(Reading time: 9 - 17 minutes)

 உறவுகள் சுகமானவை... - தங்கமணி சுவாமினாதன்

கரத்தின் மத்தியில் அமைந்திருந்தது அந்த தார்ச்சாலை. வெளியூர் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் அந்த சாலையின் வழியாகத்தான் செல்வதும் வருவதும் வழக்கம். மளிகைக் கடைகளும், ஜவுளிக்கடைகளும்,ஃபேன்சி கடைகளுமாய் நிறைய அமைந்திருந்த அந்த சாலைக்கு சாலைத்தெரு என்றே பெயர். அதே சாலையில் ஒரே காம்பௌவுண்டிர்க்குள் அரசுத்துறைகளான வருவாய்த்துறை அலுவலகம், பதிவுத்துறையின் அலுவலகம்,காவல் நிலையம்,கோர்ட்,தேசிய வங்கி ஒன்று,தபால் நிலையம் என அனைத்துமே இயங்கி வந்ததால் தினம் தினம் திருவிழாக் கூட்டம்தான்.

இந்த காம்பௌண்டிர்க்கு நேரெதிரேதான் அமைந்திருந்தது ரவியின் டீக்கடை. ரவியைப்பற்றி சொல்லவேண்டுமானால்...ரவி பண்பானவன்,பாசமுள்ளவன்,பளிச்சென்று இருப்பவன், தேனியைப்போல் சுறுசுறுப்பானவன்.காலை ஏழு மணிக்குக் கடையைத் திறந்தால் இரவு ஏழு மணிக்குக் கடையைச் சாத்தும்வரை அலுப்பு சலிப்பின்றி உழைப்பான்.ரவி கடை இஞ்சி டீ சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி.

காலை வீட்டிலிருந்தே இஞ்சியை சுத்தப்படுத்தி சின்னச்சின்ன பீஸாய் நறுக்கிக்கொண்டு வந்து விடுவான்.கொஞ்சம் தாராளமாய் இஞ்சியைத் தட்டி கொதிக்கும் நீரில் போட்டு அதனோடு டீத்தூளையும் போட்டு கொதிக்கவிடும்போது அதிலிருந்து கிளம்பும் இஞ்சியும் டீயும் கலந்த கலவையின் வாசனை அங்கே இங்கே இருப்பவர்களை நிக் சேனலில் வரும் மோட்டு-பத்லுவில் வரும் மோட்டு சமூசாவின் வாசனை மூக்கில் நுழைந்ததுமே சமூசா கடைக்குப் பறந்து வருவது போல் வரச்செய்யும..கரும்புச் சக்கையில் ஈ மொய்ப்பது போல் ரவியின் டீக்கடையில் கூட்டம் கூடிவிடும்.முத்து என்ற ஒரு பனிரெண்டு வயதிருக்கும் சிறு பையன் மட்டுமே உதவிக்கு.ரவியின் மனைவி மஞ்சு அதிகம் கடைக்கு வருவதில்லை.இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலைகளைக் கவனிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். அன்று காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.அவ்வப்போது தூறலும் விழுந்தது.

Uravugal sugamanavai

இன்னிக்கி நல்ல மழ பேயும் என்று நினைத்தபடியே போண்டா,பக்கோடா,பஜ்ஜிக்கான மாவினைத் தனித்தனியாக தயாரிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தான்.கூடவே மழை தீவிரமானால் மேலே கூரையிலிருந்து மழை நீர் ஒழுகி டீயோ..டிபனோ சாப்பிட வருபவர்கள் உட்காரமுடியாமல் கடை முழுதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமே என்ற பெருங்கவலை மனதை அரிக்க ஆரம்பித்தது ரவிக்கு.அவன் கவலைக்கு ஏற்றார்போலவே சடசட வென்று மழை அடித்துப் பேய ஆரம்பித்தது.வீட்டிலிருந்து வடை மாவை அறைத்து எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்த முத்து

அண்ணே..என்னெண்ணே மழ இப்பிடி ஆரம்பிச்சிடுச்சி...இப்ப  என்னெண்ணே செய்யரது என்று கவலையோடு கேட்கவும்

கூறையை அண்ணாந்து பார்த்தான் ரவி.வெறும் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரை பொத்தல் பொத்தலாக இற்றுப்போய் காணப்பட்டது.ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டாவது போட வேண்டும் என்று பல முறை முயன்றும் அதற்காக ஆகக்கூடிய செலவை ரவியால் செய்ய முடியவில்லை என்பதால் அவ்வப்போது கீற்றை மாற்றுவதோடு சரி.இத்தனைக்கும் கடையின் அளவு ஆறடி அகலமும் ஒம்பதடி நீளமும்தான் இருக்கும்.அதற்கே அம்பதாயிரம் கிட்டத்தில் வரும் என்று ஆசாரி சொன்னபோது அரண்டு போனான் ரவி.டீகுடிக்க டிபன் சாப்பிட வந்தவர்கள் உள்ளே வராமல் வெளியே நின்றபடியே கையேந்தி பவனில் சாப்பிடுவதுபோல் சாபிட்டனர்.ரவிக்கு நன்றாக அறிமுகமான சிலர்..என்ன ரவி இன்னும் எத்தன நாளுக்குதான் கூரைய மாத்தாம இப்பிடியே ஓட்டப்போற என்று உரிமையாய் கேட்டபோது ரவிக்கு மிக சங்கடமாய் இருந்தது.பதில் சொல்லாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் ரவி.நல்லவேளை மழை சட்டென்று விட்டு பளீரென்று வெய்யில் அடிக்க ஆரம்பித்தது.ஆனாலும் ரவிக்கு நிம்மதி ஏற்படவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் மழைக்காலம் ஆரம்பித்துவிடும்.அதற்குள் கூரையை மாற்றாவிட்டால் பிழைப்பு நாறிவிடும் என்று தோன்றியது.

ம்மா என்பது தமிழ் வார்த்தை....என்ற பாடலோடு கைபேசி கூப்பிட்டது.சட்டைப்  பையிலிருந்து செல்லை எடுத்துப்பார்த்தான் ரவி.தங்கச்சி சாந்தி கும்பகோணத்திலிருந்து. ஏற்கனவே கூரயை மாற்றுவதில் தனது இயலாமையை எண்ணி வருத்ததிலும் குழப்பத்திலும் இருந்த ரவிக்கு தங்கையின் அழைப்பு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியது.பேசுவதா வேண்டாமா என ஒரு வினாடிதான் யோசித்தான்.அப்படியெல்லாம் பேசாமல் இருப்பது தவறு என்று அவனின் இயல்பான நல்ல மனது சொல்ல

..என்னம்மா..சாந்தி..எப்பிடியிருக்க.. மாப்ள..எப்டி இருக்காரு..பசங்க எப்டி இருக்காங்க....

அண்ணே..எல்லாரும் நல்லா இருக்கோண்ணே..நீங்க..அண்ணி..பெரிம்மா..விஜி..குமாரு.. எல்லாரும் சௌக்கியமாண்ணே..

நல்லாருக்கோம்மா..என்னம்மா ஏதாவது முக்கியமான விசயமா?கேட்டான் ரவி..

ஆமாண்ணே..இன்னிக்கி கால எட்டு மணி பஸ்க்கு கெளம்பி அங்க வரோம்ணே.....

தூக்கிவாரிப் போட்டது ரவிக்கு..சட்டென பதில் சொல்லாமல்..செல்லைக் காதில் வைத்தபடியே முத்துவைனோக்கிப் பார்வையைத் திருப்பியபோது அவன் பாவம் வருபவர்களைக் கவனிப்பதும் கல்லாவையும் பார்ப்பதையும் அடுப்படியையும் பார்த்துக்கொள்வதையும் பார்த்தபோது பாவமாக இருந்தது.

அண்ணே....வேல நேரத்துல தொந்தரவு பண்ணுரேனா..வெச்சுடவா?சாயந்தரம் வாரோம்.. என்று கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டு போனை கட் செய்தாள் சாந்தி.

சாந்தி ரவியின் கூடப்பிறந்த தங்கை இல்லை..சொந்த சித்தப்பாவின் மகள்.ரவியின் அப்பாவும் சாந்தியின் அப்பாவும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள்.சின்ன வயதில் பள்ளி லீவு விட்டால் போதும் பெரியப்பா வீட்டுக்கு வந்துவிடுவாள் சாந்தி.அண்ணே அண்ணே என்று ரவியையே சுற்றிச் சுற்றி வருவாள்.ரவியும் என்ன ஒரு நாலு வயது சாந்தியைவிட மூத்தவந்தான் என்பதால் அவனுக்கும் சாந்தியிடம் ஒரு அண்ணனுக்குரிய பாசம் இருக்கவே செய்தது.ரவியின் அப்பாவுக்குப் பிறகு சாந்தியின் அப்பாவும் காலமாகிவிடவே சாந்தியின் வீட்டு விசேஷங்களுக்கு பிறந்த வீட்டினர் செய்ய வேண்டியவைகளை ரவியே ஓரளவாவது இட்டு நிரப்புவான்.ஆனாலும் அவன் தாய்க்கு முழுமனதான ஒப்புதல் இல்லை. நல்ல வேளை ரவிக்கு வாய்த்த மனைவி மஞ்சு அப்படி ஒன்றும் மோசமில்லை.சாந்திக்கு ஒரு அண்ணனாய் தன் கணவன் செய்யும் எதனையும் அவள் தடுப்பதில்லை.சாந்தியிடம் பாசமாகவே இருப்பாள் மஞ்சு.இருவருமே கிட்டத்தட்ட சமவயதுதான் என்பதால் இருவருமே தோழிகளைப் போல்தான் பழகுவார்கள்.சாந்தி வந்து விட்டுப்போகும் போதெல்லாம் மன நிறைவாய் அவள் தன் கணவன் வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு எல்லாம் செய்து அனுப்புவான் ரவி.

இது அவன் தாய்க்குப் பிடிக்காது.தனியாக அவனிடம் வந்து புலம்பிவிட்டுப் போவாள்.எத்தனை முறை சாந்திக்கு பண முடை ஏற்பட்டுத் தவித்த நேரங்களிலெல்லாம் ரவி கை கொடுத்திருப்பான்.டீக்கடை வருமானம் கடைச் செலவுக்கும் வீட்டுச் செலவுக்குமே சரியாய் இருக்கும்.சேமித்தெல்லாம் வைக்கமுடியாத நிலையிலும் சாந்தியை விட்டுக் கொடுக்கமாட்டான்.அப்படி ஒரு பாசமுள்ள ரவிக்கு இப்போது சாந்தி கணவனோடு வருவதற்குக் காரணம் பணவிஷயமாகத்தான் இருக்குமோ என்று தோன்ற மனம் ஆயாசப்பட்டது.ரவியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோதிலும் கடைக்கு வருவோரை பரபரப்பாய் இயங்கி கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

கும்பகோணத்திலிருந்து வரும் பேருந்து சாலைத்தெரு வழியாகத்தான் சென்று பேருந்து நிலையத்தை அடையும்.தாலுக்கா ஆபீஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்பதால் மாலை நாலு மணிக்கெல்லாம் சாந்தி கணவன் குழந்தைகள் சகிதம் தாலுக்கா நிறுத்தத்தில் இறங்கி நேரே கடைக்கே வந்து விட்டாள்.காலையில் பெய்த மழையால் கடை முழுதும் சொதசொதவென்று ஈரமாகிக்கிடப்பது பார்த்துப் புலம்பித்தீர்த்தாள்.ரவி அவர்களுக்குக் கடையிலேயே டிபனும் காபியும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.

ரவு எட்டு மணி..வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க ரவியின் அம்மா சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தார்.இந்த முறை சாந்தி எவ்வளவு பணம் கேட்டு வெடி குண்டை வீசப்போகிறாளோ என்று அவர் மனம் யோசித்தது.

அண்ணே...கூப்பிட்டாள் சாந்தி...

ஒருவிதமாய் ராகம் போட்டு அண்ணே..என்று அவள் அழைத்தால் அந்த அழைப்பு பணத்துக்காகத்தான் இருக்கும் என்று நினைப்பார் அவர்.எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அண்ணே..என்று கூப்பிட்ட சாந்தியை ..

என்ன சாந்தி.....கேட்டான் ரவி...

அண்ணே..கடய பாக்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே..கீத்துக்கூரையையும், குண்டும் குழியுமா தரையையும்...என்னெண்ணே பண்ணப்போறிங்க...

என்னமா பண்றது...கைவச்சா அம்பது அறபது ஆகுன்னு ஆசாரி சொல்றாரு..அவ்வளவுக்கு எங்க போறது?...மிக வருத்தத்தோடு சொன்னான் ரவி.

ரையில் உட்கார்ந்திருந சாந்தி சட்டென எழுந்து சேரில் அமர்ந்திருந்த கணவனிடம் சென்றாள்.இருவரும் ஏதோ குசு குசுவென பேசினர்.சாந்தியின் கணவன் எழுந்து மேஜை மீது வைத்திருந்த ஏர்பேக்கிலிருந்து மஞ்சப்பை ஒன்றை எடுக்க இருவருமாய் ரவியிடம் சென்று பையை நீட்டினார்கள்.ஒன்றும் புரியாமல் பையையும் அவர்களையும் மாறிமாறிப்

பார்த்தான் ரவி.

என்னது இது மஞ்சபை...

அண்ணே கைல வாங்குங்கண்ணே...

முதல்ல என்னென்னு சொல்லு சாந்தி..

அண்ணே என்னன்னுதான் பாருங்களேன்..என்று சொல்லியபடி பையை ரவியின் கையில்

திணித்தாள் சாந்தி..

பையைத் திறந்து பார்த்த ரவி பைக்குள் கனமான பணக்கட்டு ஒன்று இருப்பதைக்கண்டு திகைத்துப்போய் ...

சாந்தி என்னம்மா இது..பணம்........

ஆமாண்ணே ......நீங்க என்ன தங்கச்சி தங்கச்சின்னு எப்பிடில்லாம் பாசம் காட்றீங்க என்னெல்லாம் எனக்கு செஞசுரிப்பீங்க இப்பவும் செய்யிறீங்க..எத்தன தடவ நான் முடயின்னு வந்து நிக்கும்போதெல்லாம் பணம் தந்திருக்கீங்க...ஒங்களுக்கு ஒரு தேவனா பாத்துக்கிட்டு எப்பிடிண்ணே சும்மா இருக்கறது? அதாண்ணே நாடார் வயலுக்குப் பக்கமா ஒரு எரனூரு குழி வெளச்ச நெலமமிருந்திச்சு அத ரொம்ப நாளா நாடாரு கேட்டிட்டு இருந்தாரு அத கொடுத்துட்டு பணத்த வாங்கிட்டேண்ணே..எங்களாளயும் பயிர்ச்செலவு பண்ணமுடில..ஒனக்காச்சும் ஒதவட்டுமேன்னு குடுத்துட்டோம்..இந்த பணத்த வச்சு கடைக்கு ஆஸ்பெஸ்டாஸ் போட்டு தரய டைல்ஸ் போட்டு பெய்ன்ட் அடிச்சு கடய சூப்பரா பண்ணுங்கண்ணே...இதுல அறுபதாயிரம் இருக்கண்ணே....

அடேடே..என்னமாயிது இதெல்லாம் வேண்டாம்மா..படபடப்பாய் மறுத்தான் ரவி..

அண்ணே....வேண்டான்னு சொல்லதீங்கண்ணே..குடும்பத்துல ஒண்ணா பொறந்த அக்கா தங்கச்சிக்கு அவங்க பொம்பளங்ககரதுனால அணாப்பொறந்த அண்ணந்தம்பிக தான் எல்லாம் செய்யனும்னு ஒன்னும் கிடையாதுண்ணே...அக்கா தங்கச்சிங்களும் அண்ணந்தம்பிங்களுக்கு செய்யலாம்ணே....

சாந்தியின் கணவரும் சாந்தியின் பேச்சை ஆமோதிக்க ரவியால் ஒன்றும் சொல்லவோ மறுக்கவோ முடியவில்லை.

சாந்தியின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத ரவியின் தாயின் முகத்தில் சாந்தியை தவறாக நினைத்தோமே என்ற வெட்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

உறவுகள் என்றுமே சுகமானவைதான் சரியான புரிதலும்..பரஸ்பர அன்பும் இருந்தால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.