(Reading time: 10 - 20 minutes)

 இன்னார்க்கு இன்னாரென்று... - தங்கமணி சுவாமினாதன்

காலை ஏழு மணி....

அம்மா நாம் போய் குளிச்சிட்டு வரேன்..இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா சைட்டுக்குப் போவணும்...

சொல்லிக்கொண்டே துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு கொல்லைப்புரம் சென்றான் ராஜு என்கிற ராஜவேல்.

Innaruku innarendru

ஒரு சின்ன சிமென்ட் தளம்..அதன் நடுவில் நின்று கொண்டிருந்தது பச்சைக்கலரில்...அடிபைப் என்று சொல்லப்படும் பாக்குவெட்டி பைப்.அதன் கீழே ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரும்..

பக்கத்தில்இருந்த துணி தோய்க்கும் கல் மீது ஒரு மக்கும் இருந்தது.இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டுமக்கை எடுத்து பக்கெட்டில் இருந்த தண்ணீரை மொள்வதற்க்காகக் குனிந்தபோதுதான் பக்கெட்டில் இருந்த நீரில் அருகே இருந்த தென்னை மரத்திலிருந்து விழுந்த ரெண்டு மூணு குறும்பைகளும், பன்னாடைத் தூள்களும் கிடந்ததைப் பார்த்தான் ராஜு.அந்தத் தண்ணியை மேலே ஊற்றிக்கொள்ள மனம் இல்லாமல்  பக்கெட்டை கொஞ்சம் நகர்த்தி வைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்து வேறு பக்கெட் ஒன்றை எடுத்து வந்து பைப் அடியில் வைத்து பைப்பின் கைப்பிடியை அழுத்தி அடித்தபோது தண்ணீருக்கு பதில் பைப்பில் இருந்து இஷ்க்..இஷ்க்..என்று காற்றுதான் வந்தது.

ஏற்கனவே லேட்டாகுது அதுல இது வேற..என்று முனகியபடியே தூசி கிடந்த தண்ணீரை மக்கில் எடுத்து இடது கையால் பைப்பின் வாயைப்பொத்தி பைப்புக்குள் ஊற்றினான்.ஐந்தாறு மக் நீரை ஊற்றி இடது கையை எடுக்காமல் வலது கையால் கைப்பிடியை வேகமாக அழுத்தி அழுத்தி அடிக்க கொப்பளித்துக்கொண்டு தண்ணீர் வெளியே வந்தது.வேல முடிச்சி வீட்டுக்கு வரக்கொள்ள வாஷர் மறக்காம வாங்கிகிட்டு வரணும் மனதுக்குள் சொல்லிக்கோண்டே குளித்து முடித்து விட்டு வீட்டுக்குள் வந்தான் ராஜு.

அம்மா..பைப்புல வாஷர் போயிட்டு போல ..திரும்ப ஏர்..வாங்கும்..தேவைக்கு தண்ணி புடிச்சி

வச்சுக்க...சாங்காலம்..வரக்கொள்ள வாங்கியாரேன்..

பிள்ளை சொல்லவும் குடத்திலும்,அடுக்கிலும் தண்ணீரை ரொப்பிக்கொண்டாள் அஞ்சலை.

விபூதியைக் கீற்றாய் நெற்றியில் இட்டுக்கொண்டு சுவற்றில் மாட்டியிருந்த பிள்ளையார்,முருகன்

படங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்ட ராஜு..

அம்மா..சீக்கிரம் சாப்பாடு எடுத்துவையி நா கெளெம்பணும்...நாழியாவுது.. என்று சொல்லியபடியே தலையில் எண்ணை தடவி சீப்பால் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக்கொள்ள ஆரம்பித்த போது அவன் முகத்தைப்பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை.

ராஜு...சராசரி உயரம், நல்ல கருப்பு நிறம், வரண்ட சருமம் மேலுதட்டை விட்டு வெளியே வந்த நாலு ப்ற்கள்..லவுட் ஸ்பீக்கர் பொல் கொஞ்சம் குவிந்த காதுகள் போதும் போதாதற்கு வலது காதருகில் கிருதா வைக்கும் இடத்தில் சுண்டைக்காய் அளவு மரு வேறு...தலை முடியை இடது கையால் அழுத்தி அழுத்தி வலது கையால் வாரியும் முடி படிய மறுத்தது..நெட்டுக்குத்தாய் நின்றது.

எரிச்சலாய் வந்தது ராஜுவுக்கு....என்ன செஞ்சாலும் நீ அழகாகப்போறதில்ல...விடு..என அவன் மனசு சொல்ல..சீப்பை கண்ணாடியின் தலையிலேயே செருகி வீட்டு தாய் கொண்டு வைத்த தட்டின் முன் அமர்ந்து இட்டிலியை ஒரு விள்ளள் விண்டபோது..

ராசு...தாய் அஞ்சலை கூப்பிட நிமிர்ந்து தாயைப் பார்த்தான் ராஜு...

என்னம்மா..

நேத்து கடைத்தெருவுல தரகர் அண்ணாச்சிய பாத்தேன்...திருவள்ளூர்ல ஒரு பொண்ணு இருக்காம் நல்ல குடும்பமாம்..ஒம் போட்டொவ காமிச்சாராம்..அவங்களுக்கு புடிச்சிருக்காம்...ஜாதகமும் பொருந்திருக்காம்..எப்ப பொண்ணு பாக்க வரீங்க..அவங்களும் புள்ள வீடு பாக்கவரதா சொன்னாங்க அப்பிடீன்னாரு....நீ என்னா சொல்ற ராசு...

அந்தத் தாய் முகத்தில் ஏக்கமும் ஆசையும் நிராசையும் கலந்த கலவை...

Related Read: மெய்யென்று மேனியை யார் சொன்னது....!!!!!!! - சிறுகதை

அக்கம் பக்க வீடுகளிளும்,உறவுக்கார குடும்பங்களிலும் ராஜுவின் வயதையொத்த பிள்ளைகளுக்குக் கெல்லாம் திருமணமாகி ஒண்ணு ரெண்டுன்னு குழைந்தைகளுமாய் இருக்க தன் ஒரே பிள்ளைக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதும் மருமகளோடும்,பேரன்.பேத்தியோடும் இருக்கவேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் இருப்பதும் அந்த தாயின் மனதை வேதனைப்பட வைத்திருந்தது.

அம்மா..ஒனெக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு..திரும்பத் திரும்ப..பொண்ணு பாக்கப் போக ஆசப்படுற... இதோட  எத்தினி தடவ பொண்னு பாக்க போயாச்சு..எந்த பொண்ணாச்சும் என்னைய கட்டிக்கிறேன்னு சொல்லிச்சா...எம்மூஞ்ச பாத்ததுமே உள்ளாற ஓடிப்போயிடுதுங்க.. இனிமேலும் என்னைய பொண்ணு பாக்க கிண்ணு பாக்கன்னு கூப்பிடாதம்மா..குரலில் வருத்தம் இழையோட சொல்லிவிட்டு சட்டென கைகழுவ எழுந்து சென்ற தன் மகனை வேதனையோடு பார்த்தபடி நின்றாள் அஞ்சலை.

சாரத்தின் மீது நின்றபடி ஒவ்வொரு செங்கல்லாய் வைத்து சிமென்ட் கலவையை இட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுவற்றுப் பகுதியை உயர்த்திகொண்டிருந்தான் ராஜு.படிக்கும்போது சக மாணவர்கள் தன்னைப் பார்த்து தன் உடலமைப்பைப் பார்த்து சிரித்து கிண்டலடிப்பதைத் தாங்க முடியாமல் ஐந்தாம் வகுப்போடு படிப்பை விட்டுவிட்டு மாமாவோடு கட்டட வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்துப் பார்த்து வேலை பழகி சித்தாளாய் இருந்து பின் கொத்தனாராய் ஆகியிருந்த ராஜுவுக்கு தன் உருவத்தால் ஒரு தாழ்வு மனப்பான்மை.யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவன்.உடன் வேலை செய்யும் சாமிக்கண்ணு கொத்தனாரிடம் மட்டும் கொஞ்சம் பேசுவான்.

ராசூ..மாப்ள..செவுத்த மட்டம் பாத்தியா..பாரு ஒரு கல்லு கொஞ்சம் முன்னாடி நீட்டிட்டிருக்கு நூலு குண்ட வச்சு பாரு....மேஸ்த்திரி..இஞ்சினீரு யாரு கண்ணுலயாச்சும் பட்டா அவ்வளவுதான்..மட்டப் பலகையால தட்டிவிடு...

சாமிக்கண்ணு கொத்தனார் கீழேயிருந்து மேலே இருந்த ராஜுவைப் பார்த்து கத்த..

மாப்ள என்ன நெனப்புல இருக்காரோ...எங்கியாவது பொண்ணு பாக்க போயிருந்திருப்பாரு இந்த

பொண்ணாச்சும் நம்மள கட்டிக்காதான்னு ஏங்கிப் போயி கவலேல யோசனயாயிருந்திருப்பாரு..

குத்தீட்டியால் நெஞ்செய்க்குத்துவது போல் நையாண்டி வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்டான் பாண்டி.

ஏலேய்..ஏண்டா..அவங்கிட்ட போய்..பாவம் அவ ஒரு வாயில்லா பூச்சி...போ..போ..போய்..ஒவ் வேலயப் பாரு....சொல்லிக்கொண்டே சாரத்தில் ஏறினார் சாமிக்கண்ணு....

பாண்டி...பார்க்க கொஞ்சம் லட்சணம்..நல்ல நிறம்..கட்டுமஸ்தான தேகம்..பிறரை வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல...வாய்ச்சவடால் வேறு..அதனால் திமிர் அதிகம். பிறரைச் சீண்டுவதில் ரொம்ப சந்தோஷம்...அதுவும் ராஜு என்றால் கேட்கவே வேண்டாம்.அவன் உருவத்தை வைத்தே அவனை கிண்டலடிப்பான்.

ராசூ..சாமிக்கண்ணு கூப்பிடவும் அதே சாரத்தில் கொஞ்ச தூர இடைவெளியில் அமர்ந்திருந்த அவரை தலையைத் திருப்பிப் பார்த்தான் ராஜு..

என்னண்ணே...

த பாரு..அந்த பொறம்போக்கு பய..பேசரத எல்லம் மனசுல வெச்சுக்காத..தான் அளகா இருக்கோம்கர திமிரு அவனுக்கு....மட்டமான பய....கலவ கொண்டு குடுக்கற சின்ன வயசு சித்தாளு பொண்ணுங்க கிட்டேந்து பாண்ட வாங்குர சாக்குல கைய புடிக்கறதும் செங்கல்லு தூக்கியாற பொண்ணுங்க கிட்டேந்து பாண்ட வாங்கற சாக்குல பொறங்கையால..ல....ஈஷறதும்...என்னிக்கி பொண்ணுங்ககிட்ட செமத்தியா வாங்கப்போறானோ...நீ பாத்துக்கிடே இரு..எங்கியாவது தப்ப முடியாம மாட்டப் போரான் என்று சொல்லிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தார் சாமிக்கண்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.