(Reading time: 11 - 22 minutes)

மெய்யென்று மேனியை யார் சொன்னது....!!!!!!! - ஜெய்

ம்மா, அப்பா ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் செய்ங்க”

“இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்டா, கண்ணா”, கண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு அவனின் பெற்றோர்கள் அவனுக்குத் தாங்கள் வாங்கிய பரிசை கொடுத்து வாழ்த்தினார்கள்.

“ஹே எனக்குப் பிடிச்ச ப்ராண்ட் வாட்ச், சூப்பர்.  தேங்க்ஸ்பா. தேங்க்ஸ்மா”

Meyendru meniyai yar sonathu

“என்னடா எங்க கிட்டப்போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு.  சரி அதை விடு.  இன்னைக்கு என்னடா உன்னோட பிளான், ஆபீஸ்க்கு லீவ் போடப் போறியா?”, கண்ணனின் தந்தை கேட்க,

“ஆமாம்ப்பா, இன்னைக்கு லீவ்தான்.  உங்க ரெண்டு பேர் கூட மொதல்ல கோவிலுக்குப் போயிட்டு வந்தப்பறம் இங்க பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல் போய் எப்பவும் போல ரத்த தானம் பண்ணப் போறேன்.  அப்பறம் சாயங்காலம் ஃப்ரிண்ட்ஸ்கூட சினிமா போலாம்ன்னு இருக்கேன்ப்பா”

“ஓகேடா கண்ணா. மொதல்ல நீ இந்த பாயசத்தை சாப்பிடு.  அப்பறம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்”, கண்ணனின் அம்மா அவனிடம் பாயசத்தை தந்தபடியே சொல்ல, தன் பதினெட்டாம் பிறந்த நாளில் இருந்து ஒரு ஒரு வருடமும் தவறாமல் ரத்ததானம் செய்யும் தன் மகனை பெருமையுடன் பார்த்தார் அவனின் தந்தை.

“சரிம்மா, நாம இப்போக் கிளம்பலாமா? உங்களுக்கு ஏதானும் வேலை இருக்கா?”

“இல்லடா கண்ணா, நாம கிளம்பலாம்.  நீ எப்படியும் ஆஸ்பத்திரி போயிட்டு வர்றதுக்குள்ள நான் சமைச்சுடுவேன்.  ஒண்ணும் அவசரம் இல்லை”, மூவரும் பேசியபடியே கோவிலுக்கு கிளம்பி சென்று சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்.   

“வாங்க கண்ணன், many more happy returns of the day”, கண்ணனுக்கு வாழ்த்துக் கூறியபடியே வரவேற்றார் மருத்துவர்.

“Thanks டாக்டர், அம்மா சீக்கிரம் வர சொல்லி இருக்காங்க.  இங்க எல்லாம் ரெடியா இருக்கா டாக்டர்.  நாம லேப்க்கு போகலாமா?”  

“ஹ்ம்ம் எல்லாம் ரெடிதான் கண்ணன்.  சிஸ்டர், கண்ணனோட ப்ளட் சாம்பிள் டெஸ்டிங்க்கு எடுத்துட்டு போங்க.  முடிச்சு ரிப்போர்ட் வரட்டும்”, கண்ணனின் ரத்தத்தை மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, முடிவுகள் வரும்வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.   

அவனின் டெஸ்ட் ரிப்போர்ட்டுடன் நர்ஸ் வர, ஒரு பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையில் கண்ணன் ரத்தம் கொடுக்க எழுந்தான்.

ஆனால் ரிப்போர்ட் கொண்டு வந்த நர்ஸின் முகம் கலங்கி இருப்பதைக் கவனித்த டாக்டர், “என்னாச்சு மாலினி.  ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.  ஏதானும் பிரச்சனையா”, என்று கேட்டார்.

அவள் கண்ணனை வைத்துக் கொண்டு எப்படி பேசுவது என்று தயங்க, அதைப் புரிந்து கொண்ட டாக்டர், “கண்ணா, ஒரு 5 நிமிஷம் வெயிட் பண்ணுப்பா, நாலாம் நம்பர் பேஷன்ட்டுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போடணும்.  போட்டுட்டு வந்துடறேன்.  மாலினி கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுமா”, என்று கூறியபடியே நர்ஸ் தொடர வெளியேறினார்.

கண்ணன் ஆஸ்பத்ரியில் ஏதோ பிரச்சனை போல, தன் முன்னால் பேச முடியாமல் வெளியே சென்று பேசுகிறார்கள் என்று நினைத்து அங்கிருந்த சஞ்சிகையை புரட்ட ஆரம்பித்தான்.  

மாலினியை அழைத்துக் கொண்டு தனி ரூமிற்கு வந்த டாக்டர், “இப்போ சொல்லு என்னாச்சு, கண்ணன் ரிப்போர்ட்ல ஏதானும் ப்ரோப்லமா”

“ஆமாம் டாக்டர், ரொம்ப பெரிய பிரச்சனைதான். HIV பாஸிடிவ்ன்னு வந்திருக்கு”

“என்ன சொல்ற மாலினி, இது எப்படி சாத்தியம்.  கண்ணன் பத்தி உனக்கே தெரியும் இல்லை.  அவனை மாதிரி ஒரு நல்லப் பையனை பார்க்கவே முடியாது.  எதுக்கும் நீ இன்னொரு வாட்டி சாம்பிள் ப்ளட் எடுத்து டெஸ்ட் பண்ணிடும்மா”, என்று டாக்டர் கூற, நர்ஸும் இன்னொரு முறை கண்ணனிடம் வந்து மாதிரிப் பரிசோதனைக்கு ரத்தம் எடுத்து சென்றார்.

இந்த முறையும் ரிசல்ட் பாஸிடிவ் என்று வர, இதை எப்படி அவனிடம் சொல்வது என்று பேசிக்கொண்டே டாக்டரும், நர்ஸும் கண்ணன் அமர்ந்திருந்த அறைக்கு வந்தனர்.

“என்னாச்சு டாக்டர், ஏன் இவ்ளோ டைம் எடுக்குது.  லேப்ல ஏதானும் பிரச்சனையா”

“இல்லை கண்ணன். பிரச்சனைலாம் ஒண்ணும் இல்லை........”

“சரி டாக்டர், ரிசல்ட் வந்துடுச்சுன்னா நான் போய் ரத்தம் கொடுத்துட்டு கிளம்பவா, டைம் ஆயிடுச்சு”

“அது வந்து.......”, என்று டாக்டர் இழுக்க, கண்ணனுக்கு தன் ரிப்போர்டில்தான் ஏதோ விஷயம் என்று லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.

“என்ன டாக்டர், என்ன விஷயம். என் ப்ளட் ரிசல்ட் ஏதானும் தப்பா வந்திருக்கா. எதா இருந்தாலும் சொல்லுங்க”

“இதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியலைப்பா.  நான் உன்னை கிட்டத்தட்ட ஆறு வருஷமா, உன்னோட பதினெட்டாவது பிறந்த நாள்லேர்ந்து பார்த்துட்டு வரேன்.  இது வரை உன்கிட்ட ஒரு கெட்ட விஷயம் கூட பார்த்ததில்லை.  அப்பறம் ஏன் இப்படி........”, என்று தான் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து புலம்ப ஆரம்பித்தார்.

“டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் புரியறா மாதிரி பேசுங்களேன்”

இதற்கு மேலும் மறைக்க முடியாது, மறைக்கக்கூடிய விஷயமும் அல்ல என்ற முடிவுக்கு வந்த டாக்டர் கண்ணனிடம், “கண்ணா, உன் மனசை திடப் படுத்திக்கோ, உனக்கு HIV பாஸிடிவ்ன்னு வந்திருக்கு”, என்று குரலில் வருத்தத்துடன் கூறினார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க...., இருக்கவே முடியாது.  உங்களுக்கே என்னைப் பத்தி தெரியும் இல்லை.  நான் அந்த மாதிரி தப்புப் பண்ற ஆள் கிடையாது.  உங்க பரிசோதனைலதான் ஏதோ தப்பு நடந்திருக்கு.  ஒழுங்கா செக் பண்ண சொல்லுங்க டாக்டர்”, என்று கோவத்துடன் கத்தினான் கண்ணன்.

“கண்ணா, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா, ரெண்டாவது முறை எதுக்கு டெஸ்டிங்க்கு ரத்தம் எடுத்தாங்கன்னு நினைக்கற.  முதல்ல பண்ணினது நூறு சதவீதம் தப்பாத்தான் இருக்கும்ன்னுதான்.  ஆனால் இந்த வாட்டியும் அதேதான் வந்திருக்கு”

“எப்படி டாக்டர் எப்படி, நான் தப்பே பண்ணாதப்போ எப்படி இப்படி ஒரு ரிசல்ட் வரும்.  ஐயோ கடவுளே.......”, என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தான் கண்ணன்.

“கண்ணா, உன் வருத்தம் எனக்குப் புரியுது.  HIV நோய்க் கிருமி உடலுறவு மூலமா மட்டும்தான் பரவணும்ன்னு இல்லைப்பா.  மத்த வழிகள்லையும் பரவலாம். உதாரணமா, HIV தாக்கினவரோட பொருள் எதுலயானும் அவரோட ரத்தம் ஒரு துளி இருந்து அதே பொருளை நீயும் உபயோகித்து இருந்தேன்னா வரும்”

“இல்லை டாக்டர் எனக்கு மத்தவங்க use பண்ணின பொருளைத் தொடவே பிடிக்காது.  ஏன் டாக்டர் HIV கிருமி நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போய்டும்ன்னு சொல்வாங்களே. ரெண்டு மாசம் முன்னாடி எனக்கு ஜுரம் வந்தப்போ உடனே சரியா போச்சே, அது எப்படி டாக்டர்.  கண்டிப்பா இது வேற ஏதோ வைரஸ்தான்,  நீங்க இன்னொரு வாட்டி நல்லா செக் பண்ண சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்”, தனக்கு வந்திருப்பது உயிர் கொல்லி நோய் இல்லை என்பதை நிரூபித்து விட மாட்டோமா, என்று பரபரப்புடன் கூறினான் கண்ணன்.

“இல்லை கண்ணன், இந்த நோய்க் கிருமி உடலில் இருக்குன்னு தெரிய 3 வாரத்துல இருந்த 6 மாதம் வரை ஆகும் கண்ணன்.  உனக்கு மத்தபடி உடம்புல ஒரு பிரச்சனையும் இல்லாததால அப்போ உனக்கு உடனே சரியா போச்சு”

அவன் தப்பினோம் என்று யோசித்த ஒரு வழியும் அடைக்கப் பட, “அச்சோ எப்படி அம்மா, அப்பா முகத்துல முழிப்பேன் டாக்டர்.  ஏதானும் விஷ ஊசி போட்டு என்னை சாகடுச்சுடுங்க. இப்படி ஒரு நோயோட அவங்களை பார்க்க முடியாது”, என்று கதற ஆரம்பித்தான்.

“என்ன கண்ணன் இது.  நிஜமாகவே இது ஜீரணிக்க முடியாத விஷயம்தான்.  அதுக்காக உயிரை விடறது முட்டாள்த்தனம். நான் அப்பாக்கு போன் பண்ணி வர சொல்றேன்.  அவர் கிட்ட பக்குவமா சொல்லலாம்”

“ஐயோ டாக்டர், வேணாம் டாக்டர்,  அவங்களுக்கு தெரியவே வேண்டாம்.  அவங்களாலே இதைத் தாங்கிக்கவே முடியாது”

“இல்லை கண்ணன், முதலாவது இது மறைக்கக் கூடிய விஷயம் இல்லை.  ரெண்டாவது எப்படியும் இப்போ இல்லைனாலும் இன்னும் கொஞ்ச  நாள்ல உனக்கு கல்யாணம் அப்படின்னு ஆரம்பிப்பாங்க.  அப்போ சொல்லித்தானே ஆகணும். அதுக்கு இப்போவே சொல்லிடலாம்”, என்று கூற, கண்ணனும் அவர் சொல்வது சரிதான் என்று, “நீங்களே அப்போ அவங்ககிட்ட சொல்லிடுங்க டாக்டர். என்னால அவங்க முகத்தை பார்க்க முடியாது”, என்று கூறி அவன் அமர்ந்திருந்த டேபிளில் தலை கவிழ்த்து விசும்ப ஆரம்பித்தான்.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.