(Reading time: 33 - 65 minutes)

முதல் காதல் - வலியா? வழியா? - வசந்தி

This is entry #93 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

maze

ழகான மாலைப் பொழுது... வீட்டின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கன்னிப்பெண்ணைப்போல் ஆரஞ்சு வண்ணச்’சூரியன் மறைந்தும் மறையாத பொன் அந்தி மாலை நேரம்..கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கும் மக்கள்...மணலில் பெயரெழுதிப் பார்த்துப் பரவசப்படும் குமரிகளும் அவர்தம் ஜோடிகளும் என கலகலவென்று இருந்தது சென்னை மெரீனா கடற்கரை.

குட்டிப் பெண் ஒன்று வீடு கட்ட, அவளின் சுட்டித் தம்பி அதைக் கலைக்க என அருகில் ஒரு குடும்பம் விளையாடுவதைப பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான் மதன்..பார்வை மட்டும்தான் அங்கிருந்ததே தவிர, எண்ணம் மதுரையிலிருந்தது. மதன் இங்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டது.. ஆனால் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்ட தகவலைத் தெரிவித்ததோடு சரி..அதுவும் அங்கிருந்து அழைத்துக் கேட்டதால் சொன்னான். இல்லையென்றால்...

ம்ஹ்ம்...பெருமூச்சொன்றை வெளியிட்டவன் தன்னைச் சுற்றி மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான். ஏதாவது மனதில் சுமையாக அழுத்தும்போது, மனதை வெறுமையாக்கி எதைப்பற்றியும் சிந்திக்காமல்  இப்படி வேடிக்கை பார்ப்பது மதனின் வழக்கம்.. அத்தோடு அவன் நண்பன் ஒருவன் வருவதற்காகக் காத்திருந்தான்.

காலையில் விசேஷ வீட்டிற்குக் கிளம்பிச் செல்பவர்கள் போல இருந்த கடற்கரை, இந்த பெருவெள்ளத்திற்குப் பின்னர்,மாலையில் அலுத்துக் களைத்து, அழகு கலைந்து வீடு திரும்பும் நிலையில் இருந்தது போல தோன்றியது மதனுக்கு. வெள்ளம் வந்த போது அவன் இங்கில்லை..

ஒரு புகழ் பெற்ற தனியார் நிறுவனத்தின் விற்பனை மேலாளராகப் பொறுப்பிலிருகிறான் மதன்...மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிதாகத் தெரியும் இந்த வேலையில், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மிக அதிகம்...கூடவே கவனமும் பொறுமையும் மிக மிகத்’தேவை..அவை இரண்டுமே மதனிடத்தில் உண்டு என்பதால் இன்று எல்லோரும் பாராட்டும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். பெரும்பாலும் அவனுக்கு மதுரையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் மேற்பார்வையிடும் பணிதான் அதிகம். மாதம் ஒருமுறை வேறு கிளைகளுக்குச் சென்று பார்வையிட வேண்டும். அப்படிதான் சென்னைக்கு வந்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது. நாளை கிளம்ப வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு முறை வரும்போதும் மனைவி குழந்தைக்காக ஏதாவது ஷாப்பிங் செல்வது மதனின் வழக்கம்..இம்முறை தான் மனம் சரியில்லை..எனவே கடற்கரையில் நண்பனுக்காகக் காத்திருந்தான்.

வேடிக்கைப் பார்க்கையில் தூரத்தில் ஏதோ கூட்டம் அலைமோத, சற்றே எம்பிப் பார்த்தான் மதன்.. ஒன்றும் தெரியவில்லை..அங்குமிங்கும் ஆட்கள் அலைந்தனரே தவிர உள்ளே நடப்பது புரியவில்லை எழுந்து சென்று பார்க்கலாமா என்று யோசிக்கையில் கூட்டம் மெதுவாகப் பிரிந்தது..

உள்ளிருந்து ஒரு யுவதி கையில் மைக்கோடு”ப்ளீஸ்..இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்..ப்ளீஸ்...கொஞ்சம் தள்ளிக்கோங்க” என்று கூறி கூட்டத்தை விலக்கிக் கொண்டு தூரமாகச் சென்று திரும்பி நின்று ராஜ் ரெடியா என்று காமிரா மேனைக் கேட்டவள் பேசத் தொடங்கினாள்..

“ஹாய் நேயர்களே...ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிரைந்த பக்கங்களால் இணைக்கப்பட்டது புத்தகம் தான்..அந்தப் புத்தகத்துல  நம்மளோட உணர்வுகள் என்னும் எழுத்துக்களால் நிரம்பியிருக்கும். சில பக்கங்கள் அன்பால், சில பக்கங்கள் நட்பால், வெகு சில பக்கங்கள் துயர நினைவுகளால் ,பல பக்கங்கள் மகிழ்ச்சியால் இப்படி பல உணர்வுகளால் நிரம்பி இருந்தாலும் ஒரே ஒரு உணர்வு மட்டும் என்னிக்குமே மறக்க முடியாது. அது சந்தோஷமா இருந்தாலும் சரி..துக்கமா இருந்தாலும் சரி..நான் எதைப்பற்றிப் பேசறேன்னு உங்களுக்குப் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்..எஸ்..காதலர் தினத்தை முன்னிட்டு நம்ம ஷோ ல உங்களோட “முதல் காதல்” வழியா?..வலியா? இதைப் பற்றிதான் பேசப்போறோம்..நான் ரெடி ஆகிட்டேன்..நீங்க...என்றதோடு கட் செய்யப்பட்டது.

சுற்றி உள்ளவர்களைப் பார்த்து, சொல்லுங்க பிரெண்ட்ஸ்...உங்க எல்லோருக்குமே காதல் வந்திருக்கும்...அது கொடுத்த உணர்வு எப்படின்னு சொல்றீங்களா? என்று கேட்கத் தொடங்கினாள் அந்தப் பெண்.. சிலர் அவர்கள் வாழ்வில் வந்தக் காதலைச் சொல்லி, நிறைவேறாக் காதல் என்றுமே வலிதான் என்று கூறினார்கள். பேட்டி எடுத்த ஐந்து பேரில் நால்வரின் காதல், தோல்வியையும், ஒருவரின் காதல் வெற்றியும் பெற்றிருந்தது. ஜெயித்தவனைத் தவிர, மற்றவர்கள் “முதல்காதல்” வலிதான் என்று கூறினார்கள்..அப்படிக் கேட்கும் போதே தொலைவில் அமர்ந்திருந்த மதனின் மீது அப்பெண்ணின் பார்வை விழ, அவனை நோக்கி வந்தவள்,”சார், உங்களுக்குக் காதல் அனுபவம் இருக்குதா? எங்களோடு பகிர்ந்துக்கலாமா? என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த மதன், ‘சாரி, நாட் இன்ட்ரெஸ்ட்டேட்”

அவளோ, “இட்ஸ் ஓகே சார்” என்று வேறொருவரிடம் சென்று கேட்கத் தொடங்கினாள்.

“ஹாய் மதன்...சாரிடா..வந்து ரொம்ப நேரமாச்சா? நீ பங்க்சுவல் பரமசிவம் ன்னு எனக்குத் தெரியும்..இந்த ட்ராபிக்குக்கு தெரியல..சாரி மச்சான்” என்றபடியே வந்து அருகில் அமர்ந்தான் வெங்கட்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.