(Reading time: 5 - 9 minutes)

உள்ளொன்று வைத்து - ஜெய்

ம்மா நான் வந்துட்டேன், பாத்திரமெல்லாம் ஒழிச்சு போடறீங்களா”, கொல்லைப்புற கதவுப்பக்கம் இருந்து குரல் கொடுத்தாள் வடிவு.

“வா வடிவு, இன்னைக்கு அய்யாவோட அம்மாவுக்கும், அப்பாவுக்கும் படையல் போடற நாள், அதனால வேலை இன்னும் முடியல.  இப்போத்தான் சமையல் முடிச்சு, கூடம் வீடு முழுக்க கூட்டித் தொடைச்சேன்.  ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு.  பாத்திரமெல்லாம் ஒழிச்சு போடறேன்”, அவரசரமாக வடிவுக்கு பதில் கூறிக்கொண்டே வேலையைப் பார்க்க ஓடினாள் மங்கை.

‘ஐயோ, அம்மா’, என்ற மங்கையின் அலறல் கேட்டு கூடத்திற்கு ஓடி வந்தாள் வடிவு.  அங்கு அப்பொழுதுதான் துடைத்த தண்ணீர் காயாயதால் அதில் வழுக்கி விழுந்து இருந்தாள் மங்கை.

colors“என்னங்கம்மா பார்த்து வரக்கூடாதா.  இப்படி விழுந்துட்டீங்களே”, மங்கையைத் தூக்கி பக்கத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்தாள் வடிவு.

“இல்லை வடிவு, ஏற்கனவே மணி ஆகிடுச்சு.  இன்னும் நான் இருக்கற  வேலை எல்லாம் முடிச்சு  அய்யா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள படையலுக்கு எல்லாம் எடுத்து வைக்கணும். அந்த அவசரம்தான்”, வீங்கிய காலைத் தேய்த்தபடியே கூறினாள் மங்கை,

“என்ன இங்க சத்தம்.  ஏய், நடுக்கூடத்துல நீ என்ன பண்ற.  மொதல்ல வெளில போ”, அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்த கண்ணன் வடிவைப் பார்த்து கத்தினான்.

“இல்லீங்கையா, நான் பின்னாடிதான் இருந்தேன்.  அம்மா விழுந்துட்டாங்க.  அதுதான் தூக்கலாம்ன்னு.....”

வடிவு பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் கை காட்டி நிறுத்தி, “எல்லாம் நாங்க பார்த்துக்கறோம், நீ மொதல்ல  கிளம்பு”, என்று அவளைத்  துரத்தினான் கண்ணன்.

இந்தாள் கிட்ட இப்படி நாய் பொழைப்பு பொழைக்குதே இந்தம்மா என்று மங்கையைப் பற்றி வருந்தியபடியே கிளம்பினாள் வடிவு,

“ஏண்டி, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, யார் யாரை வீட்டுக்குள்ள விடணும்ன்னு இல்லை.  அதுவும் இன்னைக்கு என்ன நாள்.  எத்தனை சுத்த பத்தமா இருக்கணும்.  இவங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விடாதன்னு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.  ஏன் உன்னால வீடு மொழுகி சமையல் செய்ய முடியாதா?”, என்ன நடந்ததென்றே தெரியாமல் பொரிந்து தள்ளினான் கண்ணன்.

“ஐயோ இல்லீங்க.  அவ எனக்கு உதவி செய்ய வரலைங்க.  நான் கீழ விழுந்துட்டதால தூக்கத்தான் வந்தா”, வலியால் முனகியபடியே சொன்னாள் மங்கை.

“ஆமா கீழ விழுந்துட்ட.  என்ன காலா உடைஞ்சு போச்சு.  இல்லை இல்ல.  இப்போப்  பாரு, அவ உள்ள வந்ததால எல்லா சுத்தமும் போச்சு.  இப்படியே காலைப் பார்த்துட்டு உக்காராம, எந்திருச்சு வீட்டை மறுபடியும் தொடைச்சுட்டு படையலுக்கு எல்லாத்தையும் எடுத்து வைய்யி”, கத்தியபடியே சென்றான் கண்ணன்.

‘வடிவு நீ என்னை தூக்காமையே இருந்து இருக்கலாம்.  இப்போப் பாரு ஒண்ணுக்கு ரெண்டா வேலை’, மனதுக்குள் புலம்பியபடியே கணவன் ஏவிய வேலையை செய்யக்  கிளம்பினாள் மங்கை.

“உன்னால பாரு எனக்கு லேட் ஆகிடுச்சு.  இப்போ சாப்பிட நேரம் இல்லை.  அந்த பாயசத்தை மட்டும் கொடு.  நான் மத்தியானம் லஞ்ச் ஹவர்ல வந்து சாப்பிட்டுக்கறேன்”

பாயசத்தைக் குடித்து முடித்து கண்ணன் வேலைக்கு கிளம்பியபின் ஆசுவாச பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள் மங்கை.

“அம்மா இப்போ எப்படி இருக்கு?”. கதவுப் பக்கம் இருந்து குரல் வந்தது.

“ஐயோ வடிவு, இப்போத்தான் அய்யா கிளம்பினார்.  நானே அப்பாடான்னு உக்கார்ந்தேன்.  திரும்பி உன்னைப் பார்த்தாருன்னா அவ்வளவுதான்.  என்னை இன்னைக்குப் பூரா வீடு தொடைக்க விட்டுடுவாரு.  உனக்குப் புண்ணியமாப் போகுது.  மொதல்ல கிளம்பு நீ”

“ஐயே இன்னாமா நீ, படிச்ச புள்ளதானே, அவரு பேசினா நீயும் திருப்பி பேசறது.  நாங்க படிக்காத ஜனங்களே எங்கூட்டுக்காரங்களை கேள்வி கேக்கறோம்.  நீ என்னடான்னா பயந்து சாவற.  சரி சரி பயப்படாதே.  அய்யா தெருமொனை தாண்டினதும்தான் வந்தேன்.  இனிமே சாபாட்டுக்குத்தானே வருவாரு.  கவலைப்படாம இரு.  எல்லா வேலையும் நான் பார்த்துக்கறேன்.  டாக்டராண்ட வர்றியா, நான் இட்டுக்கினு போறேன்”

“வேணாம் வடிவு.  லேசாத்தான் வீங்கி இருக்கு.  தைலம் தேய்ச்சா சரியாப் போய்டும்.  நீ மொதல்ல எனக்கும், உனக்கும் காபி போட்டுக் கொண்டு வா”

“அம்மா, அய்யா உங்கூட்டு கூடத்துக்கு வந்ததுக்கே குதிச்சாரு.  இதுல நான் தினமும் அவரு போனதுக்கப்பறமா உங்க சமையலறை வரைக்கும் வர்றது தெரிஞ்சுது அவ்வளவுதான்”, கலாட்டா செய்தபடியே காபி தயாரித்தாள் வடிவு.

“அடப்போ வடிவு.  இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படித்தான் ஏமாத்தணும். சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது”

“கரிட்டா சொல்லிட்ட நீ”, என்று சிரித்தபடியே காபியை மங்கையிடம் கொடுத்தாள் வடிவு.

ணக்கம் அய்யா”, மாணவர்களின் வணக்கத்துடன் உள்ளே நுழைந்தான் கண்ணன்.

“வணக்கம் மாணவர்களே. இன்றைக்கு நாம் முண்டாசுக் கவிஞன் பாரதியின் கவிதை ஒன்றைப்பற்றி படிக்க போகிறோம்.  எல்லாரும் கவனமா கேளுங்க”

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா,

குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்  பாப்பா’ 

“இதுக்கு என்ன அர்த்தம்ன்னா யாரையும், இவங்க உயர்ந்தவங்க, இவங்க தாழ்வானவங்க அப்படின்னு தரம் பிரிக்கக் கூடாது.  எல்லாரையும் நமக்கு சமமா நேசிச்சு பழகணும்.  கீழ் மட்டத்துல இருக்கறவங்களையும் நம்ம சொந்த சகோதர, சகோதரிகளா நினைச்சு பழகணும்.   சரியா பசங்களா, ஆசிரியர் சொல்றதைக் கேட்டு அப்படியே நடந்தீங்கன்னா வாழ்க்கையில எல்லா உயரங்களையும் அடையலாம்”, என்று கண்ணன் பாரதியாரின் கவிதையைப் படித்து அறிவுரைக் கூற ஆரம்பித்தார்,

கண்ணனைப் போன்றவர்களைப் பார்த்துத்தான், ‘உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’. என்று பெரிவர்கள் சொன்னார்கள் போல இருக்கு.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.