(Reading time: 11 - 22 minutes)

இனியேனும் புரியுமோ ? - கலைவாணி

“மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்” – பாரதியார்

ரிமளா நான் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டேன், வர்றப்ப குருவ ஒன்னாவதுல சேர்க்குறத்துக்கு ஹெச்.எம்மு சார்ட்ட கேக்குறேன் என்றபடி கிளம்பினான் பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் முருகேசன்.

முருகேசனின் கிராமம் மலையடிவாரத்தில் உள்ள கல்யாணபுரம். இருநூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் நாட்டில் அந்த கிராமத்திற்கு பள்ளி வந்தே ஐந்து ஆண்டுகள் தான் ஆகிறது. தலைமையாசிரியர் கணேசனின் விடாமுயற்சியால் அப்பள்ளியில் நூறு மாணவர்கள் படிக்கின்றனர்.

அந்த பள்ளியின் பியூன், வாட்ச்மேன் எல்லாமே முருகேசன் தான். கணேசன் சார் அவனைப் பொருத்தவரைக்கும் கடவுள் மாதிரிதான். எதுவுமே தெரியாத அந்த கிராமத்துக்கு படிப்பு சொல்லித்தரது மட்டுமல்லாது அரசாங்கத்துல தங்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கு அதை எப்படி பயன்படுத்துவது, நல்லது கெட்டது சொல்லித்தரது எல்லாமே அவருதான். அவர் என்னதான் சொன்னாலும் செஞ்சாலும் சில பழக்கவழக்கங்களை அவரால் மாத்தமுடியல. அது முருகேசனுக்கும் தெரிந்துதான் இருந்தது.

Biharமுருகேசன் மிதிவண்டியை மிதித்து கொண்டே தன் ஐந்து வயது மகன் குருமூர்த்தியை பள்ளியில் சேர்க்க வேண்டும், கணேசன் சார் போல குருவும் பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டும் என்று கனவு கண்டான்.

’என்ன முருகேசா, சார் பள்ளிக்கூடத்து வேலைய பாக்க உனக்கு சைக்கிள் வாங்கி தந்தா நீ கனா கண்டுகிட்டுல போற’ என்றான் எதிரில் வந்த சங்கரன்.

‘இல்ல சங்கரா எம்மவன பள்ளிக்கூடத்துல சேக்கணும் அத நினைச்சுகிட்டு போறேன்’ என்றான். சார் அதெல்லாம் நல்லா சேத்துபாருய்யா என்ற சங்கரனின் குரல் காற்றில் கரைய பள்ளியும் வந்துவிட்டது.

மிதிவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பள்ளியின் முள்படலை திறந்து உள்ளே சென்று இரண்டு வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, அதை விட்டு சற்று தள்ளியிருந்த சமையல் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தான். சற்று நேரத்தில் சமையல் வேலை செய்யும் கோமதியும் வந்தாள்.

‘கோமதியக்கா கிளாஸலாம் கூட்டிடு. நா போய் சமையலுக்கு தண்ணி புடிச்சியாரேன்’ என்று குடத்தை எடுத்துச் சென்றான். ‘கூப்புட்டது என்னவோ சமையல் வேலைக்கு ஆனா கிளாஸ கூட்டுறது, பாத்திரம் கழுவுறதுனு எல்லாமே பாக்கனும்’ என்று அலுத்துக்கொண்டே சென்றாள் கோமதி.

‘என்னக்கா புலம்பிக்கிட்டே போற’ என்று வந்தாள் அவளுடன் வேலை செய்யும் வசந்தி. ‘வாடியம்மா உன்ன தான் தேடுறேன், நா கிளாஸலாம் கூட்டிடுறேன் நீ அந்த காய்கறியெலாம் அரிஞ்சு வை’ என்று துடைப்பத்தை எடுத்து கூட்டத்தொடங்கினாள்.

கோமதி கூட்டி முடிக்கவும் பசங்க ஒவ்வொருத்தரா வருவதற்க்கும் சரியாக இருந்தது. தலைமையாசிரியர் அறையில் நாற்காலிகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த முருகேசனின் பின்னிருந்து ‘என்னப்பா வேலையெல்லாம் முடிச்சாச்சா’ என்ற கணேசன் சாரின் குரல் வந்தது.

‘ஆச்சுங்க சார்’ என்றான்.

சரிப்பா உன் மகன பள்ளிக்கூடத்துல சேத்துடலாம்ல அவனுக்கு அஞ்சு வயசு ஆகியிருக்குமே?

ஆமாங்க சார் நானே உங்ககிட்ட கேக்கனும்னு தாங்க இருந்தேன்.

அவனுக்கு பிறந்த பதிவு வாங்கி வச்சுருக்க இல்ல?

இருக்குங்க சார் பொண்ணுக்கும் வாங்கி வச்சுருக்கேங்க என்றான் ஆர்வத்துடன்.

நல்லதுப்பா எல்லாரும் உன்ன மாதிரியிருந்தா எனக்கும் வேலை சுலபமா இருக்கும். என்ன செய்றது இந்த கிராமத்துல பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புறதே பெருசாயிருக்கே என்று பெருமூச்சு விட்டார் கணேசன்.

குரு விளையாடுனது போதும் இங்க வா, அம்மா உனக்கு புடிச்ச திணைக்கொழுக்கட்டை செஞ்சுருக்கேன் என்று பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அழைத்தாள் பரிமளா.

அம்மா எனக்கு மூணு கொழுக்கட்டை தரியா என்று கண்களில் ஆசையுடன் கேட்ட மகனுக்கு சரியென்று தலையாட்டினாள். உடனே கையை நீட்டி கேட்டவனிடம் ‘விளையாடிட்டு வந்தா கைக்கழுவுனும் தானே’ என்று கைக்கால்களை கழுவிவிட்ட பின்னரே சாப்பிட தந்தாள்.

மீதமிருந்த மூன்று கொழுக்கட்டையை மகளுக்கு ஒன்று கணவனுக்கு இரண்டு என பங்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட மூன்று வயது மகள் செல்வியை கவனிக்க சென்றுவிட்டாள்.

முருகேசா இங்க வாப்பா என்ற கணேசன் சாரின் குரலுக்கு ‘இதோ வந்துட்டேங்க சார்’ என்றவனிடம் ‘பக்கத்து டவுன்க்குப் போய் நம்ம பசங்களுக்கு சில பொருளெல்லாம் வாங்கனும் இதுல என்னென்ன வாங்கனும்னு எழுதியிருக்கேன், நீ நம்ம எப்போதும் வாங்குற கடையிலே வாங்கிட்டு வந்துடுப்பா’ என்று ஒரு பட்டியலை தந்தார்.

பென்சில்,பேனா,ஸ்கேல்,சார்ட் அட்டை,தாள் என நீண்ட அந்த பட்டியலை சட்டையில் மடித்து வைத்துக்கொண்டு மிதிவண்டியை செலுத்தினான் முருகேசன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.