(Reading time: 12 - 24 minutes)

அம்மா ஐ லவ் யு - மது

"ங்ககிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல மிசஸ் நந்திதா . ஐ ஆம் வெரி  டிஸ் அப்பாயின்ட்டட்" தனது சீனியர் மனேஜர்  மீடிங்கில் சொல்ல

"ஐ ஆம் வெரி சாரி சார். இனி இப்படி நடக்காது" என்று மிகவும் கம்மிய குரலில் மன்னிப்பு கேட்டாள் நந்திதா.

"நீங்க ரொம்ப எப்பீஷியன்ட் வீ  நோ. ஆனா நேரத்துக்கு பிராஜக்ட் டெலிவரி செய்யணும் உங்களுக்கு தெரியாதது இல்ல" என்று சீனியர் எக்சிகியுடிவ் அவளை சமாதானம் செய்யும் விதமாய் சொன்னார்.

Mom"ஷ்யூர் சார். ஐ அண்டர்ஸ்டாண்ட்"

"மண்டே மார்னிங் பைனல் ரிபோர்ட் எதிர்ப்பார்க்கிறேன்" என்றார் சீனியர் மனேஜர்.

"டெபினிட்லி சார்" என வெளியேறியவள் நேராக ரெஸ்ட் ரூம் சென்று ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அழுகை அவள் அகராதியில் எப்போதும் இருந்ததில்லை. ஏனெனில் எந்த பிழைக்கும் பழிக்கும் அவள் இடம் கொடுத்ததே இல்லை.

"தப்பு செய்றவங்க, தன் வேலையை ஒழுங்கா செய்யாம டிமிக்கி குடுக்கிறவங்க தான் அது கண்டுபிடிச்சு திட்டினா அழுவாங்க. நாம கரக்ட்டா இருந்தா எவன் என்ன சொன்னாலும் ஏன் பீல் பண்ணி அழணும்" என்று மிடுக்காய் பேசியவள்.

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து," "தி கிரேட் நந்திதா இஸ் கிரைங். ஏன்னா தப்பு என் மேல ஆச்சே" என்று தன்னைப் பரிகாசம் செய்துக் கொண்டாள்.

கடிகாரம் மணி 11 என காட்ட ,"இன்னும் 4 மணி நேரத்தில் எப்படி முடிக்க.. இந்த டாடி வேற .. தனியா டிரைவ் பண்ணிட்டு வரக் கூடாதாம். ஏன் நான் என்ன சின்ன பப்பாவா" என்று தனக்குத் தானே சொல்லி தன் காபினுக்கு விரைந்தாள்.

சம்மர் விடுமுறை காலம் என்பதால் பலர் விடுமுறையில்  இருந்தார்கள். அதனால் இந்த கால தாமதம்.

"அது  தான் ரீசனா. உன் பங்கு எதும் இல்லையா. முன் எல்லாம் வீக்எண்ட் கூட வேலை  செஞ்சு   நல்ல பேர்  வாங்கி இந்த  வயசிலேயே  மனேஜர் ஆன. இப்போ" என அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.

அந்தப் பிராஜக்ட் டீம் லீடர் வேறு கல்யாணம் என்று நீண்ட விடுமுறையில் சென்றதால் இவளது நேரடி மேற்பார்வையில் நடந்தது.

உடனே டீமில் உள்ளவர்களை அழைத்து ஆலோசித்தாள்.

"இன்னிக்கு எவனிங் 6 இல்ல 7 குள்ள முடிச்சிருவோம் நந்திதா" என்றாள் சுதா.

"சாட்டர்டே சண்டே ரெண்டு நாள் இருக்கே. ஈசியா முடிச்சிரலாம்" என்றான் ஷிவா.

"சாட்டர்டே சண்டே இப்போ எல்லாம் எனக்கு சொந்தமில்லையே" மனசுக்குள் நினைத்தவள் அது யாருக்கு என்ற நினைவில் அகம் மகிழ்ந்தாள்.

என்ன ஷக்தி அந்த முகத்திற்குத் தான். அத்தனை டென்ஷன்லையும் புன்னகை பூத்தது அவள் அதரங்களில்.

" ஒகே. ஷிவா அண்ட் சுதா. யு டேக் சார்ஜ். இன்னிக்கு எவனிங் எனக்கு மெயில் பண்ணிடுங்க" என்று சில வழிமுறைகள் சொல்லி விட்டு

"நான் 3.45 பல்லவன் பிடிக்கணும். சோ " என்றாள்

"நோ ப்ராப்  நந்திதா. நாங்க பார்த்துக்கிறோம், நீங்க கிளம்புங்க" என்றனர்.

எப்போதும் தனக்கு கீழ் வேலை செய்யும் எல்லோரிடத்தும் மிக பிரண்ட்லியாக பழகுவாள். சிறப்பாக செய்தால் பாராட்டுவதும் தவறு செய்தால் தாம் தூம் என்று குதிக்காமல் பொறுமையாக எடுத்து சொல்லுவதும் அவள் குணம்.

திறமை பொறுப்புணர்ச்சி காரணமாக மேல் அதிகாரிகளிடமும் நல்ல பெயர் வாங்கினாள். அதனாலேயே தன் சக நிலையில் இருப்போர் பொறாமைக்கு ஆளானாள்.

"டிக்கெட் கன்பார்ம் ஆகலம்மா.. கார்ல வர்றேன்" என அவள் சொன்ன அடுத்த நொடி அவள் தந்தையின் அதட்டல் குரல் கேட்டது.

"நந்துகுட்டி, அன் ரிசர்வ்ட்ல வா. நீ டிரைவ் பண்ணி வந்தா  இப்போவே நியுயார்க்கு கால் போகும்.அங்க  மிட் நைட் ன்னு கூட பார்க்க மாட்டேன் " என மிரட்டினார்.

"அப்படி வர முடிலைனா வராத. அடுத்த வாரம் வந்துக்கலாம்" என்று அப்பா சொன்னதும்

"நைட் வரை வெயிட் பண்ணக் கூட பொறுமை இல்லையே எனக்கு" என மனசுக்குள் நினைத்தவள்

"நான் பல்லவன்லேயே வரேன் டாடி. ஸ்டேஷன் வந்திருங்க" என்று அவசர அவசரமாக எக்மோர் சென்றாள்.

விடுமுறை சமயம் என்பதால் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நிற்க இடம் கிடைத்ததே மேல் என்ற நிலைமை.

கதவருகில் நின்று கொண்டிருந்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள். மனமோ நினைவுகளில்..

"நந்துகுட்டி அம்மாக்கு டாட்டா சொல்லுடா. என் தங்கமல" ரத்னா கெஞ்ச

முறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பத்து வயது நந்திதா.

"டாடி இருக்கேன்.. நாம பார்க் போலாம். ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ன" என்று தாஜா செய்தார் விஜயகுமார்.

"என்னையும் கூட்டிட்டு போ" அதிகாரமாக சொன்னாள் அன்னையிடம்.

"அம்மாக்கு டிரைனிங் டா. அங்க சின்ன பசங்களை எல்லாம் விட மாட்டாங்க" என எப்படியாவது புரிய வைத்து விடும் விதத்தில் கெஞ்ச

"அப்போ நீயும் போகாத" என பிடிவாதம் பிடித்தாள்.

"அம்மா உனக்கு வாட்டர் கலர் வாங்கிட்டு வரேன். வந்ததும் நாம கொடைக்கானல் போலாம் என்ன" லஞ்சங்களுடன் கெஞ்ச

" உனக்கு எம்மேல பிரியமே இல்ல போ" என்று பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"நீ கெளம்பு மா.. நான் பார்த்துக்கிறேன்" கணவன் சொல்ல அரைமனதாய் கிளம்பியவர்  பூமராங் போல் அடுத்த நாளே திரும்ப வந்து விட்டார்.

" தவமிருந்து பெத்த ஒத்த பிள்ளைய விட பிரோமஷனா முக்கியம்" என்று கணவனிடம் கூறிவிட்டு

"நந்துக் குட்டி அம்மா வந்துட்டேன் டா செல்லம்" என மகளை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தார்.

அன்னையைக் கட்டிப் பிடித்து தானும் முத்தம் தந்த மகள்  "வட்டார் கலர் எங்க.. கொடைக்கானல் எப்போ போறோம்" என நினைவாக வைத்துக் கேட்டாள்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தமுடன் பார்த்துக் கொண்டனர்.

அந்த நினைவில் இருந்து கலைந்தவள் விழுப்புரம் ஸ்டேஷன் வந்ததும் ஒரு காபியுடன் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் அன்றைய நினைவுகளின் தாக்கம்...

" பாப்பா. பூஸ்ட் கலக்கி தரவா.. என்ன சாப்பிடற" என்று சுமதி அம்மா கேட்க

"அம்மா வரட்டும். அப்புறம் குடிச்சுக்கிறேன். நீங்க கெளம்புங்க" என்றாள் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த நந்திதா.

"பாவம் அவங்க ரெண்டு பஸ் புடிச்சுள்ள வரணும்.. பங்குனி உத்திரம் கூட்டம் வேற. நான் இருக்கேன். ஒத்தாசையா இருக்கும் அவங்களுக்கு" என்று சுமதி அம்மா அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் ," பாப்பா. டிவி பெட்டிய போட்டு விடேன். தொடர் பார்ப்பேன்ல" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே

"சுமதி அம்மா. நந்து படிக்கிறால்ல. நாங்க யாரும் டிவி பார்க்கிறதில்ல" என ரத்னா சொன்னார் வீட்டுக்குள் நுழைந்தவாறே.

"பாப்பா ஏதும் சாப்பிடல மா" என்று சொன்ன மறு நொடி முகம் கை கால் கழுவி உடனே பூஸ்டும், ரவா கிச்சடியும் செய்து கொண்டு போனார்.

"ஊட்டி விடு" என்று புத்தக்கத்தில் மூழ்கினாள் நந்திதா.

"ஒரு வாய் காபி தண்ணி கூட குடிக்கல. இந்தா மா " என  நீட்டிய சுமதி அம்மாவிடம்

"ரொம்ப தாங்க்ஸ். இயர் எண்டிங் பேங்க்ல லீவு போட முடியல. அவருக்கும் வேலை ஜாஸ்தி இப்போன்னு பார்த்து.. துணைக்கு நீங்க இருந்ததுக்கு ரொம்ப நன்றிம்மா" என்றார் ரத்னா.

அதுக்கென்ன தாயி.. எனக்கென்ன புள்ளையா குட்டியா.. வேலை செய்றவ தானேன்னு பார்க்கமா அன்பா மருவாதையா இருக்கியே" என  சொல்லி விட்டுப் போனார்  சுமதி அம்மா.

கையில் இருந்த காபி ஆறிப் போய் விட்டிருந்தது. அதைக்  குப்பை தொட்டியில் போட்டு விட்டு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என கடிகாரத்தை உருட்டி உருட்டிப் பார்த்தாள் நந்திதா.

ஒரு வழியாக திருச்சி ஸ்டேஷன் வந்தது. தன் தந்தை எங்கிருக்கிறார் என தேடிக் கொண்டிருந்தவள்," நந்திதா" என்ற குரல் கேட்டு சட்டென திரும்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.