங்களுக்கு தெரியுமா? என்ன தெரியும் உங்களுக்கு? நான் யாருன்னு தெரியுமா? நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா? நான் இவ்வளவு நாள் எப்படி எங்க இருந்தேன்னு தெரியுமா? என்ன வேலை பாத்தேன்னு தெரியுமா? என் வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? நான் ஏன் இப்படி ஒதுங்கறேன்னு தெரியுமா? என்னைய காதலிச்சவன் யார்னு தெரியுமா? அவனால நான் பட்ட அவமானங்கள் தெரியுமா? நிச்சயமான கல்யாணம் நின்னது தெரியுமா? எப்படி உங்களை கல்யாணம் பண்ணினேன்னு தெரியுமா?"

எதுவும் பேசாமல் நீண்ட நேரம் சித்ரா அழுதாள்.

அவளை கண்கொட்டாமல் பார்த்த ரஞ்சித் அவளை அழவிட்டான். மனதில் இருக்கும் பாரம் இறங்க நேரம் கொடுத்தான். நீண்ட நேரம் அங்கு மௌனமே ஆட்சி செய்தது.

"சித்ரா, கொஞ்சம் தண்ணி குடி............"

வெறித்த பார்வை மட்டுமே அவளிடமிருந்து கிடைத்தது.

"இப்போவும் சொல்றேன் சித்ரா உனக்காக நான் எப்போவும் இருப்பேன். எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்."

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.