(Reading time: 9 - 18 minutes)

பல்லி - விசயநரசிம்மன்

சிங்கம், புலி, யானை, குதிரை, ஆடு, மாடு… இப்படி ஏதாவது என்றால் கூட நம்புவீர்கள், போயும் போயும் ஒரு பல்லிக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதாங்க உண்மை! தொட்டுத் தாலி கட்டின என் பொண்டாட்டி கூட என்னை நம்ப மறுக்குறா!

பிரச்சனை இதுதான்: எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பல்லி எப்பப் பார்த்தாலும் என்னையே நோட்டம் விடுது, நான் செய்யுறதை எல்லாம் ஒளிந்து இருந்து பார்க்குது, நான் பேசுறதை எல்லாம் ஒட்டுக் கேட்குது… இந்தச் சனியனால எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்து, முந்தாநாள் அவள் கோவிச்சுக்கிட்டு அவளோட அம்மா வீட்டுக்கே போய்விட்டாள்! இனிமே பல்லியைப் பற்றிப் பேசமாட்டேன் என்று சத்தியம் செய்து கெஞ்சிக் கொஞ்சி அவளை மறுபடி கூட்டிட்டு வந்திருக்கேன் (என்னதான் பாசம் காதல்னு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நாசமாப் போன பல்லியோட தனியா வீட்ல இருக்க பயந்துட்டுத்தான் அவளை உடனடியா கூட்டிட்டு வந்தேன் – இதை அவகிட்டச் சொல்லிடாதீங்க!)

இந்தப் பல்லி கொஞ்சம் வித்தியாசமா நடக்குது, இது என்னை நோட்டம் விடுதுனு நான் கண்டுபிடிச்சது கிட்டதட்ட ஒரு வாரம் முன்னாடிதான். பழைய மாமரத்தின் பட்டையை உரிச்சு வெச்சது போல நல்லா கன்னங்கரேல் என்று சொரசொரப்பா பார்க்கவே அறுவறுப்பா இருக்கும் இந்தப் பல்லி. இது பல காலமா எங்க வீட்ல இருக்கு என்று என் மனைவி நம்புகிறாள், ஆனால் அது உண்மையில்லை! இதே மாதிரி ஒரு பல்லி எங்க வீட்டில் பல காலமா இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் நிச்சயமா இந்தப் பல்லி அது இல்லை!

Lizardஒரு வாரத்திற்கு முன்னால் நானும் என் மனைவியும் கணினியில் ஒரு வேடிக்கையான ‘சயின்ஸ்-பிக்‌ஷன்’ படம் பார்த்தோம், எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானி தவறுதலாக விண்வெளிக்குப் போய்விடுகிறான், அங்கே இந்த உலகமே ஒரு ஆராய்ச்சிக் கூடம், மனிதர்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரு அதிபுத்திசாலி இனம் இருக்கு என்று அறிகிறான், இறுதியில் அந்த அதிபுத்திசாலி இனம் எலிகள்தான் என்று முடிகிறது படம்.

படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி நானும் அவளும் விவாதித்துக்கொண்டு இருந்தோம். அப்பொழுதுதான் முதன்முறையாக இந்தப் பல்லியின் செயலைக் கவனித்தேன். நாங்கள் இருந்த அறைக்கும் பக்கத்து அறைக்கும் இடையில் இருக்கும் சுவரில் இருந்துகொண்டு, தலையைத் தூக்கி எங்கள் பக்கமாக எட்டிப் பார்த்த நிலையில் இருந்தது அது. அதன் கண்கள் எங்கள் பேச்சைக் கவனமாகக் கேட்பதைப் போலவும், ஆழ்ந்து சிந்திப்பதைப் போலவும் இருந்தது…

“அந்தப் பல்லியைப் பாரேன், நாம பேசுறதைக் கவனிச்சுக் கேக்குறா மாதிரி இருக்குல?” மெல்ல சொன்னேன்,

“யார் கண்டா, எலிக்குப் பதிலா ஒரு வேள பல்லிங்கதான் அதிபுத்திசாலி இனம் போல, நம்மளை வெச்சு ஆராய்ச்சி கீராய்ச்சி பண்ணுதோ என்னவோ!” என் மனைவி உரக்கவே பதில் சொன்னாள்,

“இருக்கலாம்…” மெல்ல இழுத்துச் சொன்னேன், அந்நிலையில் அவள் கூறியது உண்மையிலேயே மிகுந்த அர்த்தமுள்ளதாகத் தோன்றியது எனக்கு!

”யேய்… யேய்! போதும், ரொம்ப யோசிக்காத! கண்ட கண்ட படத்தைலாம் பார்த்தா இப்படித்தான் தோனும்…” நான் சிந்தனையில் மூழ்குவதைக் கவனித்தவள் என் தோளை இலேசாய் உலுக்கினாள், “ச்சூ-னு கையசைச்சா ஓடிடும் அந்தப் பல்லி, அது அதிபுத்திசாலியா?” சிரித்துக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

அப்போதுதான் நான் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது: அந்தப் பல்லி என்னைப் பார்த்துப் புன்னகைத்தது – வில்லத்தனமான ஒரு புன்னகை!

சில நொடிகள் நான் திகைத்தேன். எல்லாம் என் கற்பனைதான் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு எழுந்து அந்தப் பல்லியின் அருகே சென்றேன், அது தலையைத் தாழ்த்திக் கொண்டு அப்பாவியாய் சுவரோடு சுவராய் ஒட்டிக் கிடந்தது.

“ச்ச்சூ” கையை அதை நோக்கி வீசினேன்.

ம்ஹூம், அது அசையவே இல்லை!

“ச்சீ…ப்போ…” இம்முறை கொஞ்சம் வேகமாகவே கையை விசிறினேன், ஆனால் அது அசைவதாக இல்லை, தலையை மட்டும் மெல்லத் தூக்கி என்னை ஒரு பார்வை பார்த்தது.

“நகர மாட்டேங்குது பாரு!” இலேசான எரிச்சலுடன் சமையலறையை நோக்கி உரக்கச் சொன்னேன்.

”இப்ப இந்தப் பல்லிதான் முக்கியமா? போய் வேலையைப் பாரு…”

அந்தப் பல்லியும் என் மனைவியின் பக்கம் தன் தலையைத் திருப்பிப் பார்த்தது, எனக்கு இலேசான பயம் தொற்றிக் கொண்டது, அது மீண்டும் என் பக்கம் தலையைத் திருப்பிய போது சிரிப்பது போலவேதான் இருந்தது!

அன்று முழுவதும் என் சிந்தனைச் சுவரில் அந்தப் பல்லியேதான் ஒட்டிக்கிடந்தது. எனக்கு வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை. செய்யப் பிடிக்கவில்லை. இடையில் ஒருமுறை விக்கிப்பீடியாவில் பல்லியைப் பற்றிப் படிக்க முனைந்தேன், ‘பல்லியோந்திகள்’, ‘Lacertilia’ என்றெல்லாம் வந்த தகவல்களில் மனம் செல்லவில்லை.

”ஜெய்…” மனைவி கவனம் கலைத்தாள், “குப்பையை மட்டும் போய் போட்டுட்டு வந்துடுறியா? குப்பை வண்டிக்காரன் இன்னிக்கு வரல, நாளைக்கும் வரமாட்டான், வீடே நாறும்…”

பல்லிக் கவலைக்குக் குப்பை போடுவது மேல் என்று தோன்றியது. “சரி!” என்று கிளம்பினேன் “நான் அப்படியே ஒரு வாக் போயிட்டு வரேன்…”

தெருவில் இறங்கி சற்றுத் தள்ளியிருந்த குப்பை போடும் இடத்தில் குப்பை பையை வைக்கும் பொழுதுதான் பைக்குள் அந்தப் பல்லி செத்துக் கிடப்பதைக் கவனித்தேன்.

ஆச்சரியம், ஆறுதல் இரண்டும் கலந்து தோன்றியது. அடுத்த நொடியே ‘ஐயோ பாவம்’ என்ற உணர்வும் ஊறியது, ‘சின்ன உயிர், பாவமா செத்துப் போச்சே’ என்று வருந்தினேன். ஒருவித அஞ்சலி போல அதையே பார்த்துக்கொண்டு நிற்கையில்தான் அதைக் கவனித்தேன், பல்லியின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தது…

யாரும் பார்க்கிறார்களா என்று அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அருகில் கிடந்த சிறு குச்சி ஒன்றினால் குப்பைப் பையைக் கிளறி பல்லியின் சடலத்தை வெளிக்கொண்டு வந்து நன்றாகக் கவனித்துப் பார்த்தேன், அதன் கழுத்தில் கடிபட்ட காயம் போல இருந்தது. இரத்தம் உறைந்து அதன் கருத்த உடம்பில் விகாரமாக அப்பியிருந்தது.

நான் வீட்டிற்குள் வந்து கை கழுவும் போது “வாக்கிங் போறதா சொன்ன, போலயா?” என்று மனைவி கேட்டபொழுதுதான் போகவில்லை என்பது புரிந்தது, “ம்ம்…”

பல்லியின் சடலமே என் கண்ணில் காட்சியாய் இருந்தது, இரக்கமும் வியப்பும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தன என் மனத்தில். பல்லி இறந்துவிட்டதை அவளிடம் சொல்லலாம் என்று வாய் திறந்த அதே நொடி ‘த்சு த்சு’ என்று கவுளி கத்தும் சத்தம்… மேலே பார்த்தவன் ‘அதிர்ந்தேன்’ என்றால் அது வெறும் சொல்தான்! விட்டத்திற்கு அருகில் சுவரில் இருந்தபடி என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது… அந்தப் பல்லியேதான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.