(Reading time: 41 - 82 minutes)

தென்றல், தென்றல், தென்றல் வந்து… - அன்னா ஸ்வீட்டி

ச்சை  பட்டு பாவாடை, அடர் ரோஜா வர்ண ப்ளவ்ஸ் சந்தன நிற தாவணி, ஓவல் வடிவ களையான முகம், மையிட்ட மாவடு கண்கள், அவள் தாவணி வர்ண தேகம், காதிலாடும் ஜிமிக்கி, கழுத்தில் ஒரு மெல்லிய செயின் பார்வைக்கு தேவகிருபா படு பாந்தமாய் அழகாய்...ஏன் அடக்கமாய் என்றுகூட அவள் ஊரில் சொல்வதுதான்.

ஆனால் இப்பொழுது அவள் நின்ற இடம் அவள் வீட்டு மொட்டை மாடியின் குட்டை கைப்பிடி சுவர். அதில் தடுமாறாமல் நடந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அக்கா...கவனம்க்கா...பாத்து.....இந்த பாலம்மவேற..” அருகில் மொட்டைமாடி தரையில் நின்றிருந்த அவள் தங்கை ஆனந்தி சொல்ல தொடங்க அவ்வளவுதான்

Thendral thendral thendral“ஐயோ...” என்றபடி கைபிடி சுவரிலிருந்து அவசரமாக மொட்டை மாடிக்குள் குதித்தாள் கிருபா.

“ஏய்...எங்க...எங்கடி...” அவசரமாக பதறியடித்து வீட்டிற்குள் இறங்கும் படிகட்டை நோக்கி ஓடினாள்.

“ச்சு...பாலம்ம இப்படி பண்ணிட்டுபோய்ட்டேன்னு சொல்ல வந்தேங்கா...” ஆனந்தி விளக்க

“பல்ல கழட்டிட்டபோறேன் ....பச்சபிள்ள பிறந்தவீட்ல வச்சாளாம் ஒப்பாரி....பாட கட்ட போன இடத்துல செய்தாளாம் கச்சேரினானாம்......எப்ப என்ன பேசனும்னு தெரியாதா...?”

“ஏன்க்கா பட்டிகாட்டு மாம்ஸுக்கு ஏத்த மயில்ஸா மாறிகிட்டு இருக்கிறியோ..? இவ்ளவு லோக்கலா பேசுற.. போற போக்க பார்த்தா பட்டிகாட்டு மச்சானே ஆசை உன் மேல் வச்சேனேன்னு பாடிறுவ போல.....”

“ம்ம்ம்...பைசா டவர் பாக்கபோனா பாதியா பாக்க மாட்டேன்....ஈஃபில் டவர் கிட்டபோன ஏறாம திரும்பமாட்டேன்.. எதையும் முழுசா செய்யாம தூங்க மாட்டேன்....இரு இரு இதுக்கெல்லாம் சேர்த்து அந்த தங்கையா தம்பி ஒரு சிங்கையா பக்கதுல உனக்கு சீக்கிரமா சீட்டு போடுறேன்..”

“போடு போடு சீட்டென்ன சிட்டவுட்டே போடு....நாங்க மிஸ்டர். சிங்கத்த சிங்கப்பூர்காரராக்கி செவ்வாய்கிரகத்துக்கே கூட்டிட்டுபோவோமே...” என்றவள்

சட்டென கிருபாவை கட்டிபிடித்து “உன் கூட இருக்க முடியும்னா நான் சிங்க குகையில கூட குடும்பம் நடத்துவேங்கா...இந்த பாலம்ம பார்த்து வச்சிருக்க மாப்பிள்ள வீட்டுக்கு உன்னை தனியா அனுப்ப பயமா இருக்குக்கா....” அழ தொடங்கினாள்.

“ஏய்...என்ன நீ... “ என தொடங்கிய கிருபாவிற்கும் கண்ணில் நீரேற்றம்.

“ஆங்....இப்படியே பாலம்ம  வார வற சீன் போடுங்க....அப்புறம் பார்கவி அக்கா ஃபோன்ல திட்டி தீர்ப்பாங்க அதையும் கேட்டுகோங்க...” கடைகுட்டி ஜீவனி அதட்ட

“இதோ...”

“சீக்கிரம்கா..” என்று ஒருத்தரை ஒருத்தர் உற்சாக படுத்திக்கொள்ள  மீண்டும் கிருபா மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் ஏறினாள்.

பாவாடை காலை தட்டுமா என காலை விரித்து சோதித்துப் பார்த்தவள் மூச்சை இழுத்துபிடித்துக்கொண்டு 5 அடி தள்ளி இருந்த அடுத்த வீட்டு மொட்டை மாடி கைபிடி சுவரை குறி பார்த்தாள்.

“ஏசுவே ரட்சியும்....ஏசுவே ரட்சியும் ஏசுவே ரட்சியும்” இரு கண்களை இறுக மூடிக்கொண்டு ஜீவனி முனுமுனுக்க,

“அக்கா நான் ஸ்தோத்திரம் சொல்லிட்டு இருக்கப்ப குதிக்கா...” என்றுவிட்டு ஆனந்தி ஸ்தோத்திரம் சொல்ல தொடங்க

“ஜீசஸ்..” என்றபடி தாவினாள் கிருபா.

ஒற்றை கண்ணை திறந்து பார்த்த ஜீவனிக்கு தன் அக்கா அடுத்த வீட்டு மொட்டை மாடியில் பத்திரமாய் நிற்பதை பார்த்தவுடன் தான் உயிர் வந்தது.

“சூப்பர்க்கா....” பறக்கும் ஹைஃபை மானசீகமாக கொடுத்துக் கொண்டனர் சகோதரிகள்.

வ்விரு வீடும் ஒரே காம்பவுண்டிற்குள் தான் இருந்தது. இரண்டும் அவர்களுடையதுதான். ஒன்று அவர்கள் குடி இருப்பது. தரையும் முதல் தளமும் கொண்ட அமைப்புடைய அவ்வீட்டில் முதல் தளத்தின்  ஒருபகுதி இவர்கள் நின்ற மொட்டை மாடி. இவ்வீட்டில் உள்ளிருந்த வரவேற்பறையிலிருந்து மாடிக்கு செல்லும் படிகள். ஆனால் மொட்டை மாடியிலிருந்து வெளியே இறங்கும் படிகள் கிடையாது.

பக்கத்திலிருந்த அந்த வீடு  ...அதை வீடென்று சொல்ல முடியாது இரு அறைகள் கொண்ட தரை தளம். இப்பொழுதைக்கு அவர்களது ஸ்டோர் ரூம்ஸ். அதற்கு மொட்டை மாடியிலிருந்து வெளிப்புறமாக இறங்கும் படிகள் உண்டு.

ஆக தேவகிருபா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதற்காக, தன் வீட்டிலிருந்த  படிகட்டுகள் வழியாக மொட்டை மாடிக்கு வந்து அங்கிருந்து ஸ்டோர்ரூம் மொட்டை மாடிக்கு குதித்து, அதிலிருந்த படிகள் வழியாக தரைக்கு இறங்கி, கேட்டை ஏறிகுதித்து, தெருவிலிறங்கி, தன் தங்கைகளுக்கு கை அசைத்துவிட்டு, வேக வேகமாக அந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தை நேக்கி ஓடினாள்.

இதுக்கு ஏங்க இவ்ளவு கஷ்டபடனும் ஒழுங்கா வீட்டு கதவ திறந்துட்டு போயிருக்கலாமேன்னு நினச்சீங்கன்னா....(நினைக்க மாட்டீங்க....இதுக்குள்ல புரிஞ்சிருக்கும்...ஒருவேளை நினச்சுட்டீங்கன்னா...) அவங்களுக்கு ஒரு சின்ன இன்ஃபர்மேஷன். வீட்டின் கதவை இவர்கள் பாலம்மை அதாவது அப்பாவின் அம்மா வெளிப்புறமாக பூட்டி சென்றிருந்தார்.

“ஏன்ணா இப்படி ஒரு கோலம்...?”

 வேஷ்டி இடுப்பிலிருந்து இறங்காமலிருக்க அதன் மேல் பெல்ட்டை இறுக்கிக் கொண்டிருந்த தேவ் “ம்....நீங்க செய்து வச்சிருக்க வேலைக்கு நான் வேற என்ன செய்ய?...இப்படி போனாதான் பொண்ணு வீட்ல உள்ளவங்களுக்கு என்னை பத்தின எல்லா விஷயத்திலும் சந்தேகம் வரும்....இப்படி ஒரு மாப்பிள்ள கூட கல்யாணம் நடக்காமபோனதே நல்லதுன்னு தோணும்...அத்தன தடவ சொல்லி இருக்கேன் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு...இப்டி எனக்கே தெரியாம பால்ராஜ் மாமா மூலமா கல்யாணமே பேசி முடிச்சிருக்கீங்களே...”

அதுவும் கடைசி நிமிஷத்துல சொன்னா வேற வழி இல்லாம சரின்னு சொல்லிடுவேன்ட்டு இன்னைக்கு வந்து சொல்றீங்க....”.

“அண்ணா அந்த பொண்னு நிலைய யோசிச்சு பாருண்ணா....இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னு நினைச்சுகிட்டு இருக்கும்...இப்ப போய் நிப்பாட்ட போறேன்னுட்டு....”

“இத நீங்க முன்னமே நினச்சிருக்கனும்டா....” கிளம்பி வெளியே வந்தவன் தன் காரை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தே கேட்டை தாண்டி போனான்.

“டேய் ஆனந்த்!!! அண்ணா நடந்து போறான்டா...”

“பஸ்ல போவானா இருக்கும்....அப்பதான் பொண்ணுவீட்டுக்கு நாமவசதி இல்லாதவங்க, பணக்காரங்கன்னு சொன்னதெல்லாம் ஃப்ராடுன்னு தோணும்னு ஏதாவது காரணம் வச்சிருப்பான்...இப்போதைக்கு நாம உடனே கிளம்பி பொண்ணு வீட்டுக்கு போய்...அங்க ஏதாவது சமாளிக்க முடியுதான்னு பார்ப்போம்...அது மட்டும் தான் நமக்கு அண்ணி வாரதுக்கு ஒரே வழி...அப்படி இல்லனாலும்...தப்பு நம்ம பேர்லதன்னு மன்னிப்பாது கேட்டுட்டு வரலாம்...எல்லாரும் அண்ணாவ திட்டுவாங்கடா...”

காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர் ஆனந்தும் அவன் தம்பி ஜீவனும் தென்பாவூரைப் பார்த்து..

ன் ஊரான தென்பாவூரிலிருந்து சில கிலோமீட்டர் உள்ள பாவூர்கோட்டை வந்து சேர்ந்தாள் தேவகிருபா. தெய்வமே சீக்கிரமா திருநெல்வேலிக்கு பஸ் கிடைக்கனுமே....

 ரோட்டை கடந்து எதிர் திசையிலிருந்த பஸ்டாப்பில் போய் நின்றுகொண்டாள்.

அதே நேரம் அழுதபடி ஒரு 12 அல்லது 13 வயது மதிக்க தக்க சிறுவன் அவளை கடந்து ஓடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.