(Reading time: 7 - 14 minutes)

 மகிழும் மரம் - ந.கிருபாகரன்

சித்திரை மாத வெயில். எரித்துவிடுவது போல அனல் காற்று. சேது ஒரு மகிழ மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அங்கே அவன்  அமர்ந்து தனக்குத் தானேப் பேசிக்கொண்டிருக்கிறான். இந்த மகிழ மரத்தில் சீதாவின் பெயரை எழுதி, இதயத்தின் படம் வரைந்து வைத்தது தான் அவன் நினைவுக்கு மீண்டும் மீண்டும் வருகிறது. அதைத் தேடிப் பார்க்கிறான், வருடங்கள் பல ஓடியதால் அவை சிதைந்து போயிருக்கும் போலும்.

முதன் முதலில் இந்த மரத்திற்கு அடியில் தான், சீதாவை சேது சந்தித்தான். சந்தித்து 32 வருடங்கள் ஆகியிருக்கும். வருடா வருடம் தங்கள் கல்யாண நாளிற்கு அவர்கள் இங்கே வருவதுண்டு. கல்லூரி காலங்களில் இந்த மகிழ மரத்தின் கீழ் காதலர்கள் அமர்ந்து கொள்வதுண்டு அவர்களின் மீது இம்மரத்தின் பூக்கள் உதிர்ந்தால் அது உண்மை காதலென்று ஒரு வதந்தியும் உண்டு.

சீதாவிற்கும் ஒரு மிகப் பெரிய ஆசை , அவர்கள் இருவரும் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாளேனும் அந்த மரம் அவர்களின் மீது பூக்களை தூவ வேண்டுமென்று ஆனால் இன்று வரை அது மட்டும் நடந்தேயில்லை. என்றேனும் ஒரு நாள் இம்மரம் மலர்களைத் தூவும் என்ற நம்பிக்கை மட்டும் சீதாவிற்கு உண்டு. ஆனால் சேதுவோ ஒவ்வொரு முறை வரும்போதும்  அந்த மரத்தில் சீதாவின் பெயரையும் அந்த இதயத்தையும் தேடுவான், இருக்காது என்று தெரிந்தும்.

magizham"ன்யா, அத இங்க வரஞ்சி எத்தன வருசம் ஆச்சு இன்னும் அதையே தேடுரியே.. புதுசா வர எவனாச்சும் வரைஞ்சுட்டு போட்டும்.. கல்யாணம் ஆயி கொழந்தைங்களாம் ஆச்சு.. அதுங்களுக்கு கல்யாணம் ஆயி பேரப் பசங்களையும் எடுத்தாச்சு ஆனாலும் இன்னும் அந்த பேரையும் இதயத்தையும் தேடுரீறு.. அந்த பேரயாச்சும் ஒழுங்கா எழுதினியா அதையும் சிதானு தான எழுதனீறு"  னு மிகப்பெரும் காதலை உள்ளே வைத்துக் கொண்டு அந்த கிழவி  கடிவது போல கடிந்து கொள்வாள்.

அவள் இப்படி பேசும் போது வயசை மறந்து சேது பலமுறை வெட்கப்படுவதுண்டு. தோல் சுருங்கினா காதலாச்சு கருமமாச்சுனு அவன் முன்னொரு காலத்தில் கொண்டிருந்த எண்ணம் எவ்வளவு பெரிய மூடத்தனம்னு தெள்ளத் தெளிவா சேதுவிற்கு புரிந்தது. முதுமையான காதல் தான் தெய்வீகத்தன்மை உடையதாக இருக்கும் அதற்கு எந்தவிதமான  பீடுகளும் அவசியமற்றவை ஆகின்றன. அவன் அவளோடு வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் உருப்போட்டுக் கொண்டிருக்கிறான். நேரம் ஆவதை உணர்ந்தவன் போல்  மெல்ல எழுந்து கடைவீதி வழியாக நடக்கத் துவங்குகிறான். அங்க ரவி அண்ணண் கடையில, அவ தக்காளி பொருக்கிப் போட்டுத்தான் வாங்குவனு, சொல்ல ரவி அண்ணண் அதலாம் முடியாதுமா அப்டியே அள்ளிதான் போடனம்னு சொல்ல பதிலுக்கு இவ சண்டை புடிச்சதுதான், இன்னும் இவனுக்கு சிரிப்பா இருக்கு.

சேது மெல்ல நடந்து வந்து அவன் தெருவை அடைந்தான். அவன் வீட்டின் முகப்பில் பந்தல் போடப்பட்டிருப்பதும் ஜனக்கூட்டம் குழுமி இருப்பதையும் பார்க்கிறான். வீடெங்கும் பூக்களும் பலகாரங்களும் உள்ளன ஆனால் அவற்றின் மணங்களில் மங்களத்தன்மை அறவே இல்லை.

வீடெங்கும் சில்லிற்ற தட்ப வெப்ப நிலை. யாரோ ஒருவர் "ஏம்பா இன்னும் கடிகாரம் ஓடுது, யாராச்சும் அதோட பேட்டரியை கழட்டுங்கப் பா, கடிகாரம் ஓடலாமா!". ராமு மெல்ல எழுந்து வந்து கடிகாரத்தின் பேட்டரியை  கழட்டிவிட்டு கடிகாரத்தை கவிழ்த்து வைக்கிறான். அடுப்புலாமும் பத்த வைக்க கூடாது அந்த கேஸையும் கழட்டி விடுனு சாந்தி தழுதழுத்த குரலில் சொல்ல, அதையும் ராமு கழட்டி விட்டான். இந்தாங்க அண்ணே, இத வெச்சிக்கங்க.. நீங்களே எல்லா செலவையும் பாத்துக்குங்கனு மாணிக்கத்திடம் ராமு ரூபாவைக் கொடுத்தான். தம்பி யாருக்கும் தகவல் சொல்லாம விட்டு போய்ட கூடாது, யாருக்காக்சும் சொல்னம்னா சொல்லுங்க நான் பயலுகள விட்டு சொல்ல சொல்றேன் என்றார். இல்லணே எல்லாருக்கும் சொல்லியாச்சு. வீட்டுக்கு வந்துட்டு யாராச்சும் சாப்டாம போனா அப்பா அம்மா  அவங்கள 'அடுத்த முற உன் வீட்டுக்கு வந்தா பச்ச தண்ணி கூட என் பல்ல படாது'னு சண்ட பிடிக்காம விட மாட்டாங்க அதனால சொந்தகாரங்களுக்கும் சின்ன பசங்களுக்கும் சாப்பாடு மட்டும் எங்கயாக்சும் சொல்லிடுங்கணேனு கண்களில் நீர் கோர்க்க ஈரக்குரலில் சொன்னான். பக்கத்து வீட்டு கோமலா தட்ல காபி வச்சு கொண்டாந்தா. மகன்களும் மகள்களும் மருமகன்களும் பேரன் பேத்திகளும் சம்மந்திகளும் பெற்ற வீட்டினரும் உற்றார் உறவினர்களும் வந்துவிட்டனர் . தெருவில் பந்தல் போடப்பட்ட்து. வாடகை சேர்களும் போடப்பட்டன. 

You might also like - Unnaiye kai pidippen...

"அம்மா, நீ இட்டது நாலு முட்ட பொறிச்சது மூணு குஞ்சு... அம்மா, நீ இட்டது நாலு முட்ட பொறிச்சது மூணு குஞ்சு...  அந்த மூணு குஞ்சுல.. மூத்த குஞ்சு கற தேடி மூணு மல சுத்தி வந்த, நடு குஞ்சு கற தேடி நாலு மல சுத்தி வந்த, இளைய குஞ்சு கற தேடி ஏழு மல சுத்தி வந்த... நீ பெத்த மக்கா, அவக அழுத கண்ணீரு ஆறா பெருகி ஆணை குளிப்பாட்ட, குளமா பெருகி குதிர குளிப்பாட்ட, ஏறிப் பெருகி எருது குளிப்பாட்ட, பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட... நீ பெத்த மக்கா... அவங்கள இப்ப பாதியில விட்டு நீ பரலோகம் போறியே போறியே போறியே.." னு கிழவிங்க ஒருத்தரை ஒருத்தர் கட்டிகிட்டு ஒப்பாரிப் பாட்டு படிக்க, மகன்களும் மகள்களும் ஓ வென தேம்பி கதறுகின்றனர். மகள்களின் கதறல் கூட்டத்தில் இருந்த எல்லோரயும் உலுக்கியது. என்னதான் பெத்த புல்லைங்க கூடவே இருந்தாலும் அடுத்தவன் வீட்டுக்கு போன பொண்ணுங்களுக்கு பெத்தவங்க மேல எப்பவுமே ஒரு தனி பிரியம் தான். அதை அந்த கதறலே நிரூபித்தது.

சேது மெல்ல வீட்டின்  முற்றத்தில் வந்து நிற்கிறான். பிள்ளைகளின் கதறல் அவன் காதில் விழ அவன் தன்னை அறியாமல் விசும்புகிறான். மெல்ல தாழ்வாரத்தக் கடந்து கூடத்திற்குள் செல்லுகிறான். தன் மகன்களையும் மகள்களையும் பேரக்குழந்தைகளையும் பார்த்து பெருமூச்சு விடுகிறான். சீதாவின் உடல் கூடத்தில் கிடத்தப்பட்டுள்ளது. கூடத்தின் நடுவிலே கிடத்தப்பட்டுள்ள சீதாவையும் அவளின் மந்தாகாசமான முகத்தையும் விழியெடுக்காமல் பார்க்கிறான். அவளின் தலை மாட்டில் ஏற்றப்பட்டுள்ள காமாட்சி விளக்கு தீட்சண்யமாக எரிகிறது.

கூட்டத்துல இருந்த ஒருத்தி இன்னொருத்தியிடம் மிகவும் ஏக்கமான குரலில் "இவ புண்ணியம் பண்ணவ.. பெத்த எல்லாரையும் கற சேத்துடு நிம்மதியா போய்டா, இது செய்லயே அது செய்லயேனு எதையும் மிச்சம் வெக்காம செஞ்சிட்டு போய்டா.. புண்ணியவதி"னு சொல்ல அதை கேட்ட சேதுவின் இதழ்கள் மெல்ல மலர்ந்தன. உள் நோக்கி நகர்கிறான், சேதுவின் படத்திற்கு முன்னால் அவனுக்கு பிடித்த முந்திரி கேக், ஸ்பெசல் மிக்சர், கணபதி கடை போலியெல்லாம் வைக்கபட்டிருக்கின்றன. அவற்றிற்கு முன்னால் சேதுவின் போட்டாவையே பார்த்தபடி சீதா உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். எவ்ளோ முந்திரி கேக் கொடுத்தாலும் அவர் சாப்பிடுவார் என்பதற்காக முந்திரி கேக்கே தனக்கு புடிக்காது என்பாள் அப்பொழுதுதான் அவள் பங்கையும் சேர்த்து சேது சாப்பிடுவான் என்பதற்காக. உனக்குதான்யா மொத்தமும் இந்தாய்யா என்பது போல ஒரு பார்வையால் சேதுவின் போட்டோவையே அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சேது எப்போது வருவான் என்ற கேள்வியைத்தான் அவள் முகம் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தவளாய் திரும்பி பார்க்கிறாள். சேது அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறான்.

"ஏன்யா என்ன மட்டும் விட்டுட்டு போய்ட.. நீ போகும் போதே என்னையும் சேர்த்து கூட்டிட்டு போக வேண்டியதுதானே.. இன்னியோட நீ போய் சரியா ஒரு வருசம் ஆச்சுயா... ஒரு வருசம் என்ன தனியா விட்டுட்டு போக உனக்கு எப்டியா மனசு வந்துச்சி"னு பேசின் அவள் அழுதபடியே அவன் தோளில் சாழ்ந்து கொள்கிறாள்.

"அதான் உன்ன கூட்டிட்டு போக வந்துட்டேன்ல" என் பேசியபடியே அவன் அவளை மெல்ல அணைத்துக் கொண்டு வெளியெ வருகிறான். தன் மகன்களையும் மகள்களையும் பேரக்குழந்தைகளையும் மிகவும் தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒருவரையொருவர் கைகோர்த்த படியே அந்த மகிழ மரத்தை நோக்கி மெல்ல நடக்கிறார்கள். அந்த மரத்தின் அடியில் சீதாவின் தோலில் சாய்ந்தபடியே சேது அமர்ந்து கொண்டிருக்கிறான். அந்த மரத்தில் எவனோ ஒரு கல்லூரி மாணவன் ஒரு இதயத்தை வரைந்து கொண்டிருக்கிறான். அதைப் பார்த்து சீதாவும் சேதுவும் மெல்ல சிரிக்கிறார்கள். சீதா தன் கையை சேதுவின் கழுத்தை சுற்றி போட்டுக் கொள்கிறாள். மேலிருந்து மகிழ மரத்தின் பூக்கள் அவர்களின் மீது உதிர்ந்த வண்ணம் உள்ளது. எத்தனயோ காதலர்களுக்கு வாசஸ்தலமாக இருந்த அந்த மகிழ மரம் இந்த காதலர்களால் இன்று மகிழும் மரமாகிறது.

சமர்ப்பணம்

முதிர்ந்த காலத்தில் தனக்கு முன்னால் சென்ற கணவனையும் அவனோடு வாழ்ந்த காலங்கலையும் நினைத்து அவனிடம் சேர மிகப் பெரும் காதலுடன் காத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் அவர்களின் காதலுக்கும் இச்சிறுகதை சமர்ப்பணம்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.