(Reading time: 8 - 16 minutes)

நெஞ்சில்...... ஜல்.. ஜல்...ஜல்....ஜல் - Jay

This is entry #49 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ghost

னந்தன்  இருப்பது நகருக்கு சற்று தள்ளி அமைந்துள்ள குடியிருப்பில் இருக்கும் தனி வீடு.   இங்கு வீட்டுமனை மிகக்குறைவான விலையில் இருந்ததால் இரண்டு கிரௌண்ட் நிலம் வாங்கி வீட்டை கட்டி இருந்தார் ஆனந்தனின் தந்தை.  ஆனந்தன் குடும்பம் பெரியது.  அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இரண்டு அண்ணன்கள் என்று.  எல்லாரும் கூட்டுக்குடும்பமாக வசிப்பதால் வீட்டை சற்று பெரியதாகவே கட்டி இருந்தார் ஆனந்தனின் தந்தை.    ஒரு கிரௌண்டில் மேலும், கீழுமாக ஆறு படுக்கை அறைகள் கொண்ட வீடும், சுற்றி இருக்கும்  இடத்தில் பலவகை மரங்களும், பூச்செடிகளுமாக சினிமாவில் வரும் பணக்கார வீட்டை போலவே இருக்கும்.  ஆனந்தனின் சொந்தத்தில் ஒரு விசேஷத்திற்காக அவனைத்  தவிர அத்தனை பேரும் வெளியூருக்கு  சென்றிருந்தார்கள். 

அவனுக்கு  மறுநாள் கல்லூரியில் தேர்வு இருப்பதால் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான்.  நேரம் நள்ளிரவு 11.30.  படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தண்ணீர் அருந்திவிட்டு படுக்க ஆயத்தமானான் ஆனந்தன்.  அப்பொழுது வெளியில் இலை சருகுகள் அசையும் சத்தம் கேட்க, ஒரு நிமிடம் அதிர்ந்து பின் பூனையோ, எலியோ ஏதோ ஒன்று ஓடி இருக்கும் என்று நினைத்துக்கொண்டு எதற்கும் இருக்கட்டும் என்று ‘முருகா சரணம்’ என்று மூன்று முறை சொல்லி படுக்கையில் சாய்ந்தான்.  அப்பொழுது  பின்பக்கத்து கிணற்றுக்கு அருகில் ஏதோ டொம் என்ற சத்தத்துடன் விழுந்தது.

அலறி அடித்து படுக்கையை விட்டு எழுந்தான்  ஆனந்தன்.  இத்தனை நாட்களாக வீடு முழுவதும் ஆட்களாக இருந்துவிட்டு இப்பொழுது தனியாக இருப்பதே அவனுக்கு பீதியைக் கிளப்பி இருந்தது.  இப்பொழுது திடீர் திடீரென சத்தங்கள் கேட்கவும் ஆனந்தனுக்கு  அல்லு விட்டது.

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்பக்கமிருக்கும் சமயலறைக்கு சென்று அதன் ஜன்னலை சிறிது திறந்து பார்த்தான்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த உருவமும் தெரியவில்லை.  பயம் தெளிந்து இன்னும் சிறிது எட்டி பார்க்க கிணற்று மேடையில் ஒரு பூனை உட்கார்ந்து இருந்தது.

‘ச்சே பூனை எதையோ தட்டி விட்டுடுச்சு போல, இதுக்கு போய் பயந்துட்டியே ஆனந்தா, ஸ்டடி.... ஸ்டடி.  இப்படி உன் பேஸ்மென்ட் வீக்கா இருக்கக்கூடாது’, என்று தலையில் தட்டிக்கொண்டு எதற்கும் இருக்கட்டும் என்று சுவாமி மாடத்தில் இருந்து விபூதியை எடுத்துப் பூசி மறுபடி முருகா சரணம் சொல்லி படுக்கப் போக, இப்பொழுது மாடியிலிருக்கும் அறையில் ஏதோ மேசையை இழுப்பது போன்ற ஒலி கேட்டது.

‘முருகா இது என்ன சோதனை, அப்பா நிலம் வாங்கும்போது ஏதோ பூசை எல்லாம் போட்டாரே, அதையும் மீறி பேய் எல்லாம் வருமா.  எலுமிச்சம்பழ கவுன்டிங்கில்  ஏதானும் மிஸ் பண்ணிட்டாரா’, என்று எண்ணியபடியே மேலே சென்று பார்க்கலாமா, வேண்டாமா என்று இங்கி, பின்கி போட ஆரம்பித்தான்.  எத்தனை முறை போட்டாலும் அதில் மேலே போ என்றே வர, ‘ரொம்ப சோதிக்கற முருகா, இரு வள்ளிய உன்கூட பேச வேண்டாம்ன்னு சொல்றேன்’, என்றபடியே மேலே செல்ல ஆரம்பித்தான்.

மேலே அவனின் அண்ணனின் அறையில் இருந்து சத்தம் கேட்ட மாதிரி இருந்ததால், அதைத் திறக்க, அந்த அறையில் அனைத்துப் பொருட்களும் வைத்தது, வைத்தது போலவே இருந்தது.  மேசையும் அதே இடத்திலேயே இருக்க, ஒரு வேளை இந்த அறை  இல்லையோ   என்று குழம்பிப் போய்  மற்ற அறைகளையும் பரிசோதிக்க, எல்லா அறைகளும் ஒழுங்காக இருந்தது.  தனக்குத்தான் ஏதோ மனப்ராந்தி போல என்று எண்ணி கீழே இறங்க ஆரம்பித்தான். 

அவன் பாதிப்படியில் இறங்கிக் கொண்டிருக்கும்போதே  திடீரென்று சமயலறையில் விளக்கு ஏறிய ஆரம்பித்தது.  உடனே  ஆனந்தன் வீட்டிற்குள் யாரோ இருக்கிறார்கள் என்ற அளவில் உஷாராகி, எதற்கும் இருக்கட்டும் என்று அவன் ரூமிற்கு சென்று அவனின் கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு செல்ல அந்த ரூம் காலியாக இருந்தது.   வெளியில் வந்து பின்பக்க, முன்பக்க வாசலைப் பார்க்க அது பூட்டியபடியே இருந்தது. 

ஆட்கள் இல்லையென்றால், வேறு யார்.... இல்லை...... எதுவாக இருக்கும், ஆனந்தனின் பேஸ்மென்ட் ஆட ஆரம்பித்தது.  அவன் முதன் முதலில்  பார்த்த ‘அதே கண்கள்’ படத்திலிருந்து கடைசியாகப் பார்த்த ‘அரண்மனை 2’ வரை எல்லாப் படமும் மண்டைக்குள் வந்து போயின.  அத்தனை ஹீரோயின்களும் வெள்ளைப் புடவையில் full மேக்கப்பில் வந்து  வேப்பிலையுடன் ஆடினார்கள்.

‘முருகா இன்னைக்கு உன் திருவிளையாடலுக்கு நான்தான் கிடைச்சேனா, நான் வள்ளிக்கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னதால கோச்சுக்கிட்டியா, உனக்குத்தான் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ மாதிரி வள்ளி இல்லைனா தேவயானை இருக்காங்களே, அட்ஜஸ்ட் பண்ணிக்கக்கூடாதா.  உன்னோட சின்சியர் பக்தனை சோதிக்காதப்பா’, என்று  அவன் முருகரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே மாடி ஹாலில் யாரோ திபு திபுவென்று ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.   

ஐயோ மறுபடியுமா, என்ற அலுத்தபடியே கையில் கிரிக்கெட் மட்டையுடன் மீண்டும்  மாடி ஏற ஆரம்பித்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.